கூகுளின் பிடியில் உலகம் 2030!



கூகுளின் பிடியில் உலகம் 2030!


காலையில் கம்ப்யூட்டரை திறந்ததும் அன்றைக்கு உலகில் முக்கியச்செய்தியை  டூடுலாகக் கொண்ட கூகுள் சர்ச் எஞ்சின் உங்களுக்கு ஹாய் சொல்லுகிறது. கூகுள் இன்று வெறும் சர்ச் எஞ்சின் சொல்பவர்கள் உண்மையில் அம்மாஞ்சிதான். தானியங்கி கார், பர்சனல் அசிஸ்டண்ட், செயற்கை அறிவு கொண்ட எந்திரங்கள் என கூகுள் ரொம்பவே பிஸியாக பிசினஸை அப்டேட் செய்வதில் மற்ற நிறுவனங்களை விட கூகுள் செம கில்லிஇப்படியே போனால் 2030 இல் என்னவாகும்?

2030 ஆண்டின் ஜனவரி முதல்நாள். அறையின் கதகதப்பு அவ்வளவு சுகம். ஆனால் வெளியே ரத்தம் உறையும் பனி. கூகுளின் நெஸ்ட் எனும் செயற்கை அறிவு கொண்ட ஏசியினால் இது சாத்தியம்தான். எழுந்து காஃபி குடித்துவிட்டு, குளித்து பிள்ளையாரை வேண்டி தலையில் குட்டிக்கொண்டு ஆபீஸ் கிளம்புகிறீர்கள். வாகனம்? கூகுளின் தானியங்கி கார்தான். வழிகாட்ட கூகுளின் Waze ஆப் இருக்கையில் கவலை என்ன? ஆபீஸ் வேலையில் லஞ்ச் பிரேக்கில் ஜாலியாக ஆபீஸ் பில்டிங்களை சுற்றி வருகிறீர்கள். அப்போது உங்களின் கண்களில் கம்பீரமாக பொருந்தியிருக்கும் கூகுள் கிளாஸ் 2.0, அன்றைய நாளின் வானிலை விவரங்களை புட்டு புட்டு வைக்கிறது. அவற்றை சூடான சாக்லெட் டிரிங்க் குடித்தபடி படிக்கலாமே என்று யோசித்த உடனே, அலுவலகத்தின் முனையில் உங்கள் நண்பர்கள் பரிந்துரைத்த சூப்பர் மார்கெட் குறித்த தகவல் கண்முன்னே விரிகிறது எப்படியிருக்கும்? அசத்தல்தானே!

முழுஉலகமும் கூகுள் என்ற நிறுவனத்தில் இணைக்கப்பட்டுவிடும் என்பதுதான் விஷயம். கூகுள் சர்ச் எஞ்சினிலிருந்து கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனமாக மாறி வெகுகாலமாகிறது. இனி ஒவ்வொரு மனிதருக்கும் தனி பர்சனல் அசிஸ்டண்டை அது வருங்காலத்தில் உருவாக்கி அளிக்கும். இதன் பிளஸ் பாயிண்ட் என்ன? தொழில்நுட்பம்  வேலையை எளிமையாக்கி, உங்கள் நேரத்தை குறைத்து தரும். அதுவேதான்.

தொழில்நுட்பத்தின் மறுபக்கம்

இன்று தேடுதல் சந்தையில் கூகுளின் பங்கு மட்டுமே 65%. எனவே கூகுள் சார்ந்த பொருட்களை உங்கள் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தி வரும்போது அக்கருவிகள் வழியே உங்களை கூகுள் நன்கு புரிந்துகொண்டு 11 மணிக்கு சுப்பிரமணி கைபொறுக்கும் சூட்டில் காபி குடிப்பார் வரையில் பதிவு செய்து நம்மை ஏகபோக ஆளுமை செய்யத்தொடங்கும். குறிப்பிட்ட நிறுவனத்தின் பொருட்களையே பயன்படுத்தி பழகிவிட்டால் மற்ற நிறுவன பொருட்களின் வசதிகள் தெரியாமல் திடீரென அதனைப் பயன்படுத்தும்போது திணறுவோம். கூகுளின் ஆண்ட்ராய்டு தவிர்த்து ஆப்பிளின் ஐஓஎஸ் பயன்படுத்துவதற்கெல்லாம் சான்ஸே கிடையாது.

கடந்தாண்டு நவம்பரில் கூகுள் வெளியிட்ட பிக்ஸல் ஸ்மார்ட்போனை விற்பனை வரியின்றி பலருக்கும் ரீசேல் செய்த குற்றத்திற்காக 200 பேர்களின் ஜிமெயில், கூகுள் ட்ரைவ், யூட்யூப், கூகுள் டாக்ஸ்  உள்ளிட்ட கணக்குகளை கூகுள் நிறுவனம் நிறுத்திவைத்துவிட்டது. ஏகபோகத்தின் முதலடி இப்படித்தான் தொடங்கும். கூகுள் குறித்து பத்திரிகையில் பேட்டி, ஃபேஸ்புக்கில் கருத்து பதிகிறீர்கள் என்றால் கூகுள் உங்களின் கூகுள் சார்ந்த கணக்குகளை நிறுத்திவைத்துவிடும், மேலும் உங்களின் இணையதளம் கூகுள் தேடுதல் இயந்திரத்தின் லிஸ்டில் பைனாகுலர் வைத்து தேடினாலும் வராது.


உங்களை மொத்தமாக உலகிலிருந்தே கூகுள் தனிமைப்படுத்தி தற்கொலைக்கு கூட தூண்ட முடியும். கூகுள் என்பது இங்கே உதாரணத்திற்கு கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், அமேசான், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களையும் இதே இடத்தில் பொருத்திப்பார்க்க முடியும்தானே!  

நன்றி: முத்தாரம் வார இதழ்    

பிரபலமான இடுகைகள்