மனிதர்கள் தங்களை எப்படி வெளியுலகத்தில் வெளிப்படுத்திக்கொள்கிறார்கள்?

 






கல்யாணம் என்றால் உற்சாகமான புன்னகை, சிரிப்பு இருக்கும். ஒருவர் இறந்துவிட்டார், அவரின் ஈமச்சடங்களில் வருத்தம், துயரம் இருக்கும். அங்கு போய் இறந்தவருக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூற முடியாது. இதெல்லாம் ஒருவர் அனுபவப்போக்கில் கற்றுக்கொள்வதுதான். கற்றபிறகு ஆக்சன் சொல்லாமலேயே நடிக்க வேண்டியதுதான். 


பிடிக்காது என்றாலும் கூட வாழ்க்கையில் நிறைய இடங்களில் டோண்ட் கொஷின் தி எமோஷன் என மனதிற்குள்  சொல்லிக்கொண்டு சில நாடக தருணங்களை செய்யவேண்டியிருக்கும். அதை தவிர்க்க முடியாது. சென்னையில் உள்ள ஜவுளிக்கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கென யூனிஃபார்ம் ஆடைகளை அணிந்த பெண்கள், ஆண்கள் இருப்பார்கள். இவர்கள் அணிந்துள்ள ஆடை, நகை, இவர்களை சுற்றியுள்ள பொருட்கள் அனைத்துமே கலை இயக்குநர் தோட்டாதரணி போடும் செட் போலவே இருக்கும். குறையே சொல்ல முடியாது. நட்சத்திர ஹோட்டல்களில் குறிப்பிட்ட பிரபல செஃப் வரும் தினங்களில் இதுபோல வரவேற்பும், மரியாதையும் இருக்கும். எதற்கு இதெல்லாம், இதெல்லாம் உண்மையா என்றால் கிடையாது. ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பணம் இன்னொருவரின் கையில் வரவேண்டும். அதற்காகத்தான் இந்த போலியான பணிவும், புன்னகையும், வரவேற்பும் அளிக்கிறார்கள். 


எர்விங் காஃப்மன்


இவர் கனடாவைச் சேர்ந்த சமூகவியலாளர், எழுத்தாளர். யூதரான இவர் முன்னோர்கள் உக்ரைனிலிருந்து கனடாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள். டொரண்டோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல், சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்து பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலையில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1962ஆம் ஆண்டு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றத் தொடங்கினார். 1969ஆம் ஆண்டு, ஏழு முக்கியமான ஆய்வு நூல்களை பதிப்பித்தார். ஆய்வு வாழ்க்கை நன்றாக சென்றாலும் தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சிக்கலாக மாறியது. எர்விங்கின் மனைவி திடீரென ஒருநாள் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தனது அனுபவத்தை தி இன்சானிட்டி ஆஃப் பிளேஸ் என்ற ஆய்வறிக்கையில் குறிப்பிட்டார். 


1981ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டார்.அடுத்த ஆண்டு, அமெரிக்க சமூகவியல் சங்கத்தின் தலைவரானார். பிறகு சில மாதங்களிலேயே வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக காலமானார். 


முக்கிய படைப்புகள் 


1959 தி பிரசன்டேஷன் ஆஃப் செல்ஃப் இன் எவரிடே லைஃப் 

1961 அசிலமஸ் 

1971 ரிலேஷன்ஸ் இன் பப்ளிக்

1974 ஃபிரேம் அனாலிசிஸ் 



பொதுவாக ஒருவர் வெளியுலகில் தன்னை வெளிக்காட்டிக்கொள்வதும், சொந்த வாழ்க்கையிலும் வேறுவேறு மாதிரி இருப்பார். இதற்கு மிகச்சிலர் விதிவிலக்காக இருப்பார்கள். பிறரிடம் எப்படி இருக்கவேண்டுமென சிலர் அதிக முயற்சி செய்து உடை, பின்னணி, திறன், பொருட்கள் என பலவற்றிலும் கவனம் செலுத்துவார்கள். மேடை முன் ஒருவர் நடந்துகொள்ளும் முறை வேறாகவும், மேடையின் பின்னணியில் ஒருவர் நடந்துகொள்வது வேறாகவும் இருக்கும். வெளிவாழ்க்கை, தனி வாழ்க்கை என இவ்விரண்டைப் பிரித்துப் பார்க்கலாம். வெளியுலக வாழ்க்கைக்கு பார்வையாளர்கள் உண்டு என்பதை மறக்கக்கூடாது. 


எர்விங் 1959ஆம் ஆண்டு, தி பிரசன்டேஷன் ஆஃப் செல்ஃப் இன் எவ்ரிடே லைஃப் என்ற நூலை எழுதினார். இதில் மனிதர்கள் தங்களை எப்படி வெளியுலகில் பிறரது முன்னிலையில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்று விளக்கியிருந்தார். நாடகத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் மையப் பாத்திரங்களுக்கு அதிக வாய்ப்புண்டு. மது விருந்து, அரசு விழா, விருது விழா என எங்கு சென்றாலும் அங்கு நாயகர்களாக சிலரே தெரிவார்கள். அவர்கள் மேடையை எடுத்துக்கொள்வதோடு, பிறருக்கும் நடிக்க வாய்ப்பளிப்பார்கள். நாடகத்தில் அனைத்து நடிகர்களுமே நடித்தாகவேண்டும். அப்போதுதான் நாடகம் ரசிக்கும்படியாக இருக்கும். வாழ்க்கை என்பதே நாடகம்தான் என எர்விங் நம்பினார். தனது ஆய்வு வழியாக கூறியதும் அதைத்தான். 


சைக்காலஜி புக் -டிகே புக்ஸ் 

https://www.cartoonstock.com

கருத்துகள்