இன்டர்வியூ டிப்ஸ் கேட்கவேண்டிய அவசிய கேள்விகள்! -ச.அன்பரசு


இன்டர்வியூ டிப்ஸ்

கேட்கவேண்டிய அவசிய கேள்விகள்! -ச.அன்பரசு

மதிய லன்சுக்கு மணக்க மணக்க பாரதி மெஸ் வெஜ் பிரியாணி. தட்டில் ஆனியன் இல்லை அப்படியே விட்டுவிடுவீர்களா என்ன? அடிச்சு பிடிச்சுனாலும் கேட்டு வாங்கி சாப்பிட்டு தமிழன் பாரம்பரியத்தை காப்பாற்றுவோமா இல்லையா? இதே துடிப்பும் துறுதுறுப்பும் இன்டர்வியூவுக்கும் அதிஅவசியம். பதிலைக் கடந்து சில கேள்விகளையும் கேட்பது வேலை மீது நமக்கிருக்கும் ஆர்வத்தைக் காட்ட சூப்பர் வழியும் கூட.

இந்த வேலையின் தேவை என்ன?

இன்டர்வியூ என்பது ஹெச்ஆரை இம்ரஸ் செய்வது தாண்டி நீங்கள் வேலைக்கு பொருத்தமான டேலன்ட்டை கொண்டவர் என ப்ரூஃப் செய்யும் இடமும் கூட. "வேலையின் தேவை குறித்து கேட்பது மூலம் வேலையிலிருந்து முன்னவர் விலகியதற்கான காரணத்தையும் பிஸினஸின் நிலை குறித்தும் அறியலாம்" என்கிறார் வேலைவாய்ப்பு கவுன்சிலர் ஏஞ்சலா கோப்லாண்ட்.

உங்கள் நிறுவனத்தில் ஒருவர் தொடர்ந்து பணிபுரிவதற்கான காரணம் என்ன?

இன்று பல நிறுவனங்களும் பத்து பொருத்தங்களும் நிறைந்துள்ள பக்கா ஆபீஸ் எங்களுடையது என ஆன்லைனில் அடைமழையாய் ஆட்கள் தேடி விளம்பரம் செய்யும் நிலையில் இப்படியொரு கேள்வியை  கேட்டால், அவர்களுக்கு ஜில்லென ஆகிவிடும். "இக்கேள்வி மூலம் அவர்களின் வேலை முறை, பணிச்சூழல், இன்க்ரிமெண்ட் குறித்து அறிந்துகொண்டு அப்ளாஸ் அள்ளலாம்" என்கிறார் அஃபெக்ட் நிறுவனத்தின் ஹெச்ஆரான ஏப்ரல் பாய்கின் ஹட்ச்கோ.

வேலைக்கு சேர்ந்த ஓராண்டில் நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன?

ரெடிமேட் ஷர்ட்டுக்கும், டெய்லரிடம் அளவெடுத்து தைப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான். "ஹெச்ஆர் என்ன எதிர்பார்க்கிறார் என முதலிலேயே கேட்டுத் தெரிந்துகொண்டால் வேலை செய்யும் ஸ்டைல் உள்பட பலதையும் ஈஸியாக ஃபிக்ஸ் செய்யலாம்" என்கிறார் வேலைவாய்ப்பு கவுன்சிலரான அமண்டா அகஸ்டின்.

வேலைக்கு தகுதியானவரா என்பதில் நான் கூறிய பதில்களில் சந்தேகமிருக்கிறதா?

தைரியமாக இப்படி ஒரு கேள்வியை நீங்கள் கேட்பதே பெரிய விஷயம். வேலை கிடைக்கிறதோ இல்லையோ உங்களது இன்டர்வியூ தரம் பற்றிய மதிப்பான ரிவ்யூ கிடைப்பது லாபம்தானே? "வேலையில் கவனமும் பொறுப்பாக இருக்கிறீர்கள் என்ற கோணத்தில் நேர்காணல் செய்பவரின் கவனத்தையும் மேக்னட்டாய் ஈர்க்க முடியும்" என்கிறார் வேலைவாய்ப்பு வல்லுநர் அகஸ்டின்.

தேர்ந்தெடுக்கப்படுவது பற்றி அறிய உங்களுடன் நான் தொடர்புகொள்ளலாமா?

சட்னிக்கு தேங்காய் போல மிக அவசியமான கேள்வி. இன்டர்வியூ செல்பவர்கள் பலரும் கச்சிதமாக மறந்துவிடுவது இக்கேள்வியைத்தான். எனவே முடிவெடுப்பதற்கான டைம் எவ்வளவு? அது குறித்து அறிய நேர்காணல் செய்பவரின் இமெயில், போன் போன்றவற்றை தொடர்புகொள்ளலாமா? என முதலிலேயே கேட்பது உங்களின் சாணக்கிய புத்திசாலித்தனம்.


நன்றி: தினகரன் கல்வி வேலைவாய்ப்பு மலர்

பிரபலமான இடுகைகள்