அசுரகுலம் - சதுரங்க பலகை கொலைகாரர்!
கொலையுதிர் சாலை
குறிப்பிட்டு நாட்டு மக்கள் முட்டாள்கள், சைக்கோ கொலைகார ர்கள் என முத்திரை குத்த முடியாது. குறிப்பிட்ட சூழல், மனநிலை சிக்கல் என பலவும் ஒருவரின் வாழ்வை மாற்றுகிறது. செய்தியை மட்டுமே இங்கே சொல்லுகிறோம். தீர்ப்பு கூறுவது நோக்கமல்ல.
சதுரங்க கொலைகாரர்
ரஷ்யாவில் பிறந்த வேறுபட்ட குணாதிய கொலைகாரர், அலெக்ஸாண்டர் பிச்சுஸ்கின். ஒரே லட்சியம், ஆம் கல்வெட்டில் பொறித்துகொள்ள வேண்டியது. சதுரங்க கட்டங்கள் கறுப்பும் வெள்ளையுமாக இருக்கிறதல்லவா? அத்தனை எண்ணிக்கையில் கொலை செய்ய வேண்டும்.
பெரிதாக ஸ்கெட்ச் போட்டு பிளான் செய்யவில்லை. சிம்பிளாக குடிகாரர்களைத் தேர்ந்தெடுத்தார். கால் தரையில் பாவாத மொடாக் குடிகாரர்களை அடுத்து துவைப்பது முதல் பணி. அடுத்து அவர்களை பீட்டர் ஹெய்னாக மாறி தூக்கி வீசுவது. மனவாடு வில்லன்கள் போல ஆகாயமார்க்கமாக சென்று பாதாள சாக்கடை குழிகளில் விழுவார்கள். உடனே மின்னல் வேகத்தில் அங்கு சென்று பேண்ட் பாக்கெட்டிலிருந்து மூகமுடி நரேன் போல சுத்தி எடுத்து கழுத்தை கொத்தி எடுத்து கொல்வது அலெக்ஸின் பாணி.
செஸ் போர்டை சிம்பாலிக்காக தொங்கவிட்டு ஆட்களை கொல்ல கொல்ல அதனை கிராஸ் மார்க் போட்டுக்கொண்டு வந்தார். எனவே இவரை செஸ்போர்டு கில்லர் என பட்டப்பெயர் வைத்து பயந்துகொண்டே அழைத்தனர்.
ஃபிளாஷ்பேக் போகலாமா
அலெக்ஸ் நல்லவர்தான். எப்படி என்றால் கொலை செய்த குற்றவுணர்ச்சி அவருக்கு எப்போதுமே இருந்தது. 1992 ஆம் ஆண்டு தன் கொலைக்கணக்கைத் தொடங்கினார். அதன் விளைவாக தற்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறுவயதில் குழந்தையாக இருக்கும்போது கீழே தவறி விழுந்தவருக்கு தலையில் நல்ல அடி. அப்பிரச்னையை அவரது பெற்றோர் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டனர். அவரின் ஆளுமை மெல்ல ஆக்ரோஷமாக, பின்விளைவுகள் அறியாததாக கொலை வேட்கையாக மாறியது. 92 தொடங்கி 2001 வரை தினசரி கொலை செய்வதே தொழிலாக திரிந்தவரை 42 ஆவது கொலையின்போது கைது செய்தனர். அலெக்ஸை பேட்டி கண்டால், என் லட்சியத்தை நான் என்றோ அடைந்து விட்டேன் என மார்தட்டினார்.
கொலைபாணி
முதலில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளை பின்னாலிருந்து சர்ப்ரைசாக தாக்கினார். கொன்றார். ஆனால் இது சரிபட்டு வராது என துயரமாக தன் முடிவிலிருந்து பின்வாங்கியவருக்கு உதவியது அனாதைகள், வீடற்றவர்கள்.
இலவச வோட்கா கொடுக்கிறேன் என்று சொல்லி அவர்களுக்கு ஆசையைத் தூண்டி பேசுவது முதல் டாஸ்க். ஓகே சொல்கிறார்களா நிறைய குடிக்க வைத்து அவர்கள் குடித்த வோட்கா பாட்டிலால் மண்டையில் உண்டியல் அளவு ஓட்டை போடுவது அடுத்த டாஸ்க். பின் சுத்தியை எடுத்து மீதி கபாலத்தை உடைப்பார்.
மாஸ்கோவில் இருந்த பிட்ஸ்செவ்ஸ்கி பூங்காதான் சாரின் காரியாலயம். அங்கேதான் 50 பேர்களுக்கு மேல் கொன்று பிர்ச் மரங்களுக்கு இடையே புதைத்தார். போலீசுக்கு புகார் மேல் புகாரா குவிய மக்களே உதவுங்கள் என பிட்நோட்டிஸ் அடித்து சுவர்களில் ஒட்டி கண்டுபிடிக்க கேட்டுக்கொண்டனர். அதைப் படித்தபடி நடந்த மக்கள் கூட்டத்தில் அலெக்ஸூம் இருந்தார். சத்தமாக படித்தபடி கிளம்பிப் போனார்.
அவர் கொலை செய்வதே லட்சியமாக திரியவில்லை. வோட்கா வாங்க பணம் தேவை அல்லவா? அதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்தார். மக்கள் பொருட்களைத் தேர்ந்தெடுக்க உதவினார். பொருட்களை வாங்கியவர்களுக்கு தேங்க்ஸ் சொல்லி சில்லறைகளைக் கொடுத்தார். எப்போதும் போல பிற பணியாளர்களின் குட்புக்கிலும் இருந்தார். ஆனால் ஒரே ஒரு தப்பு செய்தார். வேலை செய்த கடை ஊழியர் பெண் மீது கண் வைத்தார். அவரை நான் வளர்த்த நாயின் கல்லறையை பார்க்க ஆசையா என கேட்டார். என்னடா இது கேனத்தமாக அலெக்ஸ் பேசுகிறாரே என்ற மிரண்ட அப்பெண், தன் மகனிடம் அலெக்ஸின் போன் நம்பரைக் கொடுத்து நான் வரவில்லை என்றால் போலீசிடம் கொடுத்து விடு என்று சொல்லிவிட்டாள்.
அலெக்ஸின் கையில் சிக்கி யார் மீண்டிருக்கிறார்? ஆனால் போலீஸ் உஷாராகி அவர் கையில் காப்பு மாட்டியது. அலெக்ஸ் அதை மாலை மரியாதை போல நினைத்து சிரித்து மகிழ்ந்தார். கொலை செய்தாயா என்று கேட்கும் முன்னரே நான்தான் கொலைகாரன் என அவராகவே ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து சதுரங்க அட்டையை பிடுங்கி பார்த்தபோது அதில் 61 கட்டங்கள் அடிக்கப்பட்டிருந்தன.
நீதிபதியிடமே ஆட்கள் கிடைத்திருந்தால் என் லட்சியம் நிறைவேறியிருக்கும் என பேசினார். ஆனால் பதிலுக்கு நீதிபதி பேசவில்லை எழுதிவிட்டார். ஆயுள் தண்டனை கிடைத்து சிறையில் கிடக்கிறார் மனிதர்.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: சீனா மார்னிங் போஸ்ட், ஆல்தட் இன்ட்ரஸ்டிங் வலைத்தளங்கள்