அசுரகுலம் - ஸ்டான்ஃபோர்டு சிறை பரிசோதனை!






Related image


ஸ்டான்ஃபோர்டு சிறை பரிசோதனை!

1973 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனை. ஆனால் இன்றுவரையும் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது. சோதனையின் கருத்து சிம்பிள். அதிகாரம், பதவி என்பது மனிதர்களின் மனதை எப்படி மாற்றுகிறது என்பதே.

இந்த சோதனையின் சூத்திரதாரி பிலிப் ஸிம்பர்டோ. இதற்காக மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்தார். மொத்தம் இருபத்தொரு மாணவர்கள். பத்து கைதிகள், பதினொரு காவலர்கள்.

இதற்காக பிலிப் தேர்வு செய்த முறையே அதிரடியானது. நேரடியாக பெயர் கொடுத்த மாணவர்களின் வீட்டிலேயே சென்று எதையும் கூறாமல் அவர்களை கூட்டி வந்தனர். உடைகளை மாற்றச்சொல்லி பல்கலையின் கீழ்தளத்தில் அடைத்து வைத்தனர். இது சாதாரண சோதனையல்ல. மொத்தம் 60 நாட்கள் அங்கே கைதியாக, போலீசாக இருக்க வேண்டும்.

சிறையைப் போன்ற செட்டில் கைதிகளும், போலீசும் தங்கினர். கைதிகள் அனைவருக்கும் பெயர் கிடையாது. எண்கள் மட்டுமே. போலீஸ்காரர்கள் பிறரோடு கண்பார்க்க கூடாது என்பதற்காக கூலிங்கிளாஸ் கொடுக்கப்பட்டது. அதனைக் கழற்றக்கூடாது என்பதும் ஆய்வு நிபந்தனை.


Image result for stanford prison experiment

இரண்டே மணிநேரம். கைதிகள் போலீசாரின் அடக்குமுறையால் கதற தொடங்கினர். போலீசாருக்கு கையில் விசிலும், அடிக்க லத்தியும் கூட உண்டு. ஆறு நாட்களில் இந்த சோதனை முடிவுக்கு வந்தது. போலீசுக்கான அதிகாரத்தை ருசிபார்த்த போலீஸ் மாணவர்கள், கைதிகளை நிர்வாணமாக்கி அறையில் படுக்க வைப்பது, கழிவறை செல்ல அனுமதிக்காதது, கழிவறையை கைகளால் தேய்த்து கழு வைப்பது என மாளாத கொடுமைகளை செய்ய ஆய்வு நடத்திய குழுவினரே அதிர்ச்சியாயினர்.


இத்தனைக்கும் அமெச்சூரான மாணவர்களே இப்படி நடக்கிறார்கள் என்றால் பயிற்சியளிக்கப்பட்ட போலீஸ்காரர்கள் எப்படி நடந்துகொள்வார்கள்?

அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் சிறைகளில் நடப்பதும் இதே கொடுமைகள்தான். இன்னும் சற்று தீவிரத்தன்மையுடன் நடைபெறும். அதிகாரம் நம் மூளையை எப்படி கரையானாய் அரித்து சேதப்படுத்தி வக்கிரத்தை மடைமாற்றுகிறது என்பதற்கு  இதுவே உதாரணம்.

ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: க்ரைம் அண்ட் இன்வெஸ்டிகேஷன், சிபிஎஸ்நியூஸ்















பிரபலமான இடுகைகள்