அசுரகுலம்: ஜப்பானைக் குலைக்கும் மனநிலை நோய்!
அசுரகுலம்
ஹிக்கிகோமோரி
ஜப்பானில் இளைஞர்களை ஆட்டிப்படைத்த இன்றும் நடப்பிலுள்ள மனநிலைக்கோளாறு இது. குறிப்பிட்ட துறையிலுள்ள இளைஞர்கள் தன் துறை சார்ந்து சாதிக்க ஏதுமில்லை என்ற நினைப்பு தோன்றினால் முடிந்தது. வீடு புகுந்து கதவைச் சாத்திக்கொண்டு ஆறுமாதம் காமிக், அனிமே என பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதில் அவர்களுக்கு நம்பிக்கை தோன்றினால் திரும்ப சமூகத்திற்கு தன் கதவுகளைத் திறப்பார்கள். இல்லையெனில் சிக்கல்தான். அவர்களுக்கும் பிறருக்கும்.
கடந்த பிப்ரவரியில் வந்த ஜப்பான் டைம்ஸ் செய்திப்படி, அங்கு ஹிக்கிகோமோரி பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்திற்கும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமா? 6,13,000.
இந்த பாதிப்பு பதினைந்து வயதிலிருந்து தொடங்குகிறது. 2015 ஆம்ஆண்டு ஆய்வுப்படி 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் இப்பாதிப்பில் சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மனநிலை பாதிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம்.
பள்ளிக்கோ, வேலைக்கோ செல்லாமல் வீட்டிலேயே ஆறுமாதம் அடைந்து கிடக்கும் பாதிப்பு வயது வந்தவர்களுக்கும் உள்ளது. இது பெரும் சமூக பாதிப்பாக மாறி வருகிறது என்கிறார் நலத்துறை அமைச்சர் டகுமி நெமோடோ.
இதில் பாதிக்கப்பட்ட ஆண்களின் சதவீதம் 76.6%. இது 5 ஆயிரம் வீடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் வழியாக தெரிய வந்துள்ளது. ஹிக்கிகோமோரி பாதிப்புள்ளவர்கள் தங்களின் பெற்றோரின் நிதியுதவி சார்ந்தே இருக்க முடியும். தனியாக ஆறு மாதம் சாப்பிட்டு இருப்பது நம் ஊரில் சாத்தியமா? 21.3 சதவீதம் பேர் தங்களின் உற்றார் உறவினர்களை விட்டு தனியாக வாழ்வதாக கூறியுள்ளனர்.
நாற்பதிலிருந்து நாற்பத்து நான்கு வயது கொண்டவர்கள் ஹிக்கிகோமோரி மனநிலை பாதிப்புக்கு உட்படும்போது வேலையை இழக்கின்றனர். அதுவே வாழ்க்கையைத் தொடங்கும் 24 வயது எனும்போது இம்மனநிலை மிகப்பெரும் பிரச்னையாக மாறுகிறது.
இவர்கள் பலரும் பெற்றோரின் பென்ஷன் பணத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இப்போது ஹிக்கிகோமோரி மனநிலை கொண்டவர்களுக்கு ஆதரவில்லை என்றால் அவர்கள் தனியாக மாறி இறக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: ஓவியர் பாலமுருகன்