சமூக உளவியலின் தந்தை கர்ட் லெவின்!

 







ஒருவரின் குணநலன்களுக்கு அடிப்படையானது என்ன? அவரின் தனிப்பட்ட இயல்பா, அல்லது அவரைச் சுற்றியுள்ள அல்லது அவர் வாழும் சூழலா? இந்த கேள்வி பலருக்கும் இருக்கும். தொடக்கத்தில் சூழல் மட்டும்தான் என சூழலியலாளர்கள் நம்பினர். ஆனால் 1920ஆம் ஆண்டு, கர்ட் லெவின் வெறும் சூழல் மட்டுமல்ல தனிநபரும் கூடத்தான் அவரின் ஆளுமை மாற்றத்திற்கு காரணம் என்று கூறினார். 

இரண்டு எதிரெதிரான விசைகள் மனிதரை அவரது இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல உதவுகிறது என கர்ட் லெவின் கூறினார். இவர் கூறிய கருத்துகள், அன்றைய உளவியல் உலகிற்கு சற்று புரட்சிகரமானவை. 


தன்னைத்தானே மாற்றியமைப்பது கடினமான ஒன்று. ஒருவர் அதுவரை சேமித்து வைத்த கொள்கைகளை தூக்கிப்போட்டுவிட்டு அனைத்தையும் மாற்றியமைத்து இலக்கை நிர்ணயித்து பயணம் செய்வது கடினம். அதுவே அமைப்பு ஒன்றை இதுபோல மாற்றினால் அதில் ஏராளமானவர்களின் பார்வை, அறிவு, தலையீடு என அனைத்துமே இருக்கும். இதையெல்லாம் உள்ளீடாக பெற்று அமைப்பு தன்னை மாற்றிக்கொள்கிறது. அப்படித்தான் காலத்திற்கேற்ப சவால்களை சமாளித்து வெல்ல முயல்கிறது. 

ஒரு அமைப்பை மாற்ற முயலும்போதுதான் அதை முழுமையாக புரிந்துகொள்ளவே முடியும் என்று கர்ட் லெவின் கூறினார். இப்படி மாறுவதற்கான மூன்று செயல்முறைகளை கூறினார். இதற்கு அன்ஃப்ரீசிங் என்று பெயர். அமைப்பிற்கு தேவையான மாற்றங்களை செய்து, பழைமையான நம்பிக்கைகளை தூக்கிப்போட்டு முன்னேறுவது முக்கியம். மாற்றம் என்பது இரண்டாம் நிலை. இந்த நிலையில் பழைமையான மனநிலையில் உள்ளவர்களுக்கு குழப்பம் ஏற்படும். குறிப்பிட்ட நம்பிக்கையுடன் நெடுங்காலம் செயல்பட்டு வந்த காரணத்தால் மறைமுகமாக அழுத்தம் ஒன்று உருவாகும். அடுத்து, ஃப்ரீசிங். இந்தநிலையில் கற்பது, கற்கும் முறையிலுள்ள தடுமாற்றங்கள், கருத்துகளை, கோணங்களை, செயல்பாடுகளை  மறுமுறை கட்டமைப்பது ஆகியவை உண்டு. 


அமைப்பில் மாற்றங்களை கொண்டு வரும்போது கவனமாக அதை செய்யவேண்டும். இதன்படி, மாற்றங்களைப் பற்றி முன்னமே கூறி பணியாளர்களை அதற்கு மெல்ல மாற்றவேண்டும். முறையாக தகவல்தொடர்பு கொண்டு கூறாதபோது, பழைய நம்பிக்கையில் இருக்கும் பணியாளர்களை நினைத்த இலக்கை நோக்கி நகர்த்துவது கடினம். பொதுவாக ஒருவர் நம்பிக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளை உடைத்து வேறு ஒரு பாதையை நோக்கி திருப்பது கடினமான செயல்முறைதான். ஆனால் அதை செய்யமுடியாது என்று கூறமுடியாது. இதற்கான நேரடியான உதாரணம் ஒன்று, அமெரிக்காவில் இரண்டாவது உலகப்போரின்போது, உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே, பண்ணை விலங்குகளின் சிறுநீரகம், கல்லீரல், இதயம் ஆகியவற்றை மக்களை உணவாக சமைத்து சாப்பிடவைக்க அரசு முயற்சி எடுத்தது. இதில் கர்ட்அழைக்கப்பட்டு, மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டார். 


கர்ட் தனது கொள்கையை நேரடியாக செயல்படுகிறதா என்று பார்க்க இந்த சோதனையைப் பயன்படுத்திக்கொண்டார். முதலில் நேரடியாக அரசுக்கு ஏற்பட்ட உணவுத்தட்டுப்பாடு பற்றியும், விலங்குகளின் உடல் உறுப்புகளில் உள்ள புரத சத்து பற்றியும் பேசினார். ஆனால் பெண்கள் அதை ஏற்கவில்லை. சமைக்கவும் முடியாது என்று கூறிவிட்டனர். எனவே அணுகுமுறையை மாற்றி இறைச்சி உணவின் பெருமை, அதன் பயன்கள் பற்றி பேசினார். இதில், இருதரப்பு உரையாடலுக்கு ஏற்றபடி பெண்களின் கருத்துகளை, அவர்களின் தரப்பை முழுமையாக கர்ட் கேட்டார். இதுவே பிரச்னையை பாதி தீர்த்துவிட்டது. பெண்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டு மெல்ல மனம் மாறி இறைச்சியை சமைத்து சாப்பிடத் தொடங்கினர். 


இதே காலகட்டத்தில் ஆண்கள் போருக்கு சென்றதால் உள்நாட்டில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அதைத் தீர்க்க பெண்களை வேலைக்கு அழைக்கத் தொடங்கினர். பெண்கள், உடை உடுத்துவது, புதிய திறன்களை கற்பது என தங்களை மாற்றிக்கொள்ளத் தொடங்கினர். முதலில் உணவு விஷயத்தைப் பார்ப்போம். குறிப்பிட்ட உணவை தேர்ந்தெடுத்து சமைக்கிறார்கள். அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆரோக்கியமாக வளருகிறார்கள். இந்த வரைக்கும் சரிதான். ஆனால் இந்த உணவு குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்தினால், அல்லது வேறு ஏதாவது விமர்சனங்கள் வந்தால் பெண்கள் அந்த உணவை ஏற்றுக்கொள்வது கடினம். குடும்பத்திற்கென அவர்கள் வேறு உணவுப்பொருட்களை தேடியிருப்பார்கள். சரியோ, தவறோ  செய்து பார்ப்போம் என செய்துதான் இறைச்சியை தொடக்கத்தில் உண்டார்கள். 


சமூக உளவியலின் தந்தை என கர்ட் லெவின் அழைக்கப்படுகிறார். பெருமையோடு புகழப்படுகிறார். இவர் சமூக மாற்றம், நிறுவன மாற்றம் ஆகியவற்றை எப்படி செய்வது என தனது சோதனைகள் மூலம் நிரூபித்தவர். இன்றும் இவரது கொள்கைகளை உலகம் முழுக்க பின்தொடர்கிறார்கள். பயன்படுத்தி பயன் பெற்று வருகிறார்கள். 

wikipedia

psychology -dk books





  




கருத்துகள்