மறக்கமுடியாத ஜாலியன் வாலாபாக்!
ஜாலியன் வாலாபாக்!
ரெஜினல் டையர்:
ரெஜினல் டையர்:
பைசாகி எனும் விழாவைக் கொண்டாட கூடிய நிராயுதபாணிகளான இருபதாயிரம் மக்கள் மீது 1650 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்திய மனிதநேயமற்ற கொடூர அதிகாரி. ஒரு தோட்டா கூட வீணாக கூடாது என்று வீரர்களிடம் கூறியிருந்தது பின்னர் தெரிய வந்தது. ஜெனரல் டையரின் கடமை கண்ணியமிக்க அரச விசுவாசம் வீணாகவில்லை. அறிவிக்கப்படாத அநீதியான துப்பாக்கிச்சூட்டினால் 1300 பேர் பலியாயினர்.
"நூற்றுக்கணக்கான மக்கள் துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டினால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கியும் நான்கு வாயில்களை கொண்ட மைதானத்தில் பலரும் இறந்துபோயினர். துப்பாக்கிச்சூட்டில் சிக்கியவர்கள் ரத்தம் குமிழிட சரிய, அவர்களின் உடல்மேல் உடலாக மக்கள் விழுந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துபோனேன்" என்கிறார் அக்காட்சியைக் கண்டவரான லாலா கிர்தாரி லால்.
இந்தியாவில் நடந்த சம்பரான் போராட்டம், கேடா சத்தியாகிரகம், அகமதாபாத் மில் வேலை நிறுத்தம் ஆகியவற்றின் வெற்றியும், இதன் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பரவி வந்த சுதந்திரப்போராட்ட வேகமும் ஆங்கிலேயர்களுக்கு கசப்பையும் வன்மத்தையும் தந்தன. 1917 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் உருவாகி 1919 ஆம் ஆண்டு மார்ச்சில் அமுலானது.
சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். என்ன காரணம் என கூறவேண்டியதில்லை; வழக்கும் போடவேண்டிய அவசியமில்லை. சட்டம் அமுலானதும் சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காந்தி, டெல்லிக்கு செல்லும் முன்பே கைதானார். இதனால் கோபமான மக்கள் போலீஸ் நிலையம், வங்கி என பல்வேறு அரசு சொத்துக்களை சூறையாடினர்.
பிரிட்டிஷார் மீது வைத்திருந்த காந்தி வைத்திருந்த நம்பிக்கையை ஜாலியன் வாலாபாக் சம்பவம் உடைத்தது. இந்தியர்களின் கலாசாரம், கல்வி, தொழில்நுட்பம் என அனைத்தையும் முடக்கி அவர்களை முடக்கியிருந்ததை தாமதமாகவே உணர்ந்தார் காந்தி. லண்டன் வைஸ்ராய்க்கு , ஜெனரல் டையரின் மூர்க்க குணத்தை பற்றி காந்தி கடிதம் எழுதினார். ஆனால் ஆங்கிலேய அரசு ஜெனரல் டையருக்கு ராஜமரியாதை அளித்து வரவேற்றது. கண்துடைப்புக்கு கமிஷன் வைத்தாலும் மார்னிங் போஸ்ட் நாளிதழ் டையருக்கு களமிறங்கி 25 ஆயிரம் பவுண்டுகளை சேகரித்தது.
இங்கிலாந்து மன்னர், பஞ்சாப் படுகொலையை குற்றம் என்று கூட கூறாதது காந்தியை பெரிதும் வருத்தியது. அரசு மீதான நம்பிக்கையை இழக்கச்செய்தது என எழுத்தில் புலம்பினார் காந்தி. பின்னாளில் சட்டமறுப்பு இயக்கம் தொடங்கி மக்களை சேர்த்து விடுதலை பெற்றது இந்தியாவின் வீர வரலாறு. 1919 ஆம் ஆண்டுக்க்குப் பிறகுதான் இந்தியாவின் நவீன சிற்பியான நேரு சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்கிறார்.
தமிழில்: ச.அன்பரசு.
நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்(அஸ்வின் நந்தகுமார்)