விநோதரச மஞ்சரி தொகுப்பு 2: ரோனி ப்ரௌன்



விநோதரச மஞ்சரி   தொகுப்பு: ரோனி ப்ரௌன்


சோலார் பாண்டா!

குங்க்பூ பாண்டாவின் ரசிகர்கள் உலகெங்கும் இருப்பதில் என்ன தவறிருக்கிறது? சீனாவில் மெகா பாண்டா உருவத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல் மையம் அனைவரையும் கவர்ந்து வருகிறது

சீனாவின் தாடோங் பகுதியில் பாண்டா க்ரீன் எனர்ஜி நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்களை விமானத்திலிருந்து பார்த்தால் மெகா பாண்டாவின் உருவம் வசீகரமாக ஈர்க்கிறது. .நா சபையின் க்ளீன் எனர்ஜி திட்டத்தின்படி அமைக்கப்பட்ட இந்த சோலார் பேனல் மூலம் 50 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். அடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஃபிஜி ஆகிய இடங்களில் 100 க்கும் மேற்பட்ட பாண்டா டிசைனிலான சோலார் பேனல்கள் உருவாக்கப்படுமாம். பாண்டா தேசம்!



 நேபாளத்தின் பெயரற்ற சிறுமி!

பைக்கில் நிற்கும் ட்ராஃபிக்கில் பிச்சை எடுக்கும் சிறுமி, டீக்கடையினருகில் கந்தலான சிக்குப்பிடித்த உடையில் அமர்ந்துள்ள மனிதர்களுக்கும் ஒரு கதை இருக்கும்தானே!

மும்பையின் பவுன்சி மேத்தா நேபாளத்தில் சந்தித்த சிறுமியின் கதையும் அப்படித்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளான சக்வா என்ற கிராமத்தில் பவுன்சி மேத்தா சீரமைப்பு பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். தன் நண்பர்களுடன் பணியில் ஈடுபட்டிருந்தவரை நோக்கி, திடீரென ஓடிவந்த 8 வயது சிறுமி அழுகையோடு கட்டிக்கொண்டாள். அதை எதிர்பார்க்காத பவுன்சி இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.
தலையில் அடிபட்டதால் பேச முடியாத அச்சிறுமியை அவளின் குடும்பமே கைவிட்டிருந்தது. பணமில்லாததால் அச்சிறுமியை பள்ளிக்கு ஏன் மருத்துவசிகிச்சைக்கு கூட அவளது மாமா அனுப்பவில்லை. மேத்தா, மும்பைக்கு வந்துவிட்டாலும் அச்சிறுமியின் மாமாவுடன்  தன் நண்பர் மூலம் பேசி, சிறுமியைக் கண்டுபிடித்து சிறப்பு பள்ளியில் சேர்த்தேவிட்டார். அனயா என்று பெயரிடப்பட்ட நேபாள சிறுமி, பவுன்சியை பார்த்தவுடன் கட்டிப்பிடித்து இன்று கூறுவது "பாபா'  என்ற வார்த்தையைத்தான்.

முஸ்லீம்களுக்கு ரூம் கிடையாது!-ரோனி

வாடகைக்கு அறை பேசும்போது வீட்டு ஓனர் நம்மிடம் சிங்கிளா, வெஜ்ஜா, என்ன வேலை, என்பதெல்லாம் கேட்பதில் லாஜிக் இருக்கிறது. ஆனால் லாட்ஜில் இதெல்லாம் கேட்பது கொஞ்சம் ஓவர்தானே?

