கிரேட்டா துன்பெர்க்- இளைய போராளி
கடந்த ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் சிறுமி ஒருத்தி போராட அமர்ந்தாள். என்ன கோரிக்கை, என்ன விஷயம் என யாருக்கும் புரியவில்லை. அப்புறம் பார்த்தால் வெப்பமயமாதலுக்கான போராட்டம் அது. அரண்டு போன ஊடகம், மைக்கையும் கேமராவையும் எடுத்துக்கொண்டு ஓடிவர மெல்ல கிரேட்டா துன்பெர்க்கும், அவரது போராட்டமும் உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியது.
இதன் விளைவாகத்தான் லண்டனில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக நடந்த போராட்டமும் கூட.
கடந்த ஆகஸ்டில் துன்பெர்க் செய்த போராட்டத்திற்கு அவரது பெற்றோர், சக நண்பர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால் இன்று எட்டு மாதத்திற்கு பிறகு அவரை ஆதரிக்காத ஆட்கள் உலகிலேயே கிடையாது என்ற அளவு துன்பெர்க்கை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.
71 நாடுகளில் 700 நகரங்களுக்கு மேலாக சுற்றுச்சூழல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது எனக்கு பெரிய ஆச்சரியம் என கண்கள் மினுங்கப் பேசுகிறார் துன்பெர்க். இவரது தந்தை புகழ்பெற்ற நடிகர் எழுத்தாளர் ஸ்வெந்தா துன்பெர்க், தாய் பிரபலமான ஓபரா பாடகி. துன்பெர்க் பெரியளவு யாரையும் கவனம் ஈர்க்கும் சிறப்புகளைக் கொண்டவர் அல்ல. காலையில் ஆறு மணிக்கு பள்ளிக்குச்செல்பவள், மதியம் மூன்றுமணிக்கு வீடு திரும்புவாள்.
எங்கள் பள்ளியில் சூழல் குறித்த டாகுமென்ட்ரி படங்களைக் காட்டினார்கள். அதில் பசியில் தவிக்கும் பனிக்கரடிகள், கடலில் மிதக்கும் பிளாஸ்டிக், உருகும் பனிமலைகள் ஆகியவை என்னை அழவைத்தன. பிறருக்கு அது படமாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது தாங்கிக்கொள்ள முடியாத பிம்பமாக மனதில் பதிந்துவிட்டன. என்னால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. எனவேதான் என்னால் சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என நம்பினேனோ அதனைச் செய்துள்ளேன் என்று துணிச்சலாக பேசுகிறார் துன்பெர்க். இன்னொரு விஷயம், இவர் ஆஸ்பர்ஜெர் சின்ட்ரோம் பாதிப்பு கொண்ட குழந்தை.
இதுகுறித்த கவலையினால் பள்ளி செல்வதையை துன்பெர்க் நிறுத்திக்கொண்டார். ஆஸ்பெர்ஜர் சின்ட்ரோம் பிரச்னையால், அவரது பெற்றோர் அவரை வீட்டில் வைத்து பராமரித்தனர். சூழல் மீது அக்கறை கொண்ட பெண்ணான துன்பெர்க், பல்வேறு கேள்விகள் கேட்க அவரது பெற்றோர் ஒரே பதிலையே சொன்னார்கள். எல்லாம் சரியாகிவிடும். பொதுவான மக்களின் நம்பிக்கையே அதுதானே?
எனக்கு அவர்கள் கூறிய பதில் திருப்தி தரவில்லை. நான் நிறைய விஷயங்களை கேள்வி கேட்டுத் தெரிந்துகொண்டேன். பலரிடமும் விவாதிக்கும் பேசும் திறன் எனக்கு கிடையாது என்றவரை அவரது குடும்பத்தினர் வித்தியாசமாக பார்க்கவில்லை.
அவரது பெற்றோருக்கு துன்பெர்க்கின்கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் மகள் காட்டிய படங்கள், திரைப்படங்களைப் பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டனர்.
