அசுரகுலம் - சோப்ராஜின் முடிவு என்ன?
சோப்ராஜ் எனும் பாம்பு!
சார்லஸ் சோப்ராஜூக்கு பாம்பு என்ற பெயரும் உண்டு. என்ன காரணம், குற்றம் செய்த இடம் ஆகட்டும் பிற இடங்கள் ஆகட்டும் அப்படியே நீரில் நழுவுவது போல செல்வதுதான் சாரின் சிறப்பம்சம்.
1976 ஆம் ஆண்டு ஜூலை 5 அன்று, சோப்ராஜ் பத்து கொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1985 ஆம் ஆண்டு இந்தியாவில் அவர் சிறை தண்டனை முடிவுக்கு வந்தது. தாய்லாந்தில் சோப்ராஜூக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அங்கே செல்ல சோப்ராஜூக்கு பைத்தியமா என்ன? சிறையில் அமைதியாக வாழ்நாளை கழித்தவருக்கு பெருமை சேர்க்க அவரது கூட்டாளிகள் முடிவு செய்தனர். பின்னே சோற்றுக்கு இல்லாமல் சிறைக்க வந்தவரா சோப்ராஜ்? அதனால், ஜாலியாக பார்ட்டி கொண்டாட முடிவு செய்தனர். பத்தாண்டு சிறை வாழ்க்கை, வாழும் வள்ளுவர், மக்களின் மனசாட்சி என கோரஸ் பாடி சரக்குடன் கொண்டாடினர். சிறையில் அதெப்படி கிடைக்கும் என பச்சைப் புள்ளையாக கேட்டால் உலகத்தை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம்.
மனிதர்கள் வாழும் நகரில் உன்னதங்களோடு ஊசல்தனங்களும் நடப்பதில்லையா? மனிதர்கள் எங்கு வசித்தாலும் அங்கு அவர்களின் குணங்களும், லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளும் பாயும், செல்லும்.
சோப்ராஜ் சக கைதிக்கு கூட தெரியாமல் சிம்பிளாக சிறிது தூக்க மருந்தை சரக்கில் கலந்து ஊற்றிவிட்டார். ஓசியாக கிடைத்தால் நீர்மோரை லிட்டர் கணக்கில் குடிக்கும் போலீஸ் சரக்கு கிடைத்தால் விடுவார்களா?
அவர்களும் தூக்கமருந்தின் விளைவாக மட்ட மல்லாக்க பெருமாளை குப்புற விழுந்து சேவிப்பவர்கள் போல கிடந்தனர். அப்புறம் என்ன சோப்ராஜ் ரிலாக்சாக சிறைக்கதவைத் திறந்து முன்வாசல் வழியாக வெளியேறினார்.
மின்னல் வேகத்தில் பிகினி பிகர்களைப் பார்க்க கிளம்பியவரை, வளைத்துபிடித்து அரஸ்ட் செய்தது போலீஸ். சிறைதண்டனை பத்து ஆண்டுகள் என தீர்ப்பு வந்தது. 1997 ஆம் ஆண்டு விடுதலையானவர் மெல்ல பிரான்சுக்கு பறந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு காத்மாண்டுவில் அவரைப் பார்த்த பத்திரிகையாளர் துப்பு கொடுக்க, மீண்டும் சிறை வாழ்க்கை. ஆயுள்தண்டனை விதிக்கப்பட சிறையில் காலம் தள்ளுகிறார் சோப்ராஜ். தி செர்பென்ட் என்ற பெயரில் பிபிசியில் இவரைப் பற்றிய நிகழ்ச்சி தயாரிக்கபட்டு வெளியானது.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: தி சன் நாளிதழ்