புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை விட இழந்ததுதான் அதிகம்! நேர்காணல்: சி.கே. சஜி நாராயணன், பாரதிய மஸ்தூர் சங்கம்.




புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதை விட இழந்ததுதான் அதிகம்!
நேர்காணல்: சி.கே. சஜி நாராயணன், பாரதிய மஸ்தூர் சங்கம்.

ஆர்எஸ்எஸ்ஸின் சகோதர அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம்(BMS) இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கமாகும். மோடி அரசின் மூன்றாண்டு கொண்டாட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நிதி ஆயோக்கின் செயல்பாடுகளை பிஎம்எஸ் கடுமையாக விமர்சித்ததோடு, உச்சநீதிமன்றம் 2016 ஆம் ஆண்டு அமல்படுத்த கூறிய சம்பள உயர்வை தற்காலிக நிரந்தர தொழிலாளர்களுக்கு தரவும் வலியுறுத்த போராட்டங்களை அகில இந்தியளவில் நடத்தவிருக்கிறது.

நிதிஆயோக்கை எதற்கு மீண்டும் கலைத்து மறுஉருவாக்கம் செய்யக் கூறுகிறீர்கள்?

நிதிஆயோக் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுதொழிலதிபர்கள் என அனைவருமே புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவேதான் நிதி ஆயோக்கை உறுதியாக எதிர்க்கிறோம்.

உங்களது பார்வையில் உண்மையான இந்தியாவை அரசு எப்படி பார்க்கவேண்டும்?

நாட்டின் பெரும்பான்மை மக்கள் வறுமையின் பிடியிலிருப்பதை உணர்ந்து கொள்கைகளை தயாரிக்கவேண்டும். உலகம் முழுவதும் இந்தியாவிலுள்ள விவசாயிகள் தற்கொலை செய்வது அவப்பெயரை உருவாக்கியுள்ளது. 1950 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் உற்பத்தித்துறை சரிவை சந்தித்து வருவதோடு, சுதந்திரத்திலிருந்து வெளிநாட்டு முதலீடு பற்றாக்குறை நிலவிவருகிறது. இறுதியாக வேலைவாய்ப்பின்மை. மேற்சொன்ன எதையும் தீர்க்கும் திட்டமில்லாத நிதிஆயோக் மேல் எங்களுக்கு நம்பிக்கையில்லை. முதலாளித்துவம் உலகம் முழுக்க பரவினாலும் மக்களுக்கு அதனால் எந்த பயனுமில்லை.

நீங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரானவரா?
1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ஹெட்கேவர் முதலாளித்துவத்திற்கு எதிராக சபதமேற்றார். கம்யூனலிசம் தோற்றபின், முதலாளித்துவமும் கூட வீழ்ந்துவிட்டது. தற்போது உலகைக் காக்கும் புதிய கொள்கையே தேவை.

பிரதமர் மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்புகளே உருவாகவில்லை என நினைக்கிறீர்களா?
மோடி அரசு வெளிநாட்டு முதலீடு நாட்டின் சர்வரோக நிவாரணியாய் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என நம்புகிறது. இந்த மூடநம்பிக்கை சிறுதொழில் பிரிவுகளையே துடைத்தெறிந்துவிட்டதுதான் உண்மை.  உறுதியாக சரியான திட்டத்தோடு உழைத்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்தான். ஆனால் இங்கு இழந்த வேலைவாய்ப்புகள்தான் அதிகம்.

நிதி ஆயோக்கின் முன்னோடியான திட்டகமிஷன் எப்படி செயல்பட்டது?

ரஷ்யாவில் சோதித்து பார்க்கப்பட்ட சோஷியலிச திட்டமது. 1990க்கு பிறகு முதலாளித்துவம் இந்தியாவை வளைத்துவிட்டது. அதனுடைய நவீன வடிவமே நிதி ஆயோக்.

முத்ரா வங்கியின் லோன் திட்டம் சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு கூறுகிறதே?

கடன்கள், வட்டியை வைத்துக்கொண்டு அரசு செயல்பட முடியாது. தன் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கிக்கொள்வதே புத்திசாலித்தனம்.சீனா நம் நாட்டு பட்டாசுத் தொழிலை மூன்றே ஆண்டுகளில் கையகப்படுத்திவிட்டது சிறிய உதாரணம். நம் கைகளிலுள்ள கணபதி சிலைகள் அனைத்தும் மேட் இன் சீனாதான்.நம்மை விட நம் சந்தையை நன்கு புரிந்துகொண்டுவிட்டனர்.  

பிஎம்எஸ் அரசுக்கு எதிராக நிற்கிறதா?

நாங்கள் எங்கள் சங்கத்தின் தொழிலாளர்கள் பக்கமே நிற்கிறோம். தொழிலாளர்களை அரசு எப்படி நடத்துகிறது என்பதை பார்த்து அதனை விமர்சிக்கிறோம். மோடி எதிர்பார்ப்புக்குரிய ஆளுமை. ஆனால் கொள்கையளவில் அவரது செயல்பாடு சரியானமுறையில் இல்லை.

நன்றி: முத்தாரம் வார இதழ்


நன்றி: Ushinor Majumdar,Outlook

பிரபலமான இடுகைகள்