தவிர்க்கமுடியாத திருடனின் கதை! - திருடன் மணியன் பிள்ளை


Image result for திருடன் மணியன்பிள்ளை





திருடன் மணியன்பிள்ளை

ஜி.ஆர். இந்துகோபன்

தமிழில்: குளச்சல் மு.யூசுப்

காலச்சுவடு



Image result for திருடன் மணியன்பிள்ளை




நடிகர், பாடலாசிரியர், கல்வித்தந்தை, எழுத்தாளர், அரசியல்வாதி என பலரும் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள். அதில் பலவற்றை நாமும் படித்திருப்போம். ஆனால் இந்த காலகட்டத்தில்தான் பாலியல் தொழிலாளி, திருடன் ஆகியோரின் சுயசரிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கேரளத்தைச் சேர்ந்த மணியன்பிள்ளை நாயர் குடும்பத்தில் பிறந்த திருடர். அவரின் திருட்டு, அவர் சந்தித்த மனிதர்கள், அவரைக் காதலித்த பெண்கள், போலீஸ்காரர்கள், சிறை அனுபவம், தொழிலதிபராக மாறியது, மறுவாழ்வு காலகட்டம் என நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு உணர்ச்சிகளை வாசிப்பவரின் மனதில் எழச்செய்யும் படைப்பு.


எழுத்தாளரின் திறன், மணியன் பிள்ளையின் வாழ்க்கையை அழுந்தச்சொல்ல உதவியிருக்கிறது.


மணியன் பிள்ளையின் தந்தை மதுவருந்தி குடிநோயால் இறந்துவிட பசியால் துடிப்பவருக்கு அவரின் நாயர் ஜாதியே எமனாகும் அவலம் கண்களில் நீர்கட்டவைக்கிறது.

அவரின் தந்தைக்கு சேரும்படியான சொத்தை சதி செய்து அபகரிக்க குடும்பமே அந்த இடத்தில் வாழ முடியாமல் வேறிடம் நோக்கி போகும் காட்சியை விளக்குவது, சோறின்றி கிறங்கி படுத்திருப்பது, உறவினர்கள் உதவாத நிலை ஆகிய இளம் வயது அனுபவங்கள் யாரின் உள்ளத்தையும் நொறுக்குவன.


திருட்டு அனுபவங்களை மிகச்சுவாரசியமாகவே எழுதியிருக்கிறார். இதனால் தொடக்கத்திலேயே அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படும் வாழ்க்கை ஆபத்து என எச்சரித்து திருடன் வாழ்க்கை கூடாது என சொல்லியே தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார் மணியன் பிள்ளை.


திருடன் வாழ்க்கையில் என்ன இருக்கும்? பணம், பொன்,பெண். அத்தனையும் இக்கதையிலும் இருக்கிறது. கூடவே நெஞ்சம் நிறைந்த மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதே நூலை சிறந்த படைப்பாக மாற்றுகிறது.

மெகருன்னிசா, மாலா, யேபு, சேச்சி, கிறிஸ்தவ பெண்கள் இருவர், தியேட்டருக்கு வெளியில் சந்திக்கும் பெண், சுபைதா அக்கா, லாட்ஜில் சந்திக்கும் பெண் என மணியன் பிள்ளையின் வாழ்வில் வரும் பெண்கள் அனைவருமே மிகச்சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.


திருடன் என்றால் தனக்கான சந்தோஷம் தாண்டி எதையும் யோசிக்காதவன் என பலர் நினைப்பார்கள். அதையெல்லாம் தகர்த்து தான் அடிவாங்கினாலும் பரவாயில்லை என பெண்குழந்தைகள் உள்ள வீட்டுக்கு நகைகளை கொண்டு போய் வைப்பது, ஏழைகளின் வீட்டுக்கு அரிசி, பணம் கொண்டுபோய் வைப்பது என செய்த செயல்களை மணியன் தன் மனசாட்சியின் படி செய்திருக்கவேண்டும்.

754 பக்கங்களில் அழுகை, கோபம், நகைச்சுவை, விரக்தி, சந்தோஷம், வக்கிரம், கொடூரம், பீதி, அமானுஷ்யம் என அத்தனையையும் சந்தித்து விடுவது வாசகர்களுக்கு புதிய அனுபவமாகவே இருக்கும்.


திருடன் என கௌரவக்குறைவாக நினைக்காமல் படித்தீர்கள் என்றால் தவறவிடக்கூடாத வாழ்பனுவங்களை நீங்கள் இந்த நூல் வழியே பெறலாம்.


- கோமாளிமேடை டீம்

நன்றி: பாபு பெ.அகரம்