வணிகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் ட்ரம்ப்!










ஹூவெய் நிறுவனத்தை அமெரிக்க தற்போது கறுப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க டெக் நிறுவனங்கள் சந்தையில் முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. சீன அரசின் உளவு நிறுவனமாக ஹூவெய் செயல்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்ய, சீனாவின் மீது வர்த்தக தடை நடவடிக்கைகள் தீவிரமாயின. கூடுதலாக அந்நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவெய் மீதும் நடவடிக்கைகள் பாய்ந்தன.

அதன் உச்சமாக அந்நிறுவன தலைவரின் மகளை கனடாவில்  கைது செய்யும் அளவு பிரச்னை முற்றியது. குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவரின் மீதான தீவிரமான கைது நடவடிக்கை என்பது குறியீடாக தொடர்புடைய நாடு குறித்தும் என்பதை யாரும் அறியாதவர்களல்ல.


இதுகுறித்து ஹூவெய் நிறுவனம், இது அரசியல்ரீதியான நடவடிக்கை என்று கூறியதோடு பேச்சை இறுதிக்கு கொண்டுவந்தது.

ஹூவெய் நிறுவனத்திற்கு சீன அரசின் ஆதரவு இல்லை என மறுக்க முடியாது. ஏன் ட்ரம்ப் கூட அந்நாட்டு நிறுவனமான ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனத்திற்கு இறக்குமதி வரி விதிக்கக்கூடாது என இந்தியாவை எச்சரிக்க வில்லையா என்ன?


இன்று உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் 2 வது இடம் வகிக்கும் ஹூவெய், வயர்லெஸ் தொழில்நுட்பங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளது. அதுதொடர்பான பல்வேறு வன்பொருட்களையும் தயாரித்து வருகிறது. இது டெக் நிறுவனங்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. காரணம், ஹூவெய் தொலைத்தொடர்பு நிறுவனம் குறைவான விலையில் போன்கள், சேவைகள், தொலைத்தொடர்பு சேவைகளைக் கூட பிறநாடுகளுக்கு செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற்றுவருகிறது.

இதனை வணிகப்போட்டியாக கருதாமல் அமெரிக்கா வல்லரசுப் போட்டியாக கருதுவதால்தான் கூகுளின் சேவைகளை ஹூவெய் நிறுவனத்திற்கு தரக்கூடாது என தடுக்கும் செயல்பாட்டை மேற்கொள்கிறது. அமெரிக்க நிறுவனங்களான கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு எந்த சாதனங்களையும் செய்து வழங்கவில்லையா என்ன?

அரசின் ஆதரவின்றி எந்த நிறுவனங்களும் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி வளரமுடியாது. வணிகப்போட்டி வேறு, அரசியல் வேறு. ஆனால் அமெரிக்க அரசு உலக வணிக கழகத்தை புறக்கணித்து தனியே தன் வணிகத்தை அரங்கேற்றம் செய்ய நினைக்கிறது. ஆனால் அது தோல்வியையே தழுவும். மக்கள் எது குறைவான விலையில் கிடைக்கிறதோ அதை வாங்குவதில் தவறென்ன இருக்கிறது?

இன்று ஹூவெய் நிறுவனத்திற்கு நடந்தது நாளை சமூக வலைத்தள நிறுவனங்கான டிக்டாக் செயலி, ஆப்போ, மீ ஆகிய நிறுவனங்களுக்கும் நடக்கலாம். இதற்கு உள்நாட்டிலேயே தற்சார்பு கொண்ட தேடுபொறி, சமூகவலைத்தளங்களை உருவாக்குவதே எதிர்காலத்தை வலுப்படுத்தும்.


நன்றி: அட்லாண்டிக்