ஹூவெய் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு காரணம் என்ன?


கடந்த ஜனவரியில் ஹூவெய் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர், மெங் வாங்சூ, கனடாவில் கைது செய்யப்பட்டார். அதுமுதல் இன்றுவரை ஹூவெய் மீதான அமெரிக்காவில் தாக்குதல் தனியாக தெரிகிறது. இது இதோடு நிற்காது. ஆப்போ, விவோ, மீ ஆகிய நிறுவனங்கள் மீதும் உலகளவில் தடைகள் வரலாம். தற்போது இரண்டு நிறுவனங்களை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது.


வர்த்தகப்போருக்கான முதல் படி என இதனைக் கூறலாம். இப்போது ஹூவெய், ஆண்ட்ராய்ட்டை தனக்காக மேம்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சீனாவுக்கான மார்க்கெட் தாண்டி உலகளவில் அக்கம்பெனிக்கு பெரிய சிக்கல் உள்ளது. என்விடியா, தோஷிபா, பானசோனிக் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க தடையை ஏற்று ஹூவெய் நிறுவனத்திற்கான பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்தி விட்டன.

தடைகள் நீடித்தால் ஹூவெய் வெளிநாடுகளில் உள்ள கடைகளை மூடும் நிலை ஏற்படும். கூகுளின் சேவைகள் இன்றி, போனை பிறருக்கு எப்படி விற்பது. தற்போது ஹூவெய் வைத்திருப்பவர்களின் போன்களிலும் கூகுள் தன் சேவையைக் கைவிட்டால், ஹூவெய், ஹானர் ஆகிய போன்கள் பேப்பர் வெயிட்டாகத்தான் பயன்படும்.

ஹூவெய் தொலைத்தொடர் பு நிறுவனர் ரென் ஸெங்ஃபை, விடுதலை ராணுவத்தில் தொழில்நுட்ப வல்லுநராக வேலைபார்த்து வந்தவர். இந்த பின்னணி காரணங்களினால் சீன அரசு, ஹூவெய் சாதனங்களை வைத்து நாடுகளை உளவு பார்க்கலாம் என வதந்தி பரவி வருகிறது.


அரசின் உதவியின்றி எந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் சொந்த நாடு தாண்டி வளரமுடியாது. அரசு கேட்கும் உதவிகளை டெக் நிறுவனங்கள் செய்யாவிட்டால் கம்பெனியே இருக்காது. ட்ரம்ப் எழுப்பும் சந்தேகங்கள் உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதே சந்தேகத்தை சீன அதிபர் ஜின்பிங் கூகுள் மீதும் ஆப்பிள் மீதும் மைக்ரோசாஃப்ட் மீதும் கூட எழுப்ப உரிமை உண்டு அல்லவா?

மறையும் ஹூவெய்!

2003 ஆம் ஆண்டு அமெரிக்க கம்பெனியான சிஸ்கோ, ஹூவெய் தன்னுடைய பொருட்களை காப்பியடித்ததாக வழக்கு தொடர்ந்தது. இது ஹூவெய் நிறுவனத்தின் மீதான முதல் கறை. பின்னர் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமெரிக்க செனட் சபை கூடியது. அதில் இடம்பெற்ற ஆறு உளவுத்துறை அதிகாரிகள், இசட்டிஇ, ஹூவெய் நிறுவனங்கள் அமெரிக்க மக்களை உளவு பார்க்கின்றன. எனவே அக்கம்பெனி பொருட்களை மக்கள் பயன்படுத்தவேண்டாம் என பரிந்துரைத்தனர்.

அதே ஆண்டு ஜூலை 17 அன்று, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஹூவெய் மென்பொருட்கள், வன்பொருட்கள் மீதான நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தின. பின் இங்கிலாந்து அரசு ஹூவெய் பொருட்கள் மீதான பாதுகாப்புக்குறைபாட்டைக் கூற, ஹூவெய் உடனே 2 பில்லியன் டாலர்களை செலவிட்டு அதனை சரிசெய்வதாக கூறியது.


அதே ஆண்டு ஆகஸ்டில் ட்ரம்ப் அரசு, இசட்டிஇ, ஹூவெய் பொருட்களை அரசு அமைப்புக்ள் பயன்படுத்தக்கூடாது என தடைவிதித்தது. அப்போது ஹூவெய் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு 5 ஜி சேவைகள் வழங்கும் முயற்சியில் இருந்தது. முதலில் ஆஸ்திரேலியா ஹூவெய் நிறுவனத்திற்கு தடை விதித்தது. பின்னர் நியூசிலாந்து அரசு 5 ஜி சேவைக்கான ஹூவெயின் செயல்பாட்டை சந்தேகிப்பதாக கூறியது. கனடாவில் ஹூவெய்யின் பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தடை செய்வதற்கான பரிசீலனை நடந்து வருகிறது. அப்போது அங்கு வந்த நிதித்துறை தலைவரான மெங் வாங்க்சூவை, இரானுக்கு எதிரான தடையை மீறியதாக கூறி கைது செய்தனர்.


உடனே பெயிலில் விடாததால் சீனா இதற்கான விளைவை கனடா சந்திக்கும் என அறிக்கை வெளியிட்டது. பின்னர் தாமதமாகவே அவருக்கு பெயில் கிடைத்தது. இதற்குப்பிறகு, செக்நாடு, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஹூவெய் கம்பெனி பொருட்களை விலக்குவதாக, பரிசீலனை செய்வதாக அறிவித்தன.


2019 ஆம் ஆண்டு போலந்து நாட்டு அரசு ஹூவெய் நிறுவன ஊழியரை உளவு பார்ப்பதாக கைது செய்தது.


இந்தியாவில் 5 ஜி சேவையை ஹூவெய் நிறுவனம் வழங்குவதாக கூறிவரும் நிலையில் அந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் தர்மசங்கடத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளன.

நன்றி: தி கான்வர்சேஷன்
















பிரபலமான இடுகைகள்