உலகை மிரட்டிய சார்லஸ் சோப்ராஜ்!


 Charles Sobhraj murdered around 20 tourists in Asia and India

சார்லஸ் சோப்ராஜ் !

பிகினி கொலைகாரர் என அழைக்கப்படும் சோப்ராஜ் இருபது சுற்றுலா பயணிகளைக் கொன்றார். இதற்காக சிறையில் அடைத்தாலும் அங்கிருந்தும் தப்பித்து போலீசாருக்கே தண்ணி காட்டிய ஆள்.

1944 ஆம் ஆண்டு வியட்நாமில் பிறந்தார் சோப்ராஜ். தந்தையற்ற சூழலில் தெருவில்தான் வறுமையான வாழ்க்கை. அவரது தாயும் இவரும்தான்  அச்சூழலில் தவித்தனர். பின்னர் தாய் பிரெஞ்சு அதிகாரியை திருமணம் செய்ய சூழல் மாறியது.


1960 ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்குச்சென்றவர், தன் குற்ற அதிகாரத்தை கட்டவிழ்த்தார். சிம்பிளாக ஆட்டோவைத் திருடினார். அதற்கு வசமாக சிக்க, சிறையில் தள்ளிவிட்டனர். பின்னர் சிறை தண்டனை அனுபவித்தவர் வெளியே வந்தார்.

பார்சி பெண் காதலைத் தூண்ட, யோசிக்கவெல்லாம் நேரமில்லை. குற்றத்திற்கு துணை வேண்டாமா? உடனே கல்யாணம். சந்தால் சம்பாக்னன் என்ற பெண்ணுடன் ஐரோப்பா முழுக்க நாடோடியாக அலைந்தனர். காசுக்கு கடத்தல், கொள்ளை என என்ன முடியுமோ அதனைச் செய்தனர். சகல சௌக்கியங்களுடன் வாழ்ந்தனர்.

1973 ஆம் ஆண்டு சிறையிலிருந்து தப்பியவர், காதல் மனைவியுடன் காபூலுக்கு வந்தார். இங்கும் சுற்றுலா பயணிகளிடம் ஆட்டையைப் போட்டு வாழ்ந்தனர். அப்போது சோப்ராஜூக்கு சந்தாலிடம் அலுப்பு தோன்றத் தொடங்கியது. வாஸ்தவம்தானே? மேரி ஆண்ட்ரி லெக்லெர்க் என்ற அம்மணியின் தொடையில் கைபோட்டார். இது பிடிக்காத சந்தால் ச்சீ தூ என துப்பிவிட்டு சோப்ராஜை விட்டு விலகினார்.

சந்தோஷமாக துடைத்துக்கொண்ட சோப்ராஜ், கவலைப்படவேயில்லை. பெண்களை தோளில் தூக்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டால் அவன் வாழ்க்கை உருப்படவே உருப்படாது என்று கூறிக்கொண்டு தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

மங்காத்தா சீட்டுக்கட்டாய் ஏராளமான பாஸ்போர்டுகளை வைத்துக்கொண்டு சுற்றினார் சோப்ராஜ். சீரியஸ் குற்றங்களின் அதிகாரம் இனிமேல்தான் ஆரம்பம்.

2

1976 ஆம் ஆண்டு சோப்ராஜ் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார். அதை ரூபாயில் சம்பாதிக்க அவருக்கென்ன பைத்தியமா? உடனே சுற்றுலாப் பயணிகளை மடக்க முடிவு செய்தார்.

இவரின் மெத்தட் மிகவும் சிம்பிள். உணவில் பேதி மாத்திரை, அல்லது உடலில் அரிப்பு ஏற்படுத்தும் மருந்தை கலப்பார். அவர்கள் பாத்ரூமுக்கு உசேன் போல்டாய் ஓடிக்கொண்டிருக்கும்போது அவர்களிடமிருந்து பணத்தை, பாஸ்போர்ட்டை கொள்ளையடிப்பார். ஆனால் இந்த முயற்சியில் பத்து பேர்களை தொலைதூரத்திற்கு கொண்டு சென்று கத்தியால் துப்பாக்கியால் கொன்றது சோப்ராஜை சிறையில் தள்ள வேண்டிய நிலையை உருவாக்கியது.

போதைப்பொருட்களை சுற்றுலா பயணிகளுக்கு கொடுத்தும் பணத்தைப் பறித்துக்கொண்டு அவர்களைக் கொன்றது பல நாடுகளில் சோப்ராஜின் பெயரை பயத்துடன் உச்சரிக்க வைத்தது.

தாய்லாந்து, நேபாளம், இந்தியா என பல்வேறு நாடுகளில் குற்றங்களைச் செய்தார். ஆனால் மாட்டியது இந்தியாவில்தான். எப்படி போலீசின் சாமர்த்தியமா?

ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அறுபது பிரெஞ்சு பயணிகளுக்கு பேதி மருந்தை கலந்தவர், டோஸைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். டெல்லியிலுள்ள விக்ரம் ஹோட்டலில் ஒரு குறிப்பிட்ட பிரெஞ்சு தம்பதிக்கு, ஹோட்டல் டேங்க் தண்ணீர் வற்றியும் பேதி நிற்கவில்லை.

என்னவொரு அவலம். உடனே நூறுக்கு போன் செய்ய போலீஸ் தண்ணீலாரியைக் கொண்டு வரவா அல்லது லத்தியை எடுத்து வரவா என யோசித்து சரி லத்தி என முடிவு செய்து சோப்ராஜை கைது செய்து சாதனை செய்தது.

அப்போதுதான் சோப்ராஜ் 24 பேர்களை கொன்று கொலை வரலாற்றினை தொடங்கியிருப்பது தெரிய வந்தது.


நிலமெல்லாம் ரத்தம்!


1975 ஆம் ஆண்டு அக்டோபரில் சோப்ராஜ் புல் ஃபார்மில் இருந்தார்.  அப்போது அமெரிக்கச் சுற்றுலா பயணி தெரசா நோல்டனை டெல்லி பிளாட்டில் போட்டுத் தள்ளினார்.

துருக்கி போதை கேங்கைச் சேர்ந்த விட்டாலி ஹக்கீம் என்பவரை அடித்து கழுத்தை உடைத்துக் கொன்றார். பாங்காக்கில் சார்லஸ் சோப்ராஜ், ஸ்டெபானி பாரி என்பவரை அடித்துக்கொன்றார். பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு,  டச்சு சுற்றுலா பயணிகளான கார்னெலியா ஹெம்கர், ஹென்ரிகஸ் பிடான்ஜா ஆகியோரைக் கொன்று உடல்களை எரித்தார்.

அதன்பின், கனடாவைச் சேர்ந்த லாரன்ட் கேரிர் மற்றும் அமெரிக்கரான கானி ப்ரோன்ஸிக் ஆகியோரின் உடல்கள் காத்மாண்டுவில் கண்டெடுக்கப்பட்டன.  பின் இஸ்ரேலைச் சேர்ந்தவரை வாரணாசியில் கொலை செய்தார்.

கொலை குறித்து கேட்டபோது, நான் கொன்றவர்கள் யாரும் நல்லவர்களில்லை என்று கூறினார் சோப்ராஜ்.

ஆக்கம்: பொன்னையன் சேகர்

நன்றி: தி சன் நாளிதழ்