ஏன்? எதற்கு? எப்படி? -ரோனி ப்ரௌன்
ஏன்? எதற்கு?
எப்படி?
அமில மழையைப் போல
அமில பனி என்பது சாத்தியமா?- Mr. ரோனி
அமில மழையைப் போலவேதான்
அச்சு அசலாக அமில பனியும் உருவாகிறது. சல்பர் டயாக்ஸைடும், நைட்ரஜன் ஆக்ஸைடும் கரிம எரிபொருட்களிலிருந்து உருவாகி மேகங்களில் படிகின்றன.
நீரோடு வினைபுரிந்து, சல்ப்யூரிக் மற்றும் நைட்ரிக்
அமிலமாக மாறி நிலம் நோக்கி பாய்ந்தால் அமிலமழை. அதுவே கிறிஸ்டல்களாக
மாறி விழுந்தால் அமில பனி. பாதிப்பில் அமில பனியே முன்னிலை வகிக்கிறது.
உறைந்த நிலையிலிருந்து உருகும்போது பேரளவிலான அமிலத்தை நிலத்தின் படியச்செய்கிறது.
வயதாகும்போது உடல்
சுருங்கிப்போவது ஏன்?
யூத் காலத்தில்
ஸ்பைடர்மேனாய் துள்ளித் தாண்டியவர்கள், வயதானபின் பேட்மேன் போல தொட்டதற்கெல்லாம்
வண்டிதேடி இளைப்பு வாங்குவதற்கு காரணம் கால்கள் மற்றும் கைகளிலுள்ள குருத்தெலும்பு
பட்டைகள் தேய்மானம் அடைவதால்தான். ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பின்
அடர்த்தி குறைவும் ஏற்படுவதால் 30-70 என்ற காலகட்டத்தில் ஆண்கள்
3 செ.மீ., பெண்கள்
5 செ.மீ. உயரத்தையும் இழப்பார்கள்.
இது 80 வயதில் ஆண்களுக்கு 5 செ.மீ. ஆகவும், பெண்களுக்கு 8 செ.மீ. ஆகவும் அதிகரிக்கும்.
நீருக்குள் எவ்வளவு
நேரம் மூச்சு தம் கட்ட முடியும்?
பொதுவாக மனிதர்கள்
உட்பட பாலூட்டிகள் நீரினுள் அமிழும்போது உடலிலிருந்து தலைக்கு பாயும் ரத்தவோட்டத்தின்
அளவும், இதயத்தின் லப்டப்பும் லப்.......டப் என சடக்கென குறைந்து
மெதுவாகும். நீர்வாழ் உயிரிகளுக்கு இந்த பிரச்னை இருக்காது.
எந்த வித பிராக்டிஸூமின்றி தண்ணீரில் குதித்தவர், 90 நொடிகள் நீருக்குள் தாக்குப்பிடிக்கலாம். 2016 ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம், ஸ்பெயினின் அலெக்ஸ் ஷெகுரா வென்ட்ரெல்
24 நிமிடங்கள் நீருக்குள் மூச்சு தம் கட்டி சாதனை செய்திருக்கிறார்.
எப்படி? நீருக்குள் முங்கும் முன் தூய ஆக்சிஜனை
சுவாசித்தாராம்.
வெடிகுண்டுகளை
கண்டறியும் மெட்டல் டிடெக்டர்கள் எப்படி வேலை செய்கின்றன?
இன்று மெட்டல்
டிடெக்டர்களை தாண்டி வெடிக்கும் குண்டுகள் உருவாகிவிட்டன. ஆனால்
ஒரு காலத்தில் மெட்டல் டிடெக்டர்கள் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தின என்பது உண்மைதான்.
மெட்டல் டிடெக்டரின் வட்டவடிவான அமைப்பில், இரண்டு
காந்த காயில்கள் உண்டு. டிரான்ஸ்மிட்டர் காந்தம் ஒரு நொடிக்கு
ஆயிரம் என்ற அலைநீளத்தில் காந்தப்புலத்தை ஏற்படுத்துகிறது. இந்த
காந்தப்புலத்தில் தட்டுப்படும் உலோகங்களை பற்றிய தகவல்களை காந்த அலைகளிலிருந்து பெறும்
மற்றொரு காந்தம், அதனை ஹெட்போன் வழியாக மனிதர்களுக்கு ஒலி எழுப்பி
எச்சரிக்கிறது.
நன்றி:முத்தாரம் வார இதழ்