அகிரா நிஷிகுச்சி - ஜப்பான் காவல்துறையை மாற்றிய கொலைகாரர்
அசுரகுலம்
அகிரா நிஷிகுச்சி
1925 ஆம் ஆண்டு பிறந்த அகிரா, ஜப்பான் நாட்டின் காவல்துறை சீர்த்திருத்தங்களை செய்ய உதவிய சீரியல் கொலைகாரர். இத்தனைக்கும எத்தனை ஆண்டுகள் க்ரைம் வரலாறு இவருக்குண்டு? இரண்டே ஆண்டுகள்தான். 1963 - 1964 வரையிலான இரண்டு ஆண்டுகளில் ஜப்பான் மக்களுக்கு பயம் என்றால் என்பதை மனதில் உணரவைத்த ஆளுமை சார்தான்.
குற்றத்தடம்
லண்டனைச் சேர்ந்த ஜான் ஜார்ஜ் ஹைக் எனும் குற்றவாளியைப் பின்பற்றிய பாணி அகிராவுடையது. பெரிய குற்றவாளி என சொல்ல முடியாது. சின்ன வழிப்பறி, கொள்ளைகள் என்று தொடங்கி கொலைவரை சென்றுவிட்டார் அகிரா. சில நூறு டாலர்களுக்காக ஐந்து நபர்களை கொன்று விட்டார் என அறிந்தபோது தேசமே திகிலில் உறைந்துபோனது.
ஜப்பான் நாட்டின் சிறுபான்மை இனத்தில் பிறந்தவர்தான் அகிரா. 1963 ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு முன்பு இவரின் குற்றங்கள் பெரியளவு கண்டுகொள்ளப்படவில்லை. அகிரா கத்தியால் குத்தி செய்த இரு கொலைகளிலும் கூட சந்தேகப்படுவதற்கு வாய்ப்பு இருந்ததே ஒழிய அவரை போலீஸ் கூட சந்தேகப்படவில்லை. சாரின் பவ்யம், பாவனையான முகம் அப்படி தோற்றத்தைக் கொடுத்தது. இரண்டு ட்ரக் டிரைவர்களை 750 டாலர்கள் பணத்திற்காக போட்டுத்தள்ளினார் அகிரா.
நன்கு மரங்கள் அடர்ந்த பகுதியில் வண்டியை நிறுத்த வைத்தார். நன்கு மூச்சை இழுத்துவிட்டு பாக்கெட்டிலிருந்து கத்தியை சுருக்காக உருவி, டிரைவரின் வயிற்றில் செருக, டிரைவர் கண்ணில் வலியின் வேதனையைப் பார்த்தார். அதற்காக கத்தியை பேங்க் லாக்கர் போல அங்கேயே வைக்க முடியுமா என்ன? கத்தியை வயிற்றிலிருந்து பிடுங்கிக்கொண்டு ட்ரைவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
அகிராவை தேவை என போஸ்டர் அடித்து போலீஸ் ஒட்டியது. அவர் கவலைப்படவில்லை. அவர் பாட்டுக்கு நாடு முழுக்க ஜாலியாக சுற்றத் தொடங்கினார்.
ஜப்பானின் ஹமாமாட்சு பகுதியிலிருந்த ஹோட்டலில் தங்கிய அகிரா, வேலையைக் கைவிட்டதால் காசுக்குத் தவித்தார். ஹோட்டல் பில்லை பைசல் செய்யவேண்டுமே? வேறுவழியின்றி வாடகை கேட்ட மேலாளரையும் அவரது தாயையும் கொன்றார். இருவரின் உடல்களும் 1963 ஆம் ஆண்டு நவ.18 அன்று கண்டெடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்து அகிரா தப்பித்து ஓடியிருந்தார்.
டிச.29 அன்று டோக்கியோவில் முதியவரைக் கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்திருந்தார் அகிரா. போலீசை அகிரா ஒரு பொருட்டாகவே மதிக்காமல் முடிஞ்சா இவனப்பிடி என சுற்றிக்கொண்டிருந்தார். இவரைப் போலீசில் பிடித்துக்கொடுத்தது பதினொரு வயது சிறுமிதான். தேவை என மூத்திரச்சந்தில் ஒட்டியிருந்த போஸ்டரைப் பார்த்து போலீசுக்கு சரியான நேரத்தில் தகவல் கொடுத்து அகிராவை சிறையில் தள்ளினாள் சிறுமி.
ஜப்பான் ஒரு பாதுகாப்பான தேசம், அதன் போலீஸ்துறை உலகிலேயே பெஸ்ட், நகரங்கள் குற்றங்களே இல்லாமல் இருந்தன என்ற மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்தார் அகிரா. இவரது வழக்குக்குப் பிறகே போலீஸ்துறையில் மெட்ரோபாலிடன் கேஸ் சிஸ்டம் என்ற முறை அமலாக்கப்பட்டது. அதிக வழக்குகள் கொண்ட குற்றவாளிகளை இம்முறையில் பிடித்து சிறையில் தள்ளினர். இதற்கான தொழில்நுட்ப உதவிகள் அமெரிக்காவின் எஃப்பிஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து யார்டு தரத்தில் உருவாயின.
அகிராவின் வழக்கு உலக ஊடகங்களை கவர்ந்து இழுத்தது. சீரியல் கொலைகார ர்களின் செலிபிரிட்டியாக ஊடகங்களில் பிரபலமானவர் இவரே. பிளாக் கோல்டு மெடலிஸ்ட் என்ற பெயரும் இவருக்கு வழங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு அகிரா தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார்.
Vengeance Is Mine இந்நூல் அகிராவின் வாழ்க்கையை பின்பற்றி எழுதப்பட்டு பல்வேறு விருதுகளைப் பெற்றது.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: மர்டர்பீடியா, அப்சொல்யூட் க்ரைம், விக்கிப்பீடியா