இளைஞர்களின் எமன் Bluwhale கேம்!




இளைஞர்களின் எமன் Bluwhale கேம்! -ச.அன்பரசு



உலக நாடுகளுக்கு டெரரிஸ்ட், மானியம், வேலை என்பதை விட இன்று முக்கியமான பிரச்னை ப்ளூவேல். ஏதோ புதிய வைரஸ் காய்ச்சல் என நினைத்துவிடாதீர்கள்.இது அதைவிட பயங்கரம்.  ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளை 50 நாட்களில் பெரும் பீதிக்குள்ளாக்கிய அதிகொடூர தற்கொலை கேம்தான் இது. தற்போது இந்தியாவிலும் என்ட்ரியாகி, சிறுவன் ஒருவனையும் காவு வாங்கிவிட்டது.

மும்பையின் அந்தேரியைச் சேர்ந்த  ஒன்பதாவது படிக்கும் சிறுவன், அன்று ஸ்கூலுக்கு வரவில்லை. நண்பன் போன் செய்து கேட்டதற்கு, நான் கேம் விளையாடிக்கொண்டிருக்கிறேன். நாளைக்குத்தான் ஸ்கூலுக்கு வருவேன் என்று கூறியிருக்கிறான். நண்பர்கள் அதனை ஜாலியாக எடுத்துகொண்டுவிட்டனர். ஆனால் மேட்டர் செம சீரியஸானது அன்று மாலைதான்.  மாலை 5 மணிக்கு வீட்டின் 5 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டபோதுதான் அவன் சோஷியல் மீடியாவில் விளையாடியது ப்ளூவேல் எனும் ஆன்லைன் தற்கொலை விளையாட்டு என்பது அவன் பெற்றோர் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் ப்ளூகேமால் உயிரிழந்திருக்கும் முதல் சிறுவன் இவன்தான்.

2013 ஆம் ஆண்டு  பிலிப் புடெய்கின் என்றன ரஷ்ய இளைஞரின் சைத்தான் மூளையில் உருவான சூசைட்கேம்தான் ப்ளூவேல். முதலில் சமூகவலைதளத்தில் ரிலீசான கேமை நன்கு ட்யூன் செய்து குரூரமான வீடியோக்களை இணைத்து விளம்பரம் செய்தார். ஆன்லைனில் டீன் ஏஜ் இளைஞர்களிடம் செம பிக்கப்பாக, தனிமையிலுள்ள சிறுவர்கள், இளைஞர்கள் ப்ளூவேலை விளையாட ஆரம்பித்தனர். 50 ஆவது நாள் கிளைமேக்ஸில் ரஷ்யாவில் இறந்தவர்கள் மட்டும் நூறுபேர்களுக்கும் மேல். இறப்பு தொடர்ந்து அதிகரிக்க, பிலிப்பின் கையில் காப்பு மாட்டி, 16 பள்ளிச்சிறுமிகளின் தற்கொலைக்கு தூண்டுதல் என காரணம் என கோர்ட்டில் அரசு குற்றம் சாட்ட, பிலிப் அசரவேயில்லை.

"நான் ப்ளூவேல் கேமை மகிழ்ச்சியாக பிளான் செய்தே உருவாக்கினேன். மற்றவர்களும் இதனை விரைவிலேயே புரிந்துகொள்வார்கள். இறந்தவர்கள் அனைவருக்கும் அவர்களின் பிராக்டிகல் வாழ்வில் கிடைக்காத அன்பு, கவனம், புரிந்துகொள்ளலை நான் கொடுத்தேன். மேலும் இது ஒருவகையான சமூக சுத்திகரிப்பு" என பகீர் வாக்குமூலம் கொடுத்தார் பிலிப். கோர்ட் தற்போது பிலிப்புக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது. செயின்ட்பீட்டர்ஸ்பர்கின் கிரெஸ்டி ஜெயிலில் களி தின்றுவரும் பிலிப்பை அடையாளம் தெரிந்தபிறகு ஜெயிலுக்கு லவ் லெட்டர்களும் எக்கச்சக்கமாக குவிந்து வருகிறதை என்ன செய்கிறதென தடுமாறிவருகிறார்கள் ஜெயில் அதிகாரிகள்.

