பசுமை பேச்சாளர்கள் 8 சோனியா நஸாரியோ ச.அன்பரசு
பசுமை பேச்சாளர்கள் 8
சோனியா நஸாரியோ
ச.அன்பரசு
அமெரிக்காவின் விஸ்கான்சிலுள்ள மேடிசன் நகரில் பிறந்த
சோனியா நஸாரியோ உலகம் முழுவதும் புகழ்பெற்ற முக்கிய பத்திரிகையாளர். கான்ஸாஸ், அர்ஜென்டினா ஆகிய பகுதிகளில் வளர்ந்த இவர்,
அர்ஜென்டினாவில் ஏற்பட்ட போரில் அமெரிக்காவுக்கு பெற்றோருடன் இடம் பெயர்ந்தார்.
வில்லியம்ஸ் கல்லூரி பட்டதாரியான இவர், பெர்க்கிலியிலுள்ள
கலிஃபோர்னியா பல்கலையில் முதுகலை படிப்பை முடித்தார்.
பல்வேறு தன்னார்வ அமைப்புகளில் பணியாற்றியுள்ள சோனியா,
1993 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் லத்தீன் அமெரிக்க மக்கள் குறித்து
எழுதிய கட்டுரைகளால் பலராலும் வாசிக்கப்படும் எழுத்தாளரானார். 1998 ஆம் ஆண்டு போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள் குறித்து இவரது கட்டுரை
புலிட்ஸர் பரிசின் இறுதிப்பட்டியலில் இடம்பெற்று இவரது புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
மேலும் இவரது கட்டுரையின் புகைப்படக்காரரான கிளாரன்ஸ் வில்லியம்ஸூக்கு
புலிட்ஸர் விருது கிடைத்தது. பசி, போதை,
அகதிகள் குடியேற்றம் உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்னைகளை எழுதுவதில்
ஆர்வம் கொண்ட சோனியா பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார்.
2002 ஆம் ஆண்டு களப்பணிகளோடு லத்தீன் அமெரிக்க
நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து தவிக்கும் சிறுவர்கள் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ்
டைம்ஸ் தினசரியில் சோனியா தொடர்ச்சியாக எழுதி வந்த 'Enrique's Journey' என்று தொடரை 6 தொகுப்புகளாக்கி வெளியிட்டது அவருக்கு
பல்வேறு பத்திரிகை விருதுகளை பெற்றுத்தந்தது. இதில் ராபர்ட் கென்னடி
பத்திரிகையாளர் விருது, ஹிஸ்பனிக் பத்திரிகையாளர் விருது ஆகியவை
குறிப்பிடத்தகுந்தவை. பின் 2006 இல்
'Enrique's Journey' நூலை விரிவாக்கி எழுதியபோது அந்நூல் விற்பனையில்
சாதனை புரிந்ததோடு 2 விருதுகளையும் பெற்று தந்தது. 8 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 54 பல்கலைக்கழகங்களில்
வாசிக்கப்படும் முக்கிய நூலாக மாறியது வரலாற்றுச்சாதனை.
2014 ஆம் ஆண்டு மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராவில்
அகதிகளாகி தவிக்கும் சிறுவர்கள் குறித்து சோனியா எழுதிய கட்டுரை நியூயார்க் டைம்ஸில்
வெளியாகி மக்களிடையே பெரும் கவனம் பெற்றது. அகதியாக அமெரிக்காவுக்கு
வரும் லத்தீன் அமெரிக்க மக்கள் குறித்து எழுத்துக்கள் வழியாக பல்வேறு தரப்பினரிடமும்
இடையறாது உரையாடிவரும் தனித்துவ எழுத்தாளுமை சோனியா நஸாரியோவை வரலாறு என்றும் மறக்காது.
நன்றி: முத்தாரம் வார இதழ்