பசுமை பேச்சாளர்கள் -10 ஜேம்ஸ் ஹான்ஸன் ச.அன்பரசு



பசுமை பேச்சாளர்கள் -10
ஜேம்ஸ் ஹான்ஸன்
.அன்பரசு

அமெரிக்காவின் டெனிசன் நகரில்(ஐயோவா) இவான் ஹான்சன், கிளாடிஸ்ரே தம்பதிகளுக்கு மகனாக பிறந்த ஜேம்ஸ் ஹான்சன், நாசா விஞ்ஞானியும், சூழலியல் மாறுபாடுகளைக் குறித்து விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வரும் முக்கியமான செயல்பாட்டாளர்.  தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சூழல் அறிவியல் துறையில் பேராசிரியராகவும், நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுக் கழகத்திலும் பணியாற்றி வருகிறார்.

 1963-1965 காலகட்டத்தில் ஐயோவா பல்கலையில் வானியல் மற்றும் இயற்பியல் பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்ற ஹான்சன், நாசாவில் பேரார்வத்தோடு இன்டர்ன்ஷிப் செய்துகொண்டிருந்தார். தன் படிப்பு முடிந்ததும் பூமியின் இயல்புத் தன்மையை எரிபொருள் பயன்பாடு மாற்றுவதை தன் ஆய்வுகளின் வழியே கண்டறிந்தார்.  

1967 ஆம் ஆண்டிலிருந்து வானியல் ஆய்வுகளை செய்துவந்த கோடார்ட் பல்கலையில் சின்சியராக பணிபுரியத்தொடங்கி, பூமியின் சுற்றுச்சூழல் மாறுபாடுகளை கண்காணிப்பதற்கான அமைப்புகளை உருவாக்கிய இவர் எழுதிய 'Stroms of My Grandchildren' (2009) என்ற புத்தகம் சூழலியல் வரிசையில் இவரது முதல் நூலும் முக்கியமானதுமாகும். சூழல் குறித்து 2012 ஆம் ஆண்டு TED மேடையில் உலகம் கவனிக்கத்தக்க அளவில் சொற்பொழிவும் ஆற்றியிருக்கிறார் ஹான்சன். நுணுக்கமாக பேசி, நுட்பமாக எழுதிவிட்டு பதுங்கிவிடாமல் சூழல் காக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் போராட்டம் செய்து சிறையிலும் அடைக்கப்பட்ட போராட்ட ஹிஸ்டரி ஹான்சனின் ஸபெஷல். "எரிபொருளால் உயரும் கார்பன் அளவை குறைப்பது என்பது எதிர்காலத்தில் பெரும் போராட்டமாகவே இருக்கும்" என ஹான்சன் தீர்க்கதரிசனமாக 2000 ஆம் ஆண்டிலேயே கூறியது இவரின் ஆய்வுக்கும் கூரிய அறிவுக்குமான சாட்சி. 2013 ஆம் ஆண்டு நாசாவின் பணியிலிருந்து விலகியவர், "இப்போதுதான் நான் நினைத்ததை பேசவும் செய்யவுமான சுதந்திரம் கிடைத்திருக்கிறது

பாரீஸ் ஒப்பந்தம் மூலம் 1-2 டிகிரி வரை வெப்பநிலை குறைக்கிறோம் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். குறைக்கிறோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு நிலக்கரியை எரிப்பது பித்தலாட்டம்தானே? கார்பனை அதிகம் வெளியேற்றும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது இச்சிக்கலை தீர்க்க உதவும்" என சூழலுக்கு ஆபத்து என்றால் சூப்பர் ஹீரோவாகி பல வல்லரசு நாடுகளை வறுத்தெடுப்பது ஜேம்ஸ் ஹான்சனின் பழக்கம். உண்மையில் இந்த பேச்சும், அவரது செயல்பாடும் சூழலியலில் பலருக்கும் வழிகாட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை

நன்றி: முத்தாரம் வார இதழ்






   

பிரபலமான இடுகைகள்