படேல் தேசத்தில் என்ன நடக்கிறது?

படேல் தேசம் உடைகிறது!





Image result for patel statue


இந்தியாவின் ஒற்றுமைக்கு  உதாரணம் என குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை இந்திய அரசு கூவிவரும்போது. அங்கிருந்து பீகார் உத்தரபிரதேச தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர்.

சர்தார் சரோவர் அணையில் உருவாகியுள்ள சிலையின் மதிப்பு 2 ஆயிரத்து 900 கோடி. இதன் தொடக்கவிழாவின் போது, ஹர்திக் படேல் தொடங்கவிருக்கும் கிசான் சத்தியாகிரகமும் நடைபெறவிருக்கிறது. குஜராத்தில் படேலின் சிலையை செய்வதிலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு உண்டு. மாநிலத்தின் பொருளாதாரத்திலும் 4 மில்லியன் தொழிலாளர்களின் பங்களிப்பு உள்ளது.


Image result for migrant workers gujarat



குஜராத்தின் 5 தாலுக்காக்களில் வறுமை தாண்டவமாடுகிறது. நர்மதா பகுதியில் மக்கள் நீர்தட்டுப்பாட்டால் நாயாய் அலைந்து வரும் இடங்களில்தான் 430 மில்லியன் டாலர் செலவில் இந்தியாவின் ஒற்றுமையை புகைப்படங்களில் பதிவு செய்ய படேல் சிலை உருவாகியுள்ளது.

குஜராத்தில் நடந்த சிறுமி கற்பழிப்பு விவகாரத்தால் பீகார், உ.பி தொழிலாளர்கள் அனைவரும் போலீசாரின் வற்புறுத்தல் மற்றும் தாக்குதல் பயத்தால் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். படேல் சிலை செய்ய ஒப்பந்தமான 4500 பேரில் பாதிப்பேர் மட்டுமே தற்போது டைட்டான காலக்கெடுவில் வேலை செய்து வருகின்றனர்.

"பழங்குடிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து அகற்றிவிட்ட உலகில் பெரிய சிலையை அமைத்து ஒற்றுமையை இந்தியா வலுக்கட்டாயமாக உருவாக்குகிறது. படேல் என்ற ஜாதிரீதியான ஒற்றுமையை உருவாக்கவே இந்திய அரசு மெனக்கெடுகிறது" என்கிறார் சமூகவியலாளர் ஷிவ் விஸ்வநாதன்.

காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலை பாஜக ஏன் தூக்கிப்பிடிக்கிறது? பிரதமராக இருந்த நேருவை  பலவீனமாக காட்டத்தான்.  சர்தாருக்கும் நேருவுக்கும் இருந்த கருத்துவேறுபாடுகள் உலகறிந்தவை. ஆனால் தேசம் என்ற கட்டுமானத்தை காக்க இருவரும் தம் கருத்துவேறுபாடுகளை துறந்து ஒன்றாக நின்றனர். பாஜக, நேரு - சர்தார் இடையிலான கருத்துவேறுபாட்டை மட்டும் மக்கள் முன் கொண்டுவருகிறது அதன் அரசியல் சாமர்த்தியம்.

சிலை எழுப்புவதால் படேல் சமூகம் அரசிடம் கேட்கும் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேறிவிடப்போவதில்லை. இன்று இளைஞர்கள் கேட்பது வேலைவாய்ப்பும் பொருளாதாரமும் இணைந்த வளர்ச்சியை. வெற்று பழம் பெருமையை அல்ல; பாஜக வாய்ச்சவடால்களிலும் பெரும் கட்டுமானங்களிலும் வென்றுவிட நினைக்கிறது.

''மோடி இச்சிலையை நிறுவுகிறார் என்பது மட்டுமே எனக்கு தெரியும். என்னுடன் எங்களது கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் வேலை செய்து வருகின்றனர்.  எங்களது ஒப்பந்ததாரர் எங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார்' என அச்சத்தோடு பேசுகிறார் சிலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரியும் முகமது மியான். நாட்டிலுள்ள 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற மாநில தொழிலாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் கட்டுமானத்துறை திகைத்து நிற்கிறது. மாநில அரசு நிலைமையை சமாளிக்க பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. உள்நாட்டு மக்கள் பணிபுரியும்படி சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. இதன் விளைவாக குஜராத்தின் தொழில்துறை எப்படி முன்னேறும் என்பதை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறவேண்டும்.


அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள  லிபர்ட்டி சிலையை தனியார் அமைப்புகள் உருவாக்கினார்கள் எனில் சர்தார் படேலின் சிலையை அரசு அமைப்புகளின் சிஎஸ்ஆர் பணம் கொண்டு உருவாக்கியுள்ளனர். 

ஆக்கம்: ச.அன்பரசு

மூலம்: மாலிக் பதக், லிவ் மின்ட்

நன்றி: கே.என்.எஸ்









பிரபலமான இடுகைகள்