பசுமை பேச்சாளர்கள் -9 ஸ்டீபன் ரிட்ஸ் ச.அன்பரசு



பசுமை பேச்சாளர்கள் -9
ஸ்டீபன் ரிட்ஸ்
.அன்பரசு

அமெரிக்காவின் நியூ சவுத் ப்ராங்க்ஸ் பகுதியிலுள்ள பள்ளி. மாஃபியா குழுக்களின் அடிதடி தகராறுகள் அங்கு காலையில் சுப்ரபாதம் போல டெய்லி நிகழ்வு. பள்ளிக்கு மாணவர்களின் சராசரி வருகை 40% இந்த லட்சணத்தில் பள்ளி நொண்டிக்கொண்டிருக்க அங்கு வேலைக்கு வரும் ஆசிரியர் என்ன செய்வார்? ட்ரான்ஸ்பர் பண்ணிவிட்டுடுங்க சார் என்று தானே மேலதிகாரியிடம் கதறுவார்?

ஆனால் ஸ்டீபன் ரிட்ஸ் இவன் வேறமாதிரி என உலகுக்கு காட்டிய இடம் அதுதான். "நான் இங்குதான் பணி செய்யப்போகிறேன்" என்று அவர் கூறியதைக் கேட்ட அந்த ஊர்வாசிகள் ஆதித்யா டிவி காமெடி பார்த்தது போல வயிறுவலிக்க சிரித்தனர். ஆனால் ஸ்டீபன் அமைதியாக உட்கார்ந்து யோசித்தார். தனக்கு பிடித்த, தொட்டியில் வளர்க்கும் செடிகளை ஏதோ யோசனையாக பார்த்தவர், உடனே முகம் மலர்ந்தார். அடுத்தநாள் பள்ளியில் செடிகளை சுவர்களில் தொட்டிகளில் வளர்க்கத்தொடங்கினார்.

முதலில் வன்முறையாக நடந்துகொண்டு செடிகளை பிய்த்தெறிந்த  மாணவர்களே பின்னாளில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க தொடங்குமளவு மாறினர். க்ரீன் ப்ராங்ஸ் மெஷின் என்ற என்ஜிஓவைத் தொடங்கி இதனை தொடர்ச்சியாக செய்து வந்த ஸ்டீபனை இச்செயல்பாடு அமெரிக்காவின் சூப்பர் ஆசிரியராக மாற்றியதோடு, 2015 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த ஆசிரியர் போட்டியில் இறுதிப்பட்டியலில் இடம்பெற வைத்தது. வெறும் செடிகள் என்றில்லாமல், செடிகளிலிருந்து பெறும் காய்கறிகளைக் கொண்டு 450 மாணவர்களின் உணவிட்டு ஊட்டச்சத்துக்குறைவையும் போக்க நினைத்தது ஸ்டீபனின் தாயுள்ளத்திற்கு சான்று. வாழ்வது, கற்பது, சம்பாதிப்பது என்பதுதான் ஸ்டீபனின் கொள்கை

"முதலில் மாற்றவேண்டும் என நினைத்தது வருகைப்பதிவைத்தான். முதலில் 40% -93% என மாற்றியது முக்கிய நிகழ்வு. மாணவர்கள் செடிகளை தொட்டு, பார்த்து, விளையாடி, பேசி, அந்த காய்கறிகளை உண்ணுவது அவர்களின் உளவியலில் பெரும் மாற்றத்தை தந்துள்ளது. இன்று 25 ஆயிரம் பவுண்டுகள் காய்கறி விளைச்சலைத் தொட்டிருக்கிறோம்" என்று பேசும் ஸ்டீபன், 2200 நபர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தந்ததோடு சிஎன்என், டெட், ஏபிசி, வால்ஸ்ட்ரீட் ஜர்னல் ஆகிய ஊடங்களில் உரையாற்றி பசுமை பள்ளிகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார். காய்கறியில் கல்வியாளர்.  

நன்றி: முத்தாரம் வார இதழ்