முதலில் எனக்கு என் மகள் கூறுவது பல விஷயங்கள் புரியவில்லை. மெல்ல அதுகுறித்து நூல்களை மகளோடு சேர்ந்து படித்துத்தான் அந்த பாதிப்புகளைப் புரிந்துகொண்டேன். இன்று நிலவும் சூழலியல் அநீதிகளை எதிர்த்து போராட அதன் பின்னரே கற்றேன். இந்த மாற்றம் சாத்தியம் என்றால் எதுதான் சாத்தியம் இல்லை என்ற நம்பிக்கை வந்துள்ளது. துன்பெர்க்கின் சிந்தனை இன்று பல நாடுகளிலும் பரவி போராட்டங்கள் நடைபெற்று வருவது ஆரோக்கியமான வழியாக எனக்கு தோன்றுகிறது என்கிறார் அவரது தந்தை ஸ்வந்தே அரேஹெனியஸ்.
போராட்டம் தொடங்கியது
முதல் நாள் 8.30 க்கு நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னே சென்றார். சூழல் தொடர்பான பேனர்கள், நோட்டீசுகளை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார். அன்று காலையில் 8.30 க்கு தொடங்கிய போராட்டம் 3 மணிவரை நீடித்தது. அன்று யாரும் துன்பெர்க்கை ஆதரிக்கவில்லை. மெல்ல அவர் குறித்த செய்தி பரவ அடுத்த நாளிலிருந்து மக்கள் அவரை நோக்கி வரத்தொடங்கினர். வேர்ல்டு எகனாமிக் பாரமில் பேசிய பேச்சும் சாதாரணமானதல்ல. உலகில் பெரும்பாலான பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதற்கான காரணமான அமைப்புகளில் வேர்ல்டு எகனாமிக் பாரமும் ஒன்று. அரசியல்வாதிகள் உலகைக் காக்க எதுவும் செய்யவில்லை. நாம் தொழில்வளர்ச்சி, வசதிகளால் முன்னேறியிருந்தாலும் அதற்காக கொடுத்த விலை மிக அதிகம் என துணிச்சலாக பேசி கைத்தட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.
அதேநேரம் அரசியல் தலைவர்கள் பலரும் இவரது முயற்சியை பாராட்டுவதை இவர் விரும்பவில்லை. அவர்கள் இதுபோன்றவர்களின் முயற்சியை பாராட்டுவதைத் தவிர்த்து வேறு எதையும் செய்ய முடியாது. காரணம், அவர்களிடம் கொடுத்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்றவில்லை. எனவே அதனை திசைமாற்ற குழந்தைகள் பள்ளி செல்லாமல் போராடுகிறார்கள் என்று பேசுகிறார்கள். குழந்தைகளாகிய நாங்கள் எங்கள் வீட்டுப்பாடங்களை செய்துவிட்டோம். ஆனால் மக்கள் பிரதிநிதிகள் அதனைச் செய்யவில்லை. நான் போராடுவது எனக்கான எதிர்காலத்திற்காக மட்டுமல்ல. நமக்கான எதிர்காலத்திற்காகவும்தான் என போட்டுத் தாக்குகிறார் துன்பெர்க்.
அதேசமயம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோலிய பொருட்களை விற்பவர்களின் லாபி, அரசியல் விஷயங்களை சமாளிப்பது இனி துன்பெர்க்கின் தோளில் விழலாம். எதாக இருந்தாலும் இளைஞர்களுக்கு சூழல் குறித்துப் போராள இளைய போராளி ஒருவர் கிடைத்திருக்கிறார். அது நல்ல விஷயம்தானே?
வளவளவென பேசாமல் குறைந்த வார்த்தைகளில் விஷயத்தை பேசும் சாமர்த்தியம் துன்பெர்க்குக்கு வந்துவிட்டது. இதுவே அத்தனை இளைஞர்களையும் ஒன்றாக இணைத்திருக்கிறது. நாமும் இதில் இணையலாம். வேறுவழியில்லை. பூமி போன்ற இரண்டாவது ஒன்று கிடையாது.
நன்றி: தி கார்டியன், டைம்ஸ் ஆப் இந்தியா
ஆங்கில மூலம் - ஜொனாதன் வாட்ஸ்