உலகின் ரகசிய இனக்குழுக்கள்! - ச.அன்பரசு



உலகின் ரகசிய இனக்குழுக்கள்! - .அன்பரசு


டிவி, ரேடியோ, இன்டர்நெட்டில் என இல்லுமினாட்டி, ப்ரீமேசன்ஸ், ஸ்கல் அண்ட் போன்ஸ், பில்டர்பெர்க் ஆகிய ரகசிய குழுக்களை அறிந்திருப்பீர்கள். கீழே நீங்கள் காணப்போவதும் அதுபோல ரகசிய இனக்குழுக்களின் வரிசைதான்.

எக்பே
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இனக்குழு இன்றும் இயங்கி வருகிறது. எக்பே இனக்குழுவின் சடங்குகளின் தலைமை தாங்கி நடத்துவது கண்ணுக்கு தெரியாத வனத்திலுள்ள ஒரு சக்தி என்பது இவர்கள் நம்பிக்கை. அரசியல், சட்டம் ஆகியவற்றை தமது ஏரியாக்களில் கறாராக கடைபிடிக்கும் கூட்டம் இது. தங்களுடைய கடமையை செய்யும்போது முகமூடி மனிதர்களாகுபவர்களை அடையாளம் அறிந்த மக்கள், இவர்கள் அளிக்கும் தண்டனைக்கு பயந்து கப்சிப் ஆகிறார்கள். நைஜீரியா, கேமரூன் ஆகிய பகுதிகளில் வாழும் இந்த ஆண்கள் குழுவில் முதல் கிரேட், இரண்டாம் கிரேட் உண்டு. இரண்டு கிரேடில் இடம்பிடிக்கவும் மேக்சிமம் கரன்சியை கொட்டிக்கொடுக்க வேண்டும். முதல் கிரேடு எக்பே மனிதர்களான பிறகு, இனக்குழுவின் பொருளாதாரத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு. அட்லாண்டிக் கடல் தாண்டி வணிகம் செய்து வந்த சமுதாயம் இது.




செக்ட்டே ரூஜ் இனக்குழு!

ஹைதியில் வாழ்ந்து வந்த மனித இறைச்சி தின்னும் கொள்ளைக்கார இனக்குழு சமுதாயம் இது. 1938 ஆம் ஆண்டு வெளியான டெல் மை ஹார்ஸ் நாவலில் இக்குழுவைப்பற்றி விவரித்து எழுத்தாளர் ஸோரா ஹர்ஸ்டன், இவர்களது ஆன்மிக, கலாசார சடங்குகள் ஸோம்பிகளை நம்பும் வூடூ சமூகத்தினரையே ஒத்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த சமூகத்தினர் இறந்து போனவர்களின் உடலை சூனியக்காரர்கள் எடுத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதை நம்புகின்றனர். மனிதர்களையும் சூழலையும் ஆராயும் எத்னோபயாலஜி நிபுணரான வாட் டேவிஸ், விஷமருந்தியவர்களை இறந்தவர்கள் என தவறாக புரிந்து கொண்டு அவர்களை அடக்கம் செய்ய முயற்சிக்கும்போது அவர்கள் எழுந்திருக்க முயற்சித்திருப்பார்கள். அதனால் ஸோம்பி நம்பிக்கை வந்திருக்கலாம் என்கிறார். கொடூரமான தோற்றத்தில் செக்ட்டே ரூஜ் இனக்குழுவினர், மனிதர்களோடு கொடூரமான சடங்குகளை அரங்கேற்றுவதை ஸோராவின் எழுத்தில் படிக்கும்போதே அருவியாய் வேர்க்கிறது. எப்படி இந்த இனக்குழுவினரின் கலாசாரம் இன்றுவரை பிழைத்திருக்க முடியும்?

