பசுமை பேச்சாளர்கள் 6 (மைக் கிம்) ச.அன்பரசு



பசுமை பேச்சாளர்கள் 6
மைக் கிம்
.அன்பரசு

1976  ஆம் ஆண்டு வடகொரியாவில் பிறந்த மைக் கிம் புகழ்பெற்ற வணிக ஆலோசகர், பேச்சாளர் மற்றும் திறமையான எழுத்தாளரும் கூடத்தான். தாய்நிலத்திலிருந்து 2003 ஆம் ஆண்டு சீனா-வடகொரியா எல்லைப்பகுதியில் கிராசிங் பார்டர்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி வடகொரியா அகதிகளுக்கு உதவிகள் செய்யத்தொடங்கியது மைக் கிம்மின் சமூக பணிகளுக்கு தொடக்கப்புள்ளி. எல்லைப்பகுதியில் இவர் கண்ட மக்களின் அனுபவங்களை எழுத்தாக்கிய அனுபவம்தான் Escaping North Korea: Defiance and Hope in the World's Most Repressive Country  என்ற நூலாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆதரவுடன் வெளி வந்தது. சீனா -வடகொரியா எல்லைப்பகுதி மக்களிடையே நடந்த ஆள்கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களை மையமாக கொண்ட நூல் இது. ரயில்பாதை வழியாக ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றிய திடுக்கிடும் இந்நூல் பின்னர் துருக்கி, பொலிவிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதோடு, நடிகர் டேனியல் டே கிம் மூலம் திரைப்படமாகவும் உருவாகி வருகிறது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் வணிக மேலாண்மை பட்டதாரியான மைக் கிம் ஏறிச்சென்று பேசாத டிவி ஸ்டூடியோக்களே உலகில் கிடையாது. ஐந்து கண்டங்களிலுள்ள சிஎன்என், பிபிசி, ஃபாக்ஸ் நியூஸ், ராய்ட்டர்ஸ், சிபிசி, கேபிஎஸ் என பல்வேறு டிவி சேனல்களிலும், கல்வி நிறுவனங்களிலும் ஊக்கமாக சொற்பொழிவு முதல் பேட்டி வரை தட்டி பல கோடி மக்களுக்கு தன்னம்பிக்கை டானிக்கை ஊட்டியிருப்பது தன்னிகரற்ற சாதனை. பல்வேறு டிவி சேனல்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருபவர் மைக் கிம்.   


தன் சொற்பொழிவில் தற்காப்புக்கலை கற்கும் மாணவராக சீனா-வடகொரியா எல்லைப்பகுதியில் வாழ்ந்து வந்தது, அங்கிருந்த மக்களை தப்பிக்க வைத்தது உள்ளிட்ட தன்னுடைய வாழ்க்கையை சுவாரசியமான மொழியில் சொல்வது பலருடைய நெஞ்சையும் தொடுகிறது. ஆனால் மைக் கிம்மின் மனித உரிமைச் செயல்பாடுகளுக்கு பரிசாக, சிறைதண்டனை, சித்திரவதை, துப்பாக்கிமுனை விசாரணை என அபாயங்களையும் கண்டு வந்திருக்கிறார். சீனா- வடகொரியா எல்லையில் வசித்தபோது ஆள்கடத்தல், போதைப்பொருட்கள், வட்டி பிசினஸ் உள்ளிட்ட பல விஷயங்களையும் ஆழமாக கவனித்ததன் முதிர்ச்சியை மைக் கிம்மின் பேச்சில் தீர்க்கமாக உணரலாம்

நன்றி: முத்தாரம் வார இதழ்