டாக்சி டிரைவரின் விபச்சார வெறியாட்டம்!
அசுரகுலம்
ஹிரோகி ஹிடாகா
பெரிய கொலைகாரர் என்று சொல்லமுடியாது. நான்கு கொலைகள்தான் செய்தார். 1996 ஆம் ஆண்டு சம்பவத்தை நிகழ்த்தி புகழ்பெற்றார். 1962 ஆம் ஆண்டு பிறந்த ஹிரோகி நல்ல மாணவர்தான். ஆனால் பல்கலையில் சேர எழுதிய தேர்வு தோல்வி தர அஞ்சாதே கிருபாவாக மாறி சரக்கு போட்டு துயரத்தில் ஆழ்ந்தார். ஃபுகுகோகா பல்கலையில் சீட்டு கிடைத்தாலும் ஏனோ ஹிரோகிக்கு அது செட் ஆகவில்லை.
சோற்றுக்கு வழிவேண்டுமே? 1989 ஆம் ஆண்டு டாக்சி ஓட்டத் தொடங்கினார். வாழ்க்கை ஏதோதானோவென ஓடியது. தொண்ணூற்று ஒன்றில் திருமணம் நடந்தது. ஓராண்டிலேயே குழந்தை பிறந்தது. ஜாதகத்தில் சந்திரன் நீச்சமானாரா என்று தெரியவில்லை. ஹிரோகியின் மனைவி, மனநிலை பிறழ்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன்பின் ஹிரோகிக்குள் உள்ளிருந்த சாத்தான் சுவர் ஏறிக் குதித்தார். 1996 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் செக்சுக்கான என அணுகிய நான்கு பெண்களைப் போட்டுத்தள்ளினார். சும்மாயிருப்பார்களா ஜப்பான் போலீஸ். வளைத்து பிடித்தார்கள். கொலையோடு பெண்களிடம் 1, 20, 000 டாலர்களை ஆட்டையப் போட்டிருந்ததைக் கண்டுபிடித்து தங்கள் பாக்கெட்டில் சேமித்து கொண்டனர்.
கொலை செய்தார் என்றாலே சரிதான். தூக்கு தண்டனை 2000 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்டது. வாழ்க்கை போதும் என முடிவு செய்தார் போல. அப்பீல் கூட செய்யவில்லை. அப்படி இப்படி என அலைபாய்ந்த தூக்கு தண்டனை 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
16 - 40 வயதிலான நான்கு பெண்களை ஐந்து மாதங்களில் கொன்று ஹிரோஷிமா நகரில் திசைக்கொன்றாக வீசி எறிந்தார். நாற்பத்து நான்கு வயதில் கொலைகளை செய்து மாட்டிக்கொள்வோம் என்று தெரிந்தும் சிறைக்குச் சென்று இறந்துபோனவரின் மனநிலை, பிரச்னை என்ன என்று கேட்க யாருமே கிடையாது என்பதை விட வேறென்ன அவலம் ஒருவருக்கு நேரும் சொல்லுங்கள்.
ஆக்கம் - பொன்னையன் சேகர்
நன்றி: க்ரைம்பீடியா, வீக்கிப்பீடியா