விதிகளுக்கு டிமிக்கி! மரபணுமாற்ற விதைகள் அபாயம்! - கா.சி.வின்சென்ட்


விதிகளுக்கு டிமிக்கி! மரபணுமாற்ற விதைகள் அபாயம்! - கா.சி.வின்சென்ட்

20 ஆண்டுகளுக்கு முன்பு மரபணுமாற்ற விதைகள் அறிமுகமானபோது, விளைச்சல் அதிகம், உரம் குறைவு, உலகின் யாரும் இனி பசியில் இறக்கமாட்டார்கள் என ஏராள வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் தோல்வியடைந்ததோடு அப்பயிர்கள் மனிதர்களுக்கு பெரும் உடல்நல சீர்கேட்டை தருகிறது எனவும் நிரூபணமாகிவிட்டன. தற்போது ஜீன் எடிட்டிங் 2.0 அறிமுகமாயுள்ளது. வாக்குறுதிகள் அதேதான். உணவு தயாரிப்பு, மருந்துகள், எரிபொருட்கள், ஆடைகள் இதன் பரப்பு அதிகம். ஆனால் தற்போது மரபணு மாற்ற விதைகளுக்கான விதிகளும் செயற்கை உயிரியல் வகையிலான 2.0 விதைகளுக்கும், அதன் பொருட்களுக்கும் கிடையாது என்பதுதான் அதிர்ச்சி.

"மரபணுமாற்ற விதைகளின் டிஎன்ஏவானது கம்ப்யூட்டரால் வடிவமைக்கப்படுவதுதான் 2.0 விதைகளின் ரகசியம். முதல் தலைமுறை மரபணுமாற்ற தொழில்நுட்பங்களிலிருந்து மிகவும் வேறுபட்ட டெக்னிக்குகளை கொண்டது இது" என விரிவாக பேசுகிறார் இடிசி அமைப்பின் திட்ட இயக்குநரான ஜிம் தாமஸ். இதில் பாசி, பாக்டீரியா, ஈஸ்ட் உள்ளிட்டவற்றிலிருந்து பகுதிப்பொருட்களை எடுத்து டிஎன்ஏ இஷ்டம்போல மாற்றி, விதைகளில் பயன்படுத்துகிறார்கள். எவால்வா எனும் நிறுவனம் சாக்லெட்டுகளில், ஐஸ்க்ரீம்களின் பயன்படும் வெனிலா ப்ளேவரை வெனிலான் என்ற பெயரில் செயற்கையாக தயாரிக்கிறது. பர்ஃபெக்ட் டே என்ற நிறுவனம் பசுவின் பால் அல்லாத வீகன் பாலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என இடிசி ஆராய்ச்சி நிறுவனம் ஏறத்தாழ 350 புதிய செயற்கை உயிரியல் பொருட்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது. முறையான இயற்கை வழியில் பயிர்கள் தொடர்ந்து வறட்சியால் தடுமாறி வரும் நிலையில்
செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மரபணுமாற்ற பொருட்கள் விலை குறைவாகவும், பெருமளவிலும் கிடைப்பதால், வரவேற்பு பெறுவதில் சந்தேகம் ஏதுமில்லை. வேறுவாய்ப்புகளும் நமக்கில்லை.

டிஎன்ஏவில் எந்த பகுதிகளையும் எளிதில் ஜீன்களை மாற்றி எடிட் (CRISPR)செய்ய முடியும். எனவே, புற்றுநோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, ரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யும்படி பயிர்களை உருவாக்க முடியும் என்கிறார்கள் மரபணுமாற்ற விஞ்ஞானிகள். அண்மையில் மான்சான்டோ நிறுவனம், CRISPR தொழில்நுட்பத்தின் மூலம் புதிய பயிர்களை உற்பத்தி செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. "மரபணு கூட்டத்தில் உள்ள ஒரு மரபணுவை மட்டும் எடுத்துவிட்டு வேறொரு மரபணுவை பொருத்துவது அதன் பணியை சீரான தன்மையையே குலைத்துவிடும்" என அதிரடி செய்தி சொல்கிறார் மின்னசோட்டா பல்கலையின் மரபணுத்துறையின் பேராசிரியரான ஜிம் ஆர்ஃப்.

செயற்கை உயிரியல் முறை மூலம் உருவாக்கப்படும் விதைகள், பொருட்கள் நம் வாழ்க்கையை குறுகலாக்கி விடும். ஒரு எஞ்சினியர் கம்ப்யூட்டரை, டிவியை உருவாக்குவது போல உணவை குறிப்பிட்ட ஃபார்முலாபடி உற்பத்தி செய்வார். வெறும் உற்பத்தி தாண்டி, மரபு முறையில் வேளாண்மை செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை குலைப்பதே இதன் நோக்கம்" என ஆழமும் விரிவுமாக பேசுகிறார் பேராசிரியர் ஜிம் தாமஸ். அதோடு இம்முறையில் மரபணு மாற்றப்பட்ட பொருட்களை இயற்கையானது; ஆரோக்கியமானது; மரபணுமாற்றப்பட்டதல்ல என விற்பனை செய்யும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன. .கா: சைபஸ் நிறுவனத்தின் கடுகு.

இன்றுவரை அமெரிக்காவின் விவசாயத்துறை, மரபணு திருத்த பொருட்களை கண்காணிப்புக்கு உட்படுத்தும் விதிமுறைகளை வகுக்கவில்லை. "இந்த மரபணுமாற்ற பொருட்களில் இயற்கையான பகுதிப்பொருட்களும் உண்டு என்பதால், டெஸ்டிலும் அவை மரபணு மாற்றப் பொருள் என சோதனையில் ரிசல்ட் வராது என்பதுதான் இதிலுள்ள பேரபாயம் " என பீதியூட்டுகிறார் இடிசியின் இயக்குநரான ஜிம் தாமஸ்
நன்றி: முத்தாரம் வார இதழ்    








பிரபலமான இடுகைகள்