சாலையா? உசுரா? - ரெண்டில் ஒண்ணைச் சொல்லு!
நாய்ப்பூங்கா! –
இந்தியாவின் முதல் நாய்ப்பூங்கா
ஹைதராபாத்திலுள்ள கச்சிபோலியில் திறக்கப்பட்டுள்ளது. 1.3 ஏக்கர் நிலமும் குப்பை கொட்டும்
நிலமாக கிடந்து தற்போது நாய்களுக்கான பூங்காவாக அதிரடி மாற்றம் பெற்றுள்ளது.
ரூ.1.1 கோடி செலவில் உருவாகியுள்ள
பூங்கா, செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் நோக்கத்துடன் லட்சியமாக கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் நாய்களுக்கான பூங்கா சாதாரணமானது. தற்போது ஹைதராபாத்தில் உருவாகியுள்ள
பூங்கா விரைவில் மும்பையிலும் 25 லட்ச ரூபாய் செலவில் தொடங்கப்படவுள்ளது.
2
பார்க்கிங்குக்கும் காசு!
இந்திய தலைநகரான டெல்லியில் வீட்டுக்கு
வெளியே நிறுத்தும் கார்களுக்கு விரைவில் அரசு பார்க்கிங் சார்ஜ் வசூலிக்கவிருக்கிறது.
இதனை டெல்லி கவர்னர் அனில் பைஜ்வால் குளோபல் மூவ் மாநாட்டில் அறிவித்துள்ளார்.
“சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படாமல்
இருப்பதே என் கனவு. டெல்லியில் ஒழுங்குமுறையின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் நடைபாதை,
சைக்கிள்களுக்கான பாதைகளையும் ஆக்கிரமிப்பது தினசரி பிரச்னை” என வருத்தம் தெரிவித்து
மாநாட்டில் பேசினார் ஆளுநர் அனில் பைஜ்வால்.
இரவில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தைவிட பகலில் இருமடங்கு கட்டணம் வசூலிக்க
ஐடியா உள்ளது என்று கூறிய கவர்னர், ஒரு வீட்டிற்கு இரு கார்கள் மட்டுமே அனுமதி என்று
அடுத்தடுத்த பவுன்சர்களை வீச பார்வையாளர்கள் திகைத்து போயுள்ளனர். அப்ப ரோடு பார்க்கிங்
காசுக்கு ஜிஎஸ்டி உண்டா சார்?
3
சாலைகளை அமைக்காவிட்டால் தற்கொலை!
உயரமான கட்டிடம், டெலிபோன் டவர்
என உடும்பாய் தொற்றி ஏறிநின்று எனக்கு இப்பவே செஞ்சாகணும் என பச்சை பிள்ளையாய் அடம்
பிடிக்கும் ஆட்களின் லிஸ்ட்டில் இந்த வார புதுவரவு உ.பியைச் சேர்ந்த அஜ்மல்.
உத்தரப்பிரதேசத்திலுள்ள ஃபிரோஸாபாத்
மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அஜ்மல், திடீரென மக்கள் சுதாரித்து தடுக்கும் முன்னர்
33 ஆயிரம் அடி மின்சார டவர் மீது விறுவிறுவென ஏறிவிட்டார். அங்கிருந்து மக்களை மிரட்ட,
உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் வந்துவிட்டது. “எங்கள் காலனி ரோட்டை சரிசெய்து குப்பைகளை
அள்ளுங்கள்” என விநோத கோரிக்கையை முன்வைக்க, போலீசார் திகைத்து போனார்கள். எப்படியோ
அஜ்மல் மனதை போனஸ் வாக்குறுதிகள் கொடுத்து கரைத்து டவரிலிருந்து கீழிறக்கி உயிரைக்
காப்பாற்றியுள்ளது போலீஸ். “அஜ்மலை பாதுகாப்பாக தரையிறக்கி கவுன்சலிங் கொடுத்ததில்
அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது” என்கிறார் எஸ்.பி. ராஜேஷ்குமார் சிங்.
இதே மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டிடம், மின்சார டவர்களில் ஏறி மிரட்டியவர்களின்
எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
4
ரஹ்மானின் விநாயகர் கோவில்!
அரசியல் சக்திகள் கும்பல் வன்முறைகள்,
போலிச்செய்திகள் மூலம் மக்களை மதரீதியாக பிரிக்க நினைத்தாலும் மனிதநேயம் கலாசார எல்லைகளை
கடந்தது என்பதை ரஹ்மான், விநாயகர் கோவிலைக் கட்டி நிரூபித்துள்ளார்.
கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச்
சேர்ந்த ரஹ்மான் ஒய்வுபெற்ற அரசு அதிகாரி, சிக்கஹோல் பகுதியில் விநாயகர் சிலையை உருவாக்கி,
அதனை பாதுகாப்பாக வைக்க கோவிலையும் கட்டி வருகிறார். “கடந்த ஆண்டு எங்களுடைய கோவிலிலிருந்த
விநாயகர் சிலை காணாமல் போய்விட்டது. கோவிலை பாதுகாப்பாக கட்டி சிலையை பீடத்தில் பொருத்தும்
எண்ணம் அலைகழிக்க உடனே செயலில் இறங்கிவிட்டேன்” என்ற ரஹ்மான் இதற்கு செலவான தொகையை
கூற மறுத்துவிட்டார். “பிற மதத்தினரின் கோயில்களுக்கு செல்வதும் அவர்களுடைய நம்பிக்கையை
மதிப்பதும் எங்கள் பகுதியின் கலாசாரம்” என பெருமையாக பேசுகிறார் ரஹ்மான் வீட்டருகே
உள்ள ரகு கௌடா. சிலையை முறையாக பூஜை செய்து விரைவில் கோவிலை திறக்கவிருக்கிறார்களாம்.