"நான் முதலில் இந்த கேமின் சுவாரசியத்தினால் ஈர்க்கப்பட்டு உடனே இன்ஸ்டால் செய்துவிட்டேன். ஆனால் கேமின் டாஸ்குகள் என்னை நானே காயப்படுத்திக்கொள்வதை தூண்டியதால் உடனே கேமை நீக்கிவிட்டேன். டாஸ்குகளை செய்ய ஆரம்பித்துவிட்டால் அதிலிருந்து மீள்வது மிக சிரமம்" என்கிறார் வீடியோகேம் பிரியரான அருண்.


என்ன காரணம்?
"குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் தனிமையும், மனஅழுத்தமும்தான் முக்கிய காரணம். நிஜவாழ்வு தராத த்ரில், சாகச உணர்வு போன்ற விஷயங்களை ப்ளூவேல் கேம் பக்கா பேக்கேஜாக தருவதால் ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் ஜெட் வேகத்தில் பரவி வருகிறதுஎன்கிறார் உளவியலாளர் சீமா ஹிங்கோரனி. "தன்னைப்பற்றிய கேள்விகளை எழுப்பி, அதற்கான விடைதேடும் தத்தளிப்பில் உடலும் மனமும் ஒன்றுக்கொன்று ஓவர்டேக் எடுத்து பாயும் டீன்ஏஜ் பருவத்தினரை மிகச்சரியாக குறிவைத்து சிதைக்கிறது ஆன்லைன் விளையாட்டான ப்ளூவேல். உடனே இதனை பெற்றோர்கள்  கவனித்து தடுப்பது அவசியம்" என்கிறார் ஃபோர்டீஸ் மருத்துவமனையின் சமீர் பாரிக்.
எந்த ஒரு விஷயத்திற்கும் மறுபக்கம் உண்டு. இணையத்தில் அலர்டாக இருந்தால் டீன்ஏஜ் பருவத்தினரின் ஃப்யூச்சரை பாதுகாக்கலாம்.

என்ன செய்யலாம்?

பெற்றோர்கள் குழந்தைகளிடம் தினசரி 20 நிமிடங்களாகவது மனம் விட்டு நண்பர்களாக பேசுவது அவசியம்.

அவர்களின் உடலில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் உடனடியாக கவனித்து அதனை தீர்ப்பது அவசியம். வயிறு சம்பந்தமான பிரச்னை என்றால், அது பதட்டத்தின் அறிகுறி.


மனதோடு குரூர விளையாட்டு!

தினசரி ஒன்று என 50 நாட்களுக்கு 50 டாஸ்க்குகள். டாஸ்க்கை முடித்தவுடன் போட்டோ/வீடியோ எடுத்து ப்ளூவேலின் வழிகாட்டிக்கு அனுப்பவேண்டும். கேமை போனில் அல்லது ஆன்லைனில் விளையாடலாம். உங்கள் வழிகாட்டி யார் என அறிய #bluewhalechallenge, #curatorfindme, #i_am_whale என்று மெசேஜ் அனுப்பவேண்டும். அநாமதேய வழிகாட்டி ஃபிக்ஸ் ஆனதும் கேம் தொடங்கும். முதலில் தினசரி டாஸ்குகள் பாடல் கேட்பது, நடுராத்திரி எழுந்து குரூர வீடியோக்களை பார்ப்பது என லைட்டாக தொடங்கும். பிறகு நரம்புகளை ரேஸரால் லைட்டாக கட் செய்யுங்கள், நாள் முழுவதும் குரூர வீடியோக்களை பாருங்கள் என ட்ரீட்மெண்ட் தொடரும். கிளைமேக்ஸில் விளையாடுபவர் மாடியிலிருந்து குதித்தால் கேம் ஓவர். உலகெங்கும் இதுவரை பறிபோன உயிர்களின் எண்ணிக்கை 130.


உதவிக்கு வரலாமா?

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூவேல் குறித்து யாரேனும் #bluewhalechallenge என்று டைப் செய்து தேடினால்உடனே உங்களுக்கு உதவி தேவையா? எனக்கேட்டு தற்கொலைக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அமைப்புகளின் எண்கள் காட்டப்படுகின்றன.


நன்றி: குங்குமம் வார இதழ் 


   





   




பிரபலமான இடுகைகள்