சீனாவின் ஒரு பாதை ஒரு மண்டலம்! - கா.சி.வின்சென்ட்
சீனாவின் ஒரு பாதை
ஒரு மண்டலம்!
- கா.சி.வின்சென்ட்
சீனாவின் பெய்ஜிங்
நகரில் மே.14
அன்று தொடங்கி நடந்த சீனா ஷி ஜிங்பிங்கின் கனவுத்திட்டமே
OBOR(One Belt One Road). ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும்
ஐரோப்பா நாடுகளை இணைப்பதே இதன் நோக்கமாகும். சாலைகள் போடுவது
எதற்கு? போட்டோ எடுக்கவா? நாட்டின் உற்பத்தியை
ராக்கெட் வேகத்திற்கு கொண்டு செல்லும் பிஸினஸ் செய்யத்தான். சீனாவின்
முக்கியமான பொருளாதார திட்டம் இது என பல பொருளாதார வல்லுநர்களும் கூறுகின்றனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் டிராகன் தேசமான சீனாவுக்கு
இது முக்கியமான பொருளாதார திட்டம்.
ஒரு பாதை ஒரு மண்டலம்
திட்டத்தில் இலங்கை,
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டாலும்
தெற்காசிய நாடுகளில் முக்கிய நாடான இந்தியா கலந்துகொள்ளவில்லை. பல்வேறு நாடுகள் சீனாவோடு இத்திட்டத்தில் ஒன்றுபடுவதாக கையெழுத்திட்டுள்ளன
அதில் நேபாளமும் உண்டு.
இந்தியா கலந்துகொள்ளாதது
ஏன்?
ஒரு பாதை ஒரு மண்டலம்
என்பதில் கலந்துகொண்ட நாடுகளுக்கு அத்திட்டம் தொடர்பான முயற்சிகளில் தம் நாட்டிலுள்ள
நிறுவனங்களுக்கு திட்டப்பணி ஒப்பந்தம் கிடைக்கும் என்ற ஆசையுண்டு. ஆனால்
இந்தியாவிற்கு உள்ள தர்மசங்கடம், இத்திட்டத்தில் இந்தியாவிற்கு
சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் வழியாக CPEC எனும் பொருளாதார மண்டலம் அமைவதுதான். இதில் இந்தியாவின்
நிலைப்பாட்டை சீனா அரசு பொருட்படுத்தாததை வெளியுறவுத்துறையின் அதிகாரி கோபால் பாக்லே
பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஒரு பாதை ஒரு மண்டலம்
திட்டத்தின் மூலம் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து பெரும் தொகை 46 பில்லியன்
டாலர்கள். "சீனா- பாகிஸ்தான் பொருளாதார
மண்டலம் என்பது இதன் முக்கியமான திட்டம். இதன் பயன்பாட்டை உணர்ந்துதான்
பெரும்பாலான தெற்காசிய நாடுகள் இதில் பங்கேற்க கையெழுத்திட்டுள்ளன" என சூசகமாக பேசுகிறார் தெற்கு மற்றும் மத்திய ஆசியா நிறுவனத்தின் இயக்குநரான
வாங் டெகுவா.
ஒரு பாதை ஒரு மண்டலம்
திட்டத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து 29 தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள நேபாளம் பங்கேற்றிருப்பது
இந்தியாவை தனிமையில் தள்ளியிருக்கிறது. "ஒரு பாதை ஒரு மண்டலம்
திட்டத்தில் இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் அதன் பயனை உணர்ந்து இணைந்துள்ளபோது,
அந்நாடு மட்டும் இணையவில்லை என்றால் அது பல்வேறு கேள்விகளை எழுப்பும்.
இது இந்தியாவின் குரல் இப்பகுதியில் வலுவாக இருப்பதையே குலைப்பதாகும்."
என ஆணித்தரமாக பேசுகிறார் சீனாவின் வெளிநாட்டு உறவுகள் மையத்தின் இயக்குநரான
ஹூ ஷிஸ்ஹெங்.
நன்றி: முத்தாரம் வார இதழ்