குப்பையில் உடல் பாகங்களை தேடிய போலீஸ் - பட்சர் அட்டூழியம்




அசுரகுலம்

சென் யாங்ஃபெங்

சென் யாங்ஃபெங் ஒரு சீரியல் கொலைகாரர். 1983 ஆம் ஆண்டு பிறந்தவர், செய்த கொலைகளுக்காக 2003 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.

சென், சீனாவின் வென்சூ பகுதியில் பத்து பேர்களைக் கொன்றார். காரணம் , குப்பை பொறுக்குவதில் ஏற்பட்ட தகராறுகள்தான். தனக்கு தொழில் போட்டியாக இருந்தவர்களை ஜாலியாக பேசி தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அத்தனை பேர்களையும் வெண்டைக்காய் நறுக்குவது போல கொன்று நறுக்கி ஊரின் மூலை முடுக்கெங்கும் ஒவ்வொரு பார்ட்டாய் வீசி எறிவது சென்னின் வழக்கம்.

இவர் கைதானது ஆச்சரியமான நிகழ்வுதான். சென் தங்கியிருந்த வீட்டுக்கு வந்த போலீஸ், ஜஸ்ட் உங்களது சைக்கிளை சற்று நகர்த்திக்கொள்ளுங்கள் என்று கேட்கத்தான் காலிங்பெல் அழுத்தினர். ஆனால் கதவு நீக்கியபோதுதான், சென் தன் போட்டியாளரை கொன்று உப்புக்கண்டம் போட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. சென் ஆன் தி டூட்டியாக ஒரு ஆளைக் கொன்று கொண்டிருந்தார் அல்லவா? அவர்தான் சைக்கிள் ஓனரும் கூட.

சென் கைதானது தெரிந்தவுடன் வென் சூ ஏரியாவே மிரண்டு போனது. வெளியாட்கள் அங்கு வந்தாலே சந்தேகமாக பார்க்கத் தொடங்கினர். சென்னின் கைவண்ணத்தால் காணாமல் போனவர்களை மீட்க போலீஸ் பட்டபாடு சாதாரணமல்ல. மொத்தம் 229 உடல் பாகங்களை மீட்டனர். 29 பைகளில் அதனைப் போட்டு பதப்படுத்தும் திரவம் போட்டு ஊறவைத்தனர்.

சீனர்கள் புத்திசாலிகள்தான். சென், கொள்ளை திருட்டுகள் மூலமே ஆயிரத்து 600 டாலர்களை சம்பாதித்திருந்தார். அதன் ஒன்பது மடங்கு பணத்தை இறந்தவர்களின் உறவினர்களுக்கு தரவேண்டும் என வென்சூ நகர கோர்ட் தீர்ப்பளித்து, சென்னுக்கு மரணதண்டனை வழங்கியது.


தொடக்கப்பள்ளி படிக்கும்போது படிப்பு நின்றுபோன சென்னைப் பற்றி பட்சர் என தலைப்பிட்டு ஊடகங்கள் கட்டுரைகள் எழுதினவே ஒழிய அவர் இந்த நிலைக்கு வர என்ன காரணம் என யாரும் கவலைப்படவில்லை. சின்ன சின்ன வேலைகள் செய்து பிழைத்தவருக்கு, சோம்பல் தோன்றியபோது உதவாக்கரை நண்பர் கொடுத்த ஐடியா கொள்ளை, கொலை. அதில் ருசிகண்ட சென், இருபது வயதில் பத்துகொலைகளை செய்திருந்தார்.

அந்த முயற்சியில்தான் போலீசில் மாட்டி இறந்துபோனார்.


ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: லிஸ்ட் வர்ஸ், மர்டர்பீடியா