பசுமை பேச்சாளர்கள் -11 பில் மெக்கிப்பன் ச.அன்பரசு



பசுமை பேச்சாளர்கள் -11
பில் மெக்கிப்பன்
.அன்பரசு

அமெரிக்காவில் 1960 ஆம் ஆண்டு டிச.8 அன்று கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் பிறந்து பின்னாளில் முக்கிய சூழலியலாளரான பரிணமித்த பெருமை உடையவர் பில் மெக்கிப்பன். மசாசூசெட்ஸில் கல்வி கற்று, போஸ்டன் நகரில் வளர்ந்த பில் மெக்கிப்பன் எழுத்தாளர், கல்வியாளர், ஏன் வழக்குரைஞரும் கூடத்தான். புவி வெப்பமயமாதலை எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி செயல்பட்ட எழுத்தாளர்களில் முக்கியமானவர் இவர். அரசின் சூழலுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக போராடுவது இவர் குடும்ப வழக்கம். பிஸினஸ் வீக் பத்திரிகையில் வியட்நாம் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு எதிராக எழுதி போராட்டத்தில் ஈடுபட்டதால் 1971 ஆம் ஆண்டு பில்லின் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே பில் உள்ளூர் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி குவித்ததோடு.பல்வேறு விவாத நிகழ்ச்சிகளிலும் அழைப்பிதழ் இல்லாமலே ஆஜராகி வாதம் செய்து ஜெயிப்பது இவர் ஸ்டைல்.

பசுமை எழுத்தும் சூழல் வாழ்வும்!

பட்டப்படிப்பு முடிந்ததும், 1982 ஆம் ஆண்டு நியூயார்க்கர் பத்திரிகையில் இணைந்த பில் டாக் ஆப் தி டவுன் என்ற பத்தியை 5 ஆண்டுகள் தொடர்ந்து எழுதினார். வீடற்ற மக்கள் குறித்த தொடர் கட்டுரைக்காக சில காலம் தெருக்களிலே வசித்தார். அப்போது வழக்குரைஞராக செயல்பட்டு வந்த தன் எதிர்கால மனைவியான சூ ஹால்பெர்னை சந்தித்தார். 1987 ஆம் ஆண்டு பத்திரிகைப் பணியை விட்டு விலகியவர், நியூயார்க்கின் அடிரோன்டேக்ஸ் எனும் தொலைதூரப்பகுதியில் வசித்தபடி ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக மாறினார்.

சூழல் செயல்பாட்டாளராக மாறுவதற்கு முக்கியக் காரணம் இத்தொடரின் முந்தைய சேப்டரில் வந்த ஜேம்ஸ் ஹான்சன்தான். 1988 ஆம் ஆண்டு கோடைக்காலம் கடுமையாக சுட்டெரிக்க, இயற்கை மற்றும் ஆற்றல் கமிட்டியிடம் தன் ஆய்வுகளை ஜேம்ஸ் ஹான்சன் சமர்ப்பித்தார். உடனே சூழலியலில் கவனம் குவித்த பில் மெக்கிப்பன் நியூயார்க் ரிவ்யூ ஆப் புக்ஸ், அட்லாண்டிக், தி நியூயார்க் டைம்ஸ் கிராண்டா என முக்கிய பத்திரிகைகள், இதழ்கள் அனைத்திலும் சூழல் பிரச்னைகள் குறித்த கட்டுரைகளை எழுதி தள்ளினார். 1989 ஆம் ஆண்டு 'The End Of The Nature' வெளியான பில் மெக்கிப்பனின் நூல்தான், புவி வெப்பமயமாதல் குறித்த தரவுகளை தீர்க்கமாக முன்வைத்த முதல் நூல். உலகமெங்கும் 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், 2006 ஆம் ஆண்டுவரையிலும் பல்வேறு மேம்படுத்தப்பட்ட பதிப்புகள் வெளியாக வெற்றிபெற்றன.

கார்பன் ஒழிப்பு!

2007 ஆம் ஆண்டு தொடங்கிய Step It Up  என்ற சூழல் பிரசார திட்டத்தை முன்னெடுத்த பில் மெக்கிப்பன், பல்வேறு சூழல் பேரணிகளை மக்களை ஒன்றுதிரட்டி நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தார். 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை 50%, மூன்று ஆண்டுக்குள் கார்பன் அளவை 10% மாக குறைப்பது பிரசார திட்டத்தின் இரண்டு லட்சியங்கள். இதில் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது மற்றும் இது தொடர்பான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் ஈர்க்கும்படி செய்த பணிகள் இவரை சூழலியல் போராளியாக முன்னிறுத்துகிறது. 2008 ஆம் ஆண்டு இப்பணிகளை இடைவெளியின்றி உலகமெங்கும் செய்ய பில் மெக்கிப்பன் தொடங்கியதுதான் 350.org அமைப்பு. காற்றில் கார்பன் டை ஆக்சைடு 350பிபிஎம் அளவுக்கு அதிகமானால் உடல்நலனை பாதிக்கும் என்பதால் தன் சூழல் அமைப்புக்கு இப்பெயரைச் சூட்டிய பில், 2009 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் சூழல் மாநாட்டுக்கு முன்னரே அமெரிக்கா, ஆசியா, ஆசியா ஆகிய பகுதிகளில் 350 க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி முடித்த வேகம் பிரமிப்பு தரக்கூடியது. பில் மெக்கிப்பனின் அமைப்பு, 181 நாடுகளில் 5 ஆயிரத்து 200 சூழல் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியிருக்கிறது. கனடாவுக்கும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கும் எரிவாயுக்குழாய் இணைப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறைசென்ற வரலாறும் இவருக்கு உண்டு.

கண்காணிப்பு குற்றம்!

சூழல் காக்க உழைத்ததற்காக மாற்று நோபல் எனப்படும் ரைட் லிவ்லிஹூட் விருது(2014), காந்தி விருது(2013) வென்றுள்ள பில் மெக்கிப்பனுக்கு 18 பல்கலைக்கழகங்கள் கௌரவ முனைவர் பட்டங்களை வழங்கி இவரை கௌரவித்துள்ளன. 2014 ஆம் ஆண்டு உயிரியலாளர்கள் புதிதாய் கண்டறிந்த தாவர இனங்களுக்கு(Megophthalmidia mckibbeni) என்று இவரது பெயரைச்சூட்டியுள்ளனர். ஆனால் இவர் சந்திக்காக பிரச்னைகளும் கிடையாது. 2016 ஆம் ஆண்டு நியூயார்க் பத்திரிகையில் தன்னுடைய குடும்பத்தையும் தன்னையும் வலதுசாரி ஆட்கள் தொடர்ந்து மிரட்டி வருவதையும் நான் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறேன் என வெளிப்படையாக எழுதியுள்ளார். ஒடுக்குமுறை, கண்காணிப்பு கடந்து சூழல் குறித்து கவலைப்படும் இவரது செயல்பாடுகளே இவரைப்பற்றி எழுதுவதற்கு காரணம்.

நன்றி: முத்தாரம் வார இதழ்