அண்மையில் சஃபீக் ஹக்கீம், திவ்யா என்ற கேரளத் தம்பதிகள் வேலை விஷயமாக பெங்களூருவுக்கு வந்தனர். அங்கு சுதாமா நகரிலுள்ள ஆலிவ் ரெசிடென்சியில் அறையை புக் செய்யும் போது, ரிசப்ஷனிஸ்ட் உடனே முஸ்லீம்களுக்கு ரூம் கிடையாது என மூஞ்சியில் அடித்தது போல் பேசிவிட்டார். ஹக்கீம், திவ்யா என இருவரின் ஐடிக்களை வாங்கிப் பார்த்தபின் இதனை திருத்தமாக கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வேறுவழியின்றி பேக்குகளோடு தவித்த தம்பதிகள் வேறு ஹோட்டல் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டனர் எனினும் இதற்கான காரணத்தை ரிஷப்ஷனிஸ்ட் மறைக்காமல் கூறிய ஹானஸ்ட் முக்கியம். "முஸ்லீம், கன்னடர்கள் என்றால் உள்ளே விடாதே என்றுதான் போலீஸ் கூறியிருக்கிறது. முஸ்லீம்கள் அறையில் தூக்குப்போட்டுக்கொண்டால் என்ன செய்வது?" என லாஜிக் பேசியிருக்கிறார் அவர். இனி முஸ்லீம்கள் இந்தியாவிலேயே அகதிதானா?  

ஏழு வயசில் எய்ட் பேக்

சிக்ஸ்பேக், எய்ட்பேக் வைத்து புஜத்திலிருந்து முழங்கால்கள் வரை எலிகளை ஓட விட யாருக்குத்தான் ஆசையில்லை. ஆனால் ஜிம்முக்கு போய் வொர்க் அவுட் பண்ணனுமே! இந்த சீனா சுட்டி, கருத்தாக ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணியதன் ரிசல்ட் என்னாச்சு தெரியுமா? குளோபல் புகழ் கிடைத்திருக்கிறது பாஸ்!

சீனாவின் ஹான்சூ பகுதியைச் சேர்ந்த சென் யீ என்ற சிறுவன், தம் பிடித்து செய்த புஷ் அப், சிட் அப்ஸ்களால் அவனின் வயிறு எய்ட் பேக்ஸ் அழகில் உண்மையிலேயே பழனி படிக்கட்டுகளாகி பளபளக்கிறது. 5 வயதிலிருந்து ஜிம் ட்ரெய்னிங் போகும் சென்யீ, உள்ளூரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு நிகழ்வில் பங்கேற்றபோதுதான் அவனின் எய்ட் பேக்ஸ் பலருக்கும் ஆச்சர்யம் தந்தது.  உடனே சோஷியல் மீடியாவில் சென்யீயின் படம் ஷேர் செய்யப்பட,  குளோபல் வைரல் சுட்டியாகிவிட்டார் சென்யீ. கலந்துகொண்ட ஜிம்னாஸ்டிக் மேட்சிலும் 6 தங்கம், 1 வெள்ளி என பிக் பாஸாக அடித்து நொறுக்கியது அடுத்த சாதனை. குட்டி அர்னால்டு!



 குப்பையில் சங்கீதம்!-ரோனி

இசை எங்கிருந்து பிறக்கிறது? என்ற கேள்விக்கு நம்மிடம் இரண்டு டஜன் பதில்கள் உண்டு. ஆனால் ஜம்மு காஷ்மீரின் மகாபோதி பள்ளி மாணவர்கள் இதற்கான பதிலை தங்களின் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் மூலம் வாசித்தே காட்டிவிடுகின்றனர். ஆனால் அவர்களின் இசைக்கருவிகள் அனைத்தும் தூக்கியெறியப்பட்ட பிளாஸ்டிக்குகள்தான் என்பது முக்கியம்.

லடாக்கில் சுற்றுலா பயணிகளால் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம் என்ற கான்செப்டில் 2015 ஆம் ஆண்டு ட்ராஷ் பேண்ட் என்ற இசைக்குழு உருவானது. இந்த ஐடியாவை செயல்படுத்தி லடாக்கின் காற்று மண்டலத்தை கற்கண்டாக்கி, டூ இன் ஒன்னாக சூழலையும் காப்பாற்றுபவர், லடாக்கின் புல்லாங்குழல் மனிதரான ஆங்க்சுக் ராலம்லே. குப்பைகளிலுள்ள பிவிசி பைப்புகளில் புல்லாங்குழல், ஜலதரங்கம் வாசிக்க சீன கிண்ணங்கள், ஸ்பூன்கள், கப்கள் என அட்டகாசமாக வாசிக்கிறது இந்த இளம் மாணவர்களைக் கொண்ட ட்ராஷ் பேண்ட். 2015 ஆம் ஆண்டுக்கான இன்னோவேஷன் விருதான டிசைன் ஃபார் சேஞ்ச் விருதையும் வென்றுள்ளது இந்த இசைக்குழு.    




