வினோத ஆராய்ச்சிகள்! - படித்து ரசியுங்கள்!
வினோத ஆராய்ச்சிகள்!
புற்றுநோய், தைராய்டு என பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்தாலும், இப்படியெல்லாமா ஆராய்ச்சி என நாம் வியக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றில் சில ...
பெயரைச் சொன்னால் எக்ஸ்ட்ரா பால்!
இங்கிலாந்தில் நியூகேஸ்டில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கேத்தரின் டக்ளஸ் மற்றும் பீட்டர் ரௌலின்சன் ஆகியோர் பசுக்களின் பாலை அதிகரிக்க முயற்சித்தனர்.
பத்து மாதங்களில் 7,500 லிட்டர் பாலை பசுக்கள் தந்தது என்றால், இவர்களின் ஆராய்ச்சி மூலமாக 260 லிட்டர்கள் அதிகரித்தன. இதற்கு காரணம், பசுக்களுக்கு பெயர் வைத்து அழைத்ததுதான் என்று சொல்லி, அனைவரையும் அசர வைத்தனர். கூட்டமாக மேய்ந்தால் பசுக்களின் பால் அளவு குறையும் என்று சொன்ன ஆய்வு முடிவுகளைப் பார்த்து பசுக்களே சிரித்துவிட்டன.
இரவு விழித்திருந்தால்...
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பீட்டர் ஜோனாசன் புதுமையான ஆராய்ச்சியைத் தொடங்கினார். அதிகாலையில் எழுபவர்கள், இரவு தூங்காமல் ஆந்தை போல வாழ்பவர்கள் ஆகியோரின் குணநலன்களை ஆராய்ந்தார்.
இதில் இரவு தூங்காதவர்கள், சமூகத்திற்கு எதிரான தன்மை கொண்டவர்களாக உள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை ஆய்வு முடிவாக அறிவித்து ஷாக் கொடுத்தார். பல்கலைக்கழக மாணவர்கள் 250 பேரை ஆராய்ந்ததன் முடிவு இது. இதற்கு காரணங்களாக, இரவில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை சுட்டிக்காட்டினார்.
அதோடு, ”வேட்டையாடுவதற்காக சிங்கம், தேள் போன்றவை கூட இரவில்தான் எழுகின்றன ” என்றும் கூறினார்.
இசை வாழ வைக்கும்!
இசை எங்கிருந்து பிறக்கிறது? என்பது மட்டுமல்ல; இசை வாழ வைக்குமா என்பதும் விவாதத்திற்குரிய கேள்விதான். டோக்கியோவிலுள்ள ஜூன்டென்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மசாடேரு உச்சியாமா, இதுகுறித்து ஆராய்ந்தார். மாற்றிப் பொருத்தப்பட்ட இதயங்களைக் கொண்ட எலிகளை, பல நாட்கள் கிளாசிக் இசையைக் கேட்க வைத்தார். இதனால் அவை, 26, 20, 11, 7 ஆகிய நாட்கள், உயிர்வாழ்ந்தன. இசை ஆராய்ச்சி வென்றதோ இல்லையோ, அதற்கு நான்கு எலிகள் பலியானது நிஜம்.
நெருப்பு அலாரமாக உணவு!
சுஷி உணவுடன் சேர்த்து உண்ணப்படுவது, வசாபி எனும் உணவுப்பொருள். இதில் ஐசோதையோசயனைட் என்ற வேதிப்பொருள் உள்ளது. ஜப்பானுக்கு வெளியே வசாபி, அவ்வளவு பிரபலம் கிடையாது. இதனை, ஷிகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நெருப்பு அலாரமாகப் பயன்படுத்த முயற்சித்தனர்.
காது கேளாதோரிடம் நெருப்பு அலாரமாகப் பயன்படுத்தியபோது, வசாபி மிகச்சிறப்பாக செயல்பட்டது. நெருப்பு பற்றினால், வசாபியின் மணம் பரவுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக லாவண்டர், பெப்பர்மின்ட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆனால், வசாபிக்கு நிகராக மக்களை எதுவும் அலர்ட் செய்யவில்லை.
மதுவிலிருந்து வைரம்!
ப்ளூ அகாவ்(blue agave) எனும் தாவரத்திலிருந்து பெறப்படும் மதுவகைக்கும்,வைரத்திற்கும் என்ன தொடர்பு? இரண்டிற்கும் நேரடியாக தொடர்பில்லை. டெக்குலாவிலிருந்து வைரத்தை செயற்கை முறையில் தயாரிக்கும் முயற்சியை ஆராய்ச்சியாளர் ஜேவியர் மொரலெஸ் செய்தார். இதன் விளைவாக, மெத்தனால், அசிடோன், எத்தனால் ஆகியவற்றிலிருந்து வைரத்தை தயாரிக்க முயற்சித்தனர். இம்முயற்சியில், நானோமீட்டர் அளவிலான வைரங்கள் கிடைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
- தினமலர் பட்டம்