இதுதான் எங்க சென்டிமெண்ட்!





Image result for virat kohli illustration



இதுதான் எங்க சென்டிமென்ட்!

அதிர்ஷ்டமான பேனா, தேர்வு எழுதும் இடம், தேர்வு எண் என சென்டிமெண்டாக சில விஷயங்கள் நம் வாழ்க்கையில் உண்டுதானே. அப்படி டி20 விளையாட்டில் கலக்கும் சில வீரர்களின் சென்டிமெண்ட் பழக்கங்கள் இதோ!...




Image result for dhoni illustration


தோனி

ராஞ்சி தலைவனான தோனி, சொல்லியடிக்கும் சென்னை அணித்தலைவர். ஹெலிகாப்டர் ஷாட் முதல் நொடியில் துல்லியமான ஸ்டம்பிங் வரை சாதிப்பவர், எப்போதும் ஏழாம் எண் ஜெர்சியை மட்டுமே அணிவார். இந்திய அணியிலும், டி20 யிலும் கூட ஏழு என்ற எண் மாறவே மாறாது. ஜூலை 7 அன்று பிறந்தவர் என்பதுவேறு சென்டிமென்டாக பொருந்த, ஏழு என்றால் 'தோனி' என குதூகலமாக ஆர்ப்பரிக்கிறது ரசிகர் படை.

விராட் கோஹ்லி

அணிவீரர்கள் சொதப்புகிறார்களா? அணியின் நம்பிக்கை சரசரவென சரிகிறதா? அத்தனை அவநம்பிக்கைகளுக்கும் பூஸ்ட் ஏற்றி, வெற்றி உரம் பாய்ச்சி வெல்வது பெங்களூர் கேப்டனான விராட் கோஹ்லியின் பாணி. அனைத்து ஆட்டங்களிலும் அவர் சென்டிமென்டாக கருப்பு பேண்ட் ஒன்றை அணிந்திருப்பார். முதலில் காப்பு ஒன்றை அணிந்திருந்தவர், இப்போது அணிவது கருப்பு பேண்ட் மட்டுமே. அசராம அடிச்சே ஜெயிப்பாரு எங்க தல என்பது ரசிகர்களின் வாய்ஸ்.

யுவராஜ் சிங்

அணியில் இடம்பிடிக்கவும், புற்றுநோயிலிருந்து மீளவும் யுவராஜ்சிங் செய்த போராட்டங்களை நாடறியும். அத்தனையிலும் அவர் பிடிவாதமாக நம்பியது ஜெர்சி எண்ணான 12 யைத்தான். டிசம்பர் 12 என்பது, யுவராஜின் பிறந்தநாள் என்ற காரணம் போதாதா அதனை அணிந்து விளையாட? மும்பை அணிவீரரான யுவராஜ், 37 வயதிலும் நம்பிக்கையோடு விளையாடி வர அதிர்ஷ்ட எண்ணும் உதவுகிறது அவ்வளவுதான்.

ஷிகார் தவான்

மைதானத்தில் நன்றாக விளையாடினாலும், விளையாடவிட்டாலும் டெல்லி அணி வீரர் ஷிகார் தவானின் உற்சாகம், பார்ப்பவர்களுக்கு பரவசமாய் தொற்றும். என்ன காரணம்? மைதானத்தில் ஜாலியாகப் பாடல்களைப் பாடியபடி விளையாடுவதுதான். சத்தியமாக, பாடல்களை ஹம் செய்தபடி விளையாடுவதுதான், டென்ஷனைக் குறைக்கிறது என்கிறார் தவான்.

அஸ்வின்

சுழற்பந்தில் மாயாஜாலம் செய்யும் தமிழ்நாட்டு வீரர், அஸ்வின். பஞ்சாப் அணி கேப்டனாக அணியைத் தாங்குபவர், சென்டிமெண்ட் விஷயத்தில் கெட்டி. 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் அஸ்வினை பேக் இல்லாமல் எங்கும் பார்த்திருக்க முடியாது. காரணம், சென்டிமென்ட்தான். 2018 ஆம் ஆண்டு நம்பிக்கைப்படி, அதிகம் நகராமல் ஒரே இடத்தில் நிற்பதை முடிந்தவரை கடைப்பிடிக்க முயற்சிக்கிறார்.

ச.அன்பரசு

நன்றி: தினமலர் பட்டம்