ஹூவெய் கம்பெனிக்கு அடுத்த சிக்கல்!
ஹூவெய் நிறுவனத்திலிருந்து கூகுள் விலகல்!
சீன நிறுவனமான ஹூவெய், அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. அதன் நிறுவனரை கைது செய்தது இருநாட்டு நல்லுறவையும் பாதித்துள்ளது. இந்நிலையில் அக்கம்பெனியின் வணிகத்தை குலைக்கும் வகையில் அடுத்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
விரைவில் ஹூவெய் போனுக்கான சேவையிலிருந்து கூகுள் விலகவுள்ளது. இதற்காகவெல்லாம் ஹூவெய் கவலைப்படவில்லை. நாளை இங்கிலாந்தில் ஹானர் 20 மாடலை வெளியிடவுள்ளது. இது இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் சாம்சங் நிறுவனத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஹூவெய்தான். கூகுளின் ஆண்ட்ராய்டை பெருமளவு பரப்பியதிலும் சீன நிறுவனமான ஹூவெய்யின் பங்கு அதிகம். இப்போது அமெரிக்க அரசின் வற்புறுத்தலால் கூகுள் தன் சேவைகளை ஹூவெய் நிறுவன போன்களில் தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூகுளின் முடிவைத் தொடர்ந்து இன்டெல், க்வால்காம் ஆகிய நிறுவனங்களும் தங்களின் தொடர்பை சீன நிறுவனங்களிடம் முறித்துக்கொள்ளவிருக்கின்றன. ஏறத்தாழ சீனாவுடனான பனிப்போரை வணிகத்திலிருந்து அமெரிக்கா தொடங்கியுள்ளது.
வேறுவழியே இல்லை. ஆண்ட்ராய்டை இனி தானே அப்டேட் செய்து கூகுளின் மெயில், யூட்யூப் ஆகிய சேவைகளுக்கு மாற்றாக சீன நிறுவனங்களைப் பயன்படுத்தும் நிலைக்கு ஹூவெய் தள்ளப்பட்டுள்ளது. தற்போது இந்நிறுவன போன்களை பயன்படுத்தும் பயனர்களும் பீதியில் உள்ளனர். இப்போது திடீரென கூகுளின் சேவைகள் தடைபட்டால் என்ன செய்வது என தடுமாற்றத்தில் உள்ளனர்.
ஹூவெய் நிறுவனத்திற்கு இங்கிலாந்தில் மட்டும் 23.6 சதவீத சந்தை உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 14.8 சதவீத வளர்ச்சி. கடந்த ஆண்டில் 206 மில்லியன் போன்களை ஹூவெய் விற்றுள்ளது. அதில் 105 மில்லியன் போன்கள் சீனாவில் விற்றுள்ளன. சீனாவில் கூகுளின் பிளே சேவைகளுக்கு தடை உள்ளது. எனவே கூகுளின் தடை பெரியளவு உள்நாட்டுச் சந்தையைப் பாதிக்காது. ஆனால் அது ஐரோப்பாவில் நடக்கும்போது, நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
இசட்டிஇ நிறுவனம் கடந்த ஆண்டு அமெரிக்க அரசின் தடையை சந்தித்து மூன்று மாதங்கள் கடுமையாக போராடியது. தற்போது அந்த நிலைமைக்கு ஹூவெய் வந்துள்ளது. தடையிலிருந்து மீண்டு வந்து இந்தியாவுக்கு 5 ஜி சேவையை வழங்கி ஜியோவுக்கு போட்டு கொடுக்குமா என பார்ப்போம் ப்ரோ...
- க்யோமா லாங்க்மா
நன்றி: சீனா மார்னிங் போஸ்ட்