அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும் ஆக்ரோஷ இசை!

 











மெட்டல் மியூசிக் 

நிக்கோல் ஹார்னிங்

104 பக்கங்கள்



ஹெவி மெட்டல் இசை இன்று தமிழ் சினிமாவுக்கும் வந்துவிட்டது. பிராந்திய மொழி சினிமாவுக்கு வருவதற்கு வேண்டுமானால் தாமதமாகி இருக்கலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அந்த இசையை ரசிக்கும் பலர் உலகமெங்கும் உருவாகிவிட்டார்கள். 


 இசைவிழாக்களுக்கு செல்பவர்கள் பிறருக்கு அதைப்பற்றி சொல்வது குறைவு. சொன்னாலும் புரிந்துகொள்ளவேண்டுமே? இங்குள்ள இசைஞானிகளுக்கு ஹெவி மெட்டல் என்பது இரைச்சல் என்பதாகவே மாறாத கருத்துண்டு. கிணற்றுத் தவளைகளுக்கு அகங்காரம் எப்போதுமே அதிகம்தான். 


ஹெவி மெட்டல் இசை எதற்கு உருவானது, அதன் பின்னணி, அதில் பிரபலான இசைக்குழுக்கள், அவர்களின் புகழ், வீழ்ச்சி, பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட விமர்சனங்கள், சமூகம் வேறுபட்ட இசையை எப்படி புரிந்துகொண்டது, உள்வாங்கியது என்பதைப் பற்றி நிக்கோல் ஹார்னிங் விரிவாக விளக்கியுள்ளார். 


சமூக அமைப்பில் உள்ள பிரச்னைகளை எதிர்க்க நினைப்பவர்கள், அதில் பொருந்திபோக முடியாதவர்கள் மெட்டல் இசையை உருவாக்குகிறார்கள். அதைக் கேட்பவர்களும் இப்படியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லையென்றாலும் பரவாயில்லை. தலையை மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டு பாடலை, பாடல் வரிகளை ரசிக்கலாம். தவறில்லை. முன்முடிவுகளோடு இல்லாமல் இருப்பவர்களுக்கு மெட்டல் இசை புதிய அனுபவத்தை வழங்கும். 


மெட்டாலிகா, ஜூடா பிரைஸ்ட், சிலிப்நாட், பிளாக் சபாத் என புகழ்பெற்ற இசைக்குழுக்கள் மெட்டல் இசையில் உண்டு. இவர்கள், வெளியிடும் ஆல்பங்கள் வினைல் வடிவில் அதிகம் விற்கின்றன. இணையத்திலும் வாங்கலாம். பைரசியும் அதிகம் உண்டு. ஆனால் ரசிகர்கள் அப்பாடல்களை எப்படியேனும் கேட்க நினைக்கிறார்கள். கேட்கிறார்கள். அதுதான் முக்கியம். சமூகத்தின் தீமைகளுக்கு எதிரான தன்மை கொண்ட இசை. எனவே, இசைக்கருவிகளை இசைப்பதில், பாடுவதில் நினைத்தே பார்த்திராத ஆக்ரோஷம் உண்டு. இதை சமூகத்தில் உள்ள மேலோட்டமான புத்தி கொண்டவர்கள், இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது என புரிந்துகொண்டனர். இசையை அரசு மூலம் தடை செய்யக்கூட முயன்றிருக்கிறார்கள். ஆனால் அதெல்லாம் பின்னாளில் மாறிவிட்டது. ஆனால் தொடர்ச்சியாக பொய் பிரசாரம் செய்து மெட்டல் இசையை தவறானதாக காட்ட முயன்று வருகின்றனர்.  சதி,துரோகங்களைக் கடந்து மெட்டல் இசை வளர்ந்து வருகிறது. 


நூலில் ஏராளமான இசைக்குழுக்களின் வரலாறு, குழுவில் உள்ளவர்களின் பெயர், அவர்களின் திறமை, வெளியிட்ட ஆல்பங்கள் ஆகியவை விரிவாக பேசப்படுகின்றன. இதற்கும் மேல் அறிய நினைத்தால் நூலில் இறுதிப்பக்கத்தில் நிறைய நூல்கள் உள்ளன. அவற்றைப் படிக்கலாம். முக்கியமான ஆல்பங்களையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அவற்றையும் கேட்கலாம். 


ஹெவி மெட்டல் பாடல்களின் பாடல் வரிகளை படித்துவிட்டு பிறகு அதைக் கேட்பது புரிந்துகொள்ள எளிதாக இருக்கும். இல்லையெனில் யாரோ ஒருவர் குரல்வளை கிழிவது போல அலறுகிறார் என்றே தோன்றும். பாடல் வரிகள், அதன் இலக்கியத் தன்மை, இசையின் புதுமை, தரம், தொடர்ச்சியாக பாடல்களை எப்படி எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் வைத்து மெட்டல் இசைக்குழுக்களை விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள். 


இசைக்குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் மாறுவதில்லை. அப்படியே இருந்தால் அக்குழு அதிக நாட்கள் தாக்குப்பிடிக்கிறது. ஆட்கள் மாறினால் பெரிதாக சோபிப்பதில்லை. இதில் விதிவிலக்குகளும் உண்டு. கலைஞர்கள் போதைக்கு அடிமையாவது உண்டு. ஆனால் மெட்டல் இசைக்கலைஞர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இறப்பது, ஊடகங்களில் வெளிவந்த காரணத்தால்  அந்த இசை வகைமையே தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. தற்கொலையைத் தூண்டுகிறது, வன்முறைக்கு இளைஞர்களை ஆளாக்குகிறது என சர்வாதிகார, கறைபட்ட அரசுகளுக்கு ஆதரவான அடிவருடி அமைப்புகள் பிரசாரத்தில் இறங்கின. 


அதெல்லாம் தாண்டியும் ஹெவி மெட்டல் இசை , இன்றும் வளர்ந்து வருகிறது. எதிர்ப்புகளை தாண்டி சமூக அநீதிகளை சாதியை,மதத்தை, ஊழலை, போரை அனைத்தையும் கேள்வி கேட்டு வருகிறது. 


இந்தியாவில் பிளடிவுட் என்ற ஃபோல்க் மெட்டல் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் சமூக அநீதிக்கு எதிரான பாடல்களை பஞ்சாபி, இந்தி, ஆங்கிலத்தில் எழுதி பாடுகிறார்கள். உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். நம்பிக்கையூட்டும் குழு இது. 


கோமாளிமேடை டீம் 

https://www.amazon.in/Metal-Music-History-Headbangers-Library/dp/1534565264

கருத்துகள்