பசுமை பேச்சாளர்கள் 7 (ஸ்பைக் லீ) -ச.அன்பரசு




பசுமை பேச்சாளர்கள் 7
ஸ்பைக் லீ
.அன்பரசு

அமெரிக்காவின் அட்லாண்டாவில் 1957 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று ஆப்பிரிக்க அமெரிக்க குடும்பத்தில் பிறந்தவர் பின்னாளில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஸ்பைக்லீ. தன் வாழ்வின் பால்யத்திலேயே நியூயார்க்கிலுள்ள ப்ரூக்ளின் நகருக்கு இடம் பெயர்ந்த ஸ்பைக் லீதனது 20 வயதிலேயே அமெச்சூர் படங்களை இயக்கி 'எ பிலிம் பை லீ' என கனவு காணத்தொடங்கிவிட்டார்.

 தனது joe's bed-stuy barbershop we cut heads  என்ற பள்ளி ப்ராஜெக்ட் படத்திற்கு மாணவர் அகாதமி விருது வென்று சாதித்தவர், நிறவெறி, அரசியல், வன்முறை ஆகிய மூன்று விஷயங்களையும் மிக்ஸியில் அரைத்து குலுக்கி கல்லா கட்டுவதில் கில்லாடி. 1982 ஆம் ஆண்டு நியூயார்க் பல்கலைக்கழக திரைப்பட பள்ளியில் டிகிரி பெற்றவர், 1991 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலையில் திரைப்பட பயிற்சி ஆசிரியரானார். கடந்த 15 ஆண்டுகளாக நியூயார்க் திரைப்பட பள்ளியில் திரைப்பட பேராசிரியராகவுள்ள ஸ்பைக் லீ, தனது திரைப்பட பங்களிப்புக்காக, பாஃப்டா, கிராமி விருது(2013) உட்பட பல்வேறு விருதுகளை அள்ளியுள்ளார்.  

ஸ்பைக் லீ தன்னுடைய படங்களின் திகுதிகு கான்செப்ட்களைப் போலவேதான் பேசுவார். மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசி வம்பை ஹோல்சேலில் வாங்கிக்கொள்வது இவரின் ஸ்பெஷல். 2006 ஆம் ஆண்டு நியூயார்க் இதழ், ஸ்பைக்லீயிடம் அவரது படம் விருது பெறாததைக் கேட்டபோது, "பாதுகாப்பான ஸ்டீரியோடைப் படங்களுக்கு விருது தருவது என்னுடைய படங்களுக்கு விருது கிடைக்காததை விட பெரிய மனவலி." என சொல்லியது மினி சாம்பிள்தான்.


நிறவெறி, கறுப்பின சமூகம், ஊடகம், நகரின் குற்றங்கள், வறுமை உட்பட பல்வேறு சமூக பிரச்னைகளை முன்வைத்து மட்டும் ஏறத்தாழ 35 படங்களை தயாரித்து இயக்கியுள்ளது ஸ்பைக் லீயின் தனித்துவம். அமெரிக்க தேர்தலில் பெர்னி சாண்டர்ஸை ஆதரித்தவரான இவர் பல்வேறு அரசியல் பிரச்னைகளிலும் சூழல் பிரச்னைகளைக் குறித்த விவாதங்களிலும் கலந்துகொள்வதோடு பள்ளி, கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக உரையாடி பல்வேறு ஊக்கமான நன் முயற்சிகளுக்கான விதைகளை தூவிவருகிறார்.

நன்றி: முத்தாரம் வார இதழ்