துலே இனக்குழு
1918  ஆம் ஆண்டு ஜெர்மனியில் தோன்றிய  ப்யூர் ஆரியர்களை மட்டுமே வளர்த்தெடுக்கும் இனக்குழு இது. கற்பனையாக இவர்களது நாடு வட துருவத்தினருகிலுள்ள அல்டிமா துலே, அதன் தலைநகர் ஹைபர்போரியா. நல்ல சீதோஷ்ண நிலை கொண்ட முப்போகம் விளையும் பூமி. யூதர்களுக்கு எதிரான இனவெறி அரசியல் அமைப்பான இவ்வமைப்பு மியூனிச் அப்சர்வர் என்று பத்திரிகையே நடத்தியது. பின்னாளில் இதன் பெயர் பீப்பிள்ஸ் அப்சர்வர் என்று பெயர்மாற்றப்பட்டு நாஸியினரின் முன்னணி நாளிதழானது. இதில் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரும் பங்கு பெற்றிருந்தார் என்றொரு வதந்தியும் உண்டு. 1930 ஆண்டுக்கு முன்பாக, ரகசிய இயக்கங்களுக்கு எதிரான சட்டம் மற்றும் நாஸி அடக்குமுறைகளால் இந்த ரகசிய சமுதாயம் மெல்ல காணாமல் போனது.

சிறுத்தை இனக்குழு

1900 இல் உருவான மனித இறைச்சி ருசிக்கும், சடங்குகளில் மனிதர்களை பலிகொடுக்கும் திகில் இனக்குழு நைஜீரியா, சியரா லியோன், ஐவரிகோஸ்ட் ஆகிய இடங்களில் வாழ்ந்தனர். சிறுத்தையின் தோலை மேலே போர்த்திக்கொண்டு தன் நகங்கள், பற்களைக்கொண்டு கோணங்கித்தனமாக தீவிரமாக மனிதர்களை அட்டாக் செய்து கொல்வது இவர்களின் ஸ்டைல். இறந்த மனிதர்களின் ரத்தத்தையும், இறைச்சியையும் மருந்துபோலாக்கி உண்பதன் மூலம் தமக்கு அயர்ன்மேன் போல எனர்ஜி கிடைக்கும் என்பது இவர்களது நம்பிக்கை. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களின்போது ஆக்டிவாக செயல்பட்டு எக்கச்சக்க மக்களையும் ஓவர்டைம் பார்த்து கொன்றதால் அரசு இவர்களை கவனிக்க தொடங்கியது. ஆனாலும் மக்கள் இவர்களின் மூர்க்கமான சிறுத்தைத்தோல் தாக்குதலுக்கு பயந்து வாயே திறக்கவில்லை. ஒரு சிறுத்தைப்போராளி போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டதும், பிற மனிதர்களைப் பற்றிய தகவல்களை மக்கள் மனப்பாடமாக போலீசிடம் ஒப்பித்துவிட்டனர். அப்புறம் என்ன? குஷியாக களமாடிய போலீசாரினால் அனைத்து உறுப்பினர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் இன்றும் சிறுத்தை சமூகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என செய்தி பலரையும் தூக்கத்தில் தொந்தரவு செய்கிறது.

பசுங்கன்றுத்தலை இனக்குழு


இங்கிலாந்தின் சார்லஸ் மன்னருக்கு எதிரான உறுப்பினர்களைக் கொண்டதே பசுங்கன்றுத்தலை இனக்குழு. மன்னர் சார்லஸ் மதம் மாறி திருமணம் செய்ததற்காக ஜனவரி 30, 1649 அன்று தூக்கிலிடப்பட்டார். அவர் மரணித்த நாளன்றே பசுங்கன்றுத்தலை அமைப்பின் ஆண்டுக்கூட்டம் விமரிசையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்டிடங்களில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மன்னரை எவ்வளவு கேவலப்படுத்தி சிரித்துவிட்டு விருந்து சாப்பிட்டு வெற்றிலை போட்டு கிளம்புவார்கள். Eikon Basilike  என்ற புத்தகத்தை எரித்து அரசருக்கு கொடுத்த மரணதண்டனையை வாழ்த்தி பசுங்கன்றின் மண்டையோட்டில் வைன் ஊற்றி, பக்குவப்படுத்தப்பட்ட மீனை சாப்பிடுவது இவர்கள் உணவு ஸ்டைல். இங்கிலாந்தின் முந்தைய சர்வாதிகாரத்தை நினைவூட்டும் விருந்து இது. தற்போது இவ்வமைப்பு இயங்குவதில்லை. 1735 ஆம் ஆண்டு மறைந்துபோன அமைப்பு பின்னர் மறைவாக இயங்கி வந்தது.

நன்றி: முத்தாரம் வார இதழ்

பிரபலமான இடுகைகள்