கத்தார்: கைவிடப்பட்ட தேசம்! - விக்டர் காமெஸி



கத்தார்: கைவிடப்பட்ட தேசம்! - விக்டர் காமெஸி

கத்தாரின் மனித உரிமைகள் அலுவலகத்தின் ஹாலில் கூட்டம் அலைமோதுகிறது. அனைவரின் கைகளிலும் உதவி கோரி அரசின் கேள்விகளுக்கு சந்தேகங்களுக்கு பதில் சொல்லும் ஆவணங்கள் இருந்தன. சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்பு மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அனைத்தும் கத்தாரை கைவிட்டுவிட்டதன் நிலைமை இன்று இதுதான். எதற்காக இந்த தண்டனை?

கத்தார் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவியும், ஆதரவும் தந்ததுதான் காரணம் என ஆதரவை விலக்கிக்கொண்ட நாடுகள் கூறிவருகின்றன. பல்வேறு அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கத்தாரில் பணிபுரிந்து வருவதால், அரபு நாடுகளின் இந்த திடீர் தடை அவர்களை பதற்றத்துக்குள்ளாக்கியதில் வியப்பென்ன? "தடை அறிவிக்கப்பட்ட இந்த ஒருவாரத்தில் மட்டும் 700 நபர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றிருக்கிறோம். இப்போது இரவுகளிலும் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர்" என்கிறார் அலுவலக அதிகாரியொருவர்.

பஹ்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் அனைத்தும் கத்தாரில் பணிபுரியும் தங்கள் நாட்டு குடிமகன்களை திரும்ப அழைக்கத் தொடங்கியுள்ளது பிரச்னையின் தீவிரத்துக்கு சாட்சி. "நான் என் வாழ்வின் பெரும்பகுதிகளை கத்தார் நாட்டில் விளையாட்டு சேனலில்தான் செலவழித்துள்ளேன். இப்போது சேனல் நிர்வாகம், எங்களை பணிவிலக சொல்லிவிட்டனர். எங்கள் நாடும் எங்களை திரும்ப அழைக்கிறது.என் மனைவி கர்ப்பிணியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் நான் என்ன செய்வது? பஹ்ரைன் திரும்பினாலும் அங்கு நாங்கள் வாழ்வதற்கான வேலைவாய்ப்பை இனிமேல்தான் தேடவேண்டும்" என விரக்தியான குரலில் பேசுகிறார் கத்தாரிலுள்ள விளையாட்டு டிவி சேனல் பணியாளரான ஃபவாஸ் அப்துல்லா.  

அரபு நாடுகளைச் சேர்ந்த கத்தாரில் பணிபுரிபவர்கள், கத்தாரிலிருந்து அரபு நாடுகளில் சொத்துக்களை வாங்கியவர்கள், சொந்தங்களை அரபு நாடுகளில் கொண்டிருப்பவர்கள் என அனைவருமே இந்த திடீர் தடையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கல்வியும் பாதிக்கப்பட்டிருப்பதுதான் இதில் உச்சசோகம். அரபு நாடுகளில் 40 ஆயிரம் டாலர்கள் கட்டி படித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு இது தேர்வுக்காலம். ஆனால் கத்தார் மக்களுக்கு வெளியேற விதிக்கப்பட்ட காலம் 14 நாட்கள் என்பதால் தேர்வைக் கூட எழுத முடியாமல் நாடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. துருக்கி, இரான் ஆகிய நாடுகள் கத்தாருக்கு காய்கறிகள், யோகர்ட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளது சற்றே ஆசுவாசம் தரும் செயல்பாடு.

"நாங்கள் இந்த திடீர் தடை குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளோடு பேசிவருகிறோம். இந்த மூர்க்கமான தடையால் குடும்பங்கள் பலவும் சிதறிப்போய் பதற்றத்தில் உறைந்து போயுள்ளனர். அரபுநாடுகளின் தடை, கத்தாரின் சுதந்திர வெளியுறவுக்கொள்கையை அழிக்கும் விதமான தாக்குதல்" என்கிறார் கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் கத்தார் நாட்டிலிருந்து இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 0.3%. மத்திய கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியவர்களில் கத்தார் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை என்பது வெளியுறவுத்துறையின் ஒப்புதல் வாக்குமூலம். கத்தாரின் தலைநகரான டோகாவில் செயல்பட்டுவரும் புகழ்பெற்ற டிவி சேனலான அல்ஜஸீராவும் பல்வேறு அரசியல் அழுத்தங்களால் மூடப்பட்டுள்ளது. ஆனால் இதில் கத்தார் அரசு, "எங்கள் நாடு எந்தவித தீவிரவாத அமைப்புகளுக்கும் உதவில்லை என்பதே உண்மை.இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு" என முடித்துக்கொண்டுவிட்டது. "பல ஆண்டுகள் ஆய்வில் கத்தார் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவது தெரிய வந்துள்ளது. இது குறித்து பேசலாம் என கத்தார் தற்போது கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என கூறுகிறார் ரஷ்யாவிற்கான அரபு நாட்டுத்தூதர் ஓமர் சைஃப் கோபாஸ். உலக நாடுகளுக்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் வளமான நாடான கத்தாரை திட்டமிட்டு தனிமைப்படுத்துவது அந்நாட்டில் அமெரிக்காவின் ராணுவத்தளத்தை அமைக்கும் திட்டத்துக்காகத்தான் என்றும் கிசுகிசுக்கள் கொடி கட்டி பறக்கின்றன. இந்த ஆதிக்கப் போட்டியில் நசுங்குவது என்னமோ ஏதுமறியாத மக்களின் வாழ்வுதான்.

நன்றி: முத்தாரம் வார இதழ்