 நிறவெறி க்ளவுஸ்!

பட்டம் ஜெயித்தவுடன் உலக அழகிகள் என்ன செய்வார்கள்? உலகில் தேடிப்பிடித்து ஏழையின் குடிசைக்குள் நுழைந்து குழந்தைகளின் வாயில் பாதாம்பாலை ஊற்றி அதை போட்டோவில் கவர் செய்து கருணைமாதா ஆவது வழக்கம். இங்கும் அதே சீன்தான். என்ன? சாப்பாடு கொடுக்கும்போது க்ளவுஸ் கையில் ஏறியதால் உலக அழகியின் கௌரவம் கீழே விழுந்துவிட்டது.

மிஸ்.தென் ஆப்பிரிக்கா பியூட்டியான நெல் பீட்டர்ஸ், ஐகாகெங்க் என்ற ஹெச்ஐவி பாதிப்பு கொண்ட குழந்தைகள் மையத்திற்கு கருணை குபீரென பொங்க ஷேர் ஆட்டோ பிடித்து போனார். பெருமிதமாக உணவை குழந்தைகளுக்கு வழங்கினார். உணவுகளை பாதுகாப்பு க்ளவுஸ் அணிந்து வழங்கியதுதான் அகில உலகத்திலும் நிறவெறி சர்ச்சையாகிவிட்டது. உணவுகளை வழங்கும்போது க்ளவுஸ் அணிவது உலகவழக்கம்தானே என்ற நெல் பீட்டர்ஸின் விளக்கத்தைக் கேட்கவெல்லாம் யாரும் தயாராக இல்லை. ஏனெனில் அந்த மையத்தில் உணவு வழங்கியவர்கள் அனைவரும் அணிந்திருந்தது சாதாரண க்ளவுஸ்; ஆனால் ஆப்பிரிக்க அழகி அணிந்திருந்தது லேடக்ஸ் க்ளவுஸ் என்பதோடு, முன்னர் வெள்ளையின குழந்தைகளோடு நெல்பீட்டர்ஸ் எடுத்திருந்த பாச அணைப்பு படங்களையும் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு அவரை வறுத்து எடுத்துவிட்டனர் நெட்டிசன்கள்.   

  
 மகள்களே இனி மாடுகள்!

இந்தியாவில் மாநில அரசின் கடன் தள்ளுபடி அனுசரணையைத் கடந்து, விவசாயம் செய்வது இடியாப்ப சிக்கலாகி வருகிறது என்பதற்கு மத்தியப்பிரதேசத்தின் விவசாயி குறித்த வெளியான வீடியோவே சிறந்த சாம்பிள்.

மத்தியப்பிரதேசத்தின் சேஹோரிலுள்ள பசந்த்பூர் பான்க்ரி கிராம விவசாயியான சர்தார் காலா, கையில் பணமில்லாததால்  முதலில் தன் இரு மகள்களான ராதிகா, குந்தி இருவரையும் பள்ளியை விட்டு நிறுத்தினார். பின் நிலத்தை உழ எருதுகள் வாங்கவும், வாடகைக்கு பிடிக்கவும் கூட வழியில்லாத கிடுக்கிப்பிடி சூழலில் அந்த ஷாக் முடிவை எடுத்தார். மாடுகள் இல்லை, ஆனால் மகள்கள் இருக்கிறார்களே என்று மகள்களை நுகத்தடியில் மாட்டி நிலத்தை உழத்தொடங்கியதுதான் பேரவலம். சர்தார் நிலத்தை தன் மகள்களைப் பூட்டி உழும் காட்சி வீடியோவாக டிவி சேனல்களில் ஒளிபரப்பாக, அரசின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆஷிஷ் சர்மா, உடனே விவசாயி சர்தாருக்கு தேவையான உதவிகளை அரசு அளிப்பதாக கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேசத்தில்தான் அண்மையில் கடன் தள்ளுபடிக்காக போராடிய 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: குங்குமம் வார இதழ்    
o:p>




  

பிரபலமான இடுகைகள்