திறந்தவெளிசிறைகள் தொடங்கப்படுமா?


குற்றவாளிகளை மனிதர்களாக்கும் திறந்தவெளி சிறை! –- ச.அன்பரசு



Image result for open prison



இந்தியாவில் நீதிமன்றம் மூலம் வழங்கப்படும் ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனை, அவர் தன் தவறை உணர்ந்து வருந்தி திருந்துவதற்காகவே. ராஜஸ்தான் முதல் இந்தியாவெங்குமுள்ள திறந்தவெளி சிறைகள் பிராக்டிக்கலாக சாதிக்க முயற்சித்து வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் குற்றவாளிகளின் பழக்கவழக்கங்களை மாற்றி சீர்திருத்தும் முயற்சியில் திறந்தவெளி சிறைகள் உருவாயின.  

இந்தியாவில் 1953 ஆம் ஆண்டு உ.பியில் முதல் திறந்தவெளி சிறைக்கூடம் உருவானது. இதற்கடுத்த முன்னேற்றமாக ராஜஸ்தானில் தொடங்கிய திறந்தவெளி சிறையில் குற்றவாளிகள் குடும்பத்துடன் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்தாண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம், ராஜஸ்தானில் வெற்றிபெற்ற திறந்தவெளி சிறைகளை பல்வேறு மாநிலங்களிலும் உருவாக்க உத்தரவிட்டது. இந்த ஆணை செயல்படுத்தப்பட்டால் சிறைக்கைதிகளுக்கு சுதந்திரமான வாழ்வு கிடைப்பதோடு, சிறைத்துறையின் செலவுகளும் கணிசமாக குறையும்.

தற்போது இந்தியாவிலுள்ள 63 திறந்தவெளி சிறைகளில் 5 ஆயிரத்து 370 கைதிகள் வாழ்கின்றனர். நாட்டிலுள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கை 4,19,623 இல் திறந்தவெளி சிறையிலுள்ளவர்களின் அளவு 1.28%. இதில் ராஜஸ்தானில் மட்டுமே 29 திறந்தவெளி சிறைகள் செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் திறந்தவெளி சிறைகள் உண்டு. “அடிப்படை வசதிகளற்ற சிறையில் அடைத்துவிட்டு தண்டனை நிறைவடையும்போது காந்தியாக அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று நினைத்தால் அது பெரும் தவறு” என்கிறார் சிறைத்துறை ஆராய்ச்சியாளர் சக்கரபர்த்தி.

இந்தியாவிலுள்ள சிறைகள் அதிக கைதிகளின் எண்ணிக்கையால் தவித்து வருகின்றன. மேலும் இவர்களை பாதுகாப்பதற்கான காவலர்களின் பணியிடங்களும் மாநில அரசுகளால் போதுமான அளவு நிரப்பபடுவதில்லை. இந்நிலையில் திறந்தவெளி சிறைகளே எதிர்கால தீர்வாக இருக்கலாம். காலையிலும் மாலையிலும் கைதிகளின் வருகைப்பதிவு பதிவு செய்யப்படும் நிலையிலும் இங்கிருந்து தப்பித்து செல்பவர்களின் எண்ணிக்கை 481 பேர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் உள்ளது. இதற்கும் பிணைக்கான தொகையை கட்டமுடியாத வறுமைதான் காரணம். 

“நீதியின் அர்த்தம் பழிக்குப்பழி அல்ல. சமூகம் கைதிகளை கோபத்துடன் அணுகினால் வல்லுறவு குற்றங்களுக்காக சிறைக்கு செல்பவர்கள் தண்டனை முடிந்து வெளியுலகைப் பார்க்கும்போது தீவிர குற்றவாளியாக மாறியிருப்பார்கள்” என எச்சரிக்கிறார் ஆராய்ச்சியாளர் சக்கரபர்த்தி.    

நன்றி: ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்