மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!
சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.
இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.
இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர். போராட்டம் நடத்துவது மக்களின் உரிமை. அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால், அவர்களை சுட்டுக்கொல்வது என்பது எல்லை மீறிய செயல். இந்த சம்பவம் நடந்தபோது, அங்குள்ள நகர மக்கள் தேசிய காவலர் படையை புகழ்ந்து மாணவர்களை இகழ்ந்து பேசத் தொடங்கினர். படுகொலை செய்யப்பட்டது மாணவர்கள். அதை செய்தது தேசிய காவலர் ஒருவர். இந்த செயலை எப்படி நியாயப்படுத்துவது? இறந்துபோன மாணவர்களின் குணநலன்களை இகழ்ந்து, அதை குறைசொல்லி, களங்கப்படுத்த தொடங்கினர். அதாவது அவர்கள் கொல்லப்பட்டது சரிதான். கொல்லப்பட வேண்டியவர்கள்தான். கொன்றது குற்றமில்லை என்று ஏராளமான கருத்துகள் கூறப்பட்டன. நாளிதழில் எழுதப்பட்டன. டிவி சேனல்களில் பேசப்பட்டன.
இப்படி கூறியதால் அக்கருத்துகளை கூறியவர்கள் மோசமான மனநிலை கொண்டவர்கள் என்ற முடிவுக்கு வரவேண்டியதில்லை. அவர்களை சூழ்ந்துள்ள சூழலுக்கு எதிராக ஆதரவாக அல்லது மறுத்து செயல்படுகிறார்கள். இதை காக்னிட்டிவ் டிசோசனன்ஸ் என்று ஆரோன்சன் குறிப்பிட்டார். இருவர் உரையாடும்போது முரணான கருத்துகளை, நம்பிக்கைகளை கூறுகிறார்கள். அப்போது அங்கு ஒரு இறுக்கமான மகிழ்ச்சியற்ற மனநிலை உருவாகும். இதை சீராக்க மக்கள் தங்கள் கருத்துகளை நம்பிக்கைகளை செயல்களை மாற்றிக்கொள்கிறார்கள். இப்படித்தான் தேசிய காவல்படை நடத்திய படுகொலையை, அநீதியை ஏற்றுக்கொண்டு அதை நியாயப்படுத்த தொடங்கினர். நகரமக்கள் தேசிய காவல் படை என்பது நன்மை செய்யக்கூடியது என நம்ப நினைத்தனர். எனவே, படையால் கொல்லப்பட்டவர்கள் தவறானவர்கள், கொல்லப்பட தகுதியானவர்கள் என்று பேசத் தொடங்கினர். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலையானது தவறானது. அநீதியான ஒன்றுதான். ஆனால் இந்த அதிர்ச்சிகரமான சூழலைக் கடந்துவர மக்களுக்கு ஆதரவான, எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியுள்ளது. நடந்த சம்பவத்தை மாற்ற முடியாது. ஆனால் அதைப்பற்றிய கருத்தை மாற்றிக்கொள்வது எளிதானதுதானே?
மக்கள் எவருமே இத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில் இப்படி செயல்பட அதிக வாய்ப்புள்ளது என்று ஆரோன்சன் கூறினார். மக்கள் எதற்காக அப்படி நடந்துகொள்கிறார்கள், பேசினார்கள் என்பதை புரிந்துகொண்டால் அங்குள்ள சமூக சூழ்நிலையை உள்வாங்குவது எளிது. நாட்டில் போர் நடக்கும் சூழ்நிலைகளில், சமூக முன்முடிவுகளையொட்டி இதுபோல சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
எலியட் ஆரோன்சன்
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை இருக்கும்போது மசாசூசெட்ஸ் நகரில் பிறந்தவர், ஆரோன்சன். பிராண்டெய்ஸ் பல்கலையில் உதவித்தொகை பெற்று படித்தார். வெஸ்லியன் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முனைவர் படிப்பை முடித்தார். ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட் ஆகிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தான் செய்த ஆராய்ச்சி மூலம் கிடைத்த அறிவை வைத்து சமூகத்தில் உருவாகியுள்ள அல்லது ஏற்படும் முன்முடிவுகளை மாற்றுவதற்கு முயன்றார். வில்லியம் ஜேம்ஸ் விருது, கார்டன் ஆல்போர்ட் விருது ஆகிய விருதுகளை தனது ஆராய்ச்சிக்காக பெற்றார். 20ஆம் நூற்றாண்டின் செல்வாக்கான மனிதர்கள் 100 என்ற பட்டியலில் (ரெவ்யூ ஆஃப் ஜெனரல் சைக்காலஜி)இடம்பிடித்த பெருமைக்குரியவர் ஆரோன்சன்.
எழுத்து, கற்பித்தல், ஆராய்ச்சி என மூன்று வகையிலும் அமெரிக்க உளவியல் சங்கம் வழங்கும் விருதுகளை வென்ற உளவியலாளர் எலியட் ஆரோன்சன் ஒருவரே.
முக்கிய படைப்புகள்
1972 தி சோசியல் அனிமல்
1978 தி ஜிக்சா கிளாஸ்ரூம்
2007 மிஸ்டேக்ஸ் வேர் மேட்
டிகேபுக்ஸ் - சைக்காலஜி புக்
கருத்துகள்
கருத்துரையிடுக