ரயில்வேயில் கடத்தப்படும் குழந்தைகள்!


கடத்தல் குழந்தைகளை மீட்கும் ரயில்வே! –

Image result for rpf


இந்தியா முழுக்கவுள்ள ரயில் நிலையங்களில் தினசரி 30 கடத்தல் குழந்தைகளை ரயில்வே போலீஸ்(RPF) மீட்டுவருகிறது. கடந்தாண்டிலிருந்து இவ்வாண்டுவரை (ஆகஸ்ட்வரை) 20 ஆயிரம் குழந்தைகளை கடத்தல் கண்ணியிலிருந்து ரயில்வே போலீஸ் மீட்டு சாதனை செய்துள்ளது.
“குற்றம் நடைபெற்றபின் குழந்தைகளை பிடிப்பது என்ற நிலை மாறி, உதவி தேவைப்படும் குழந்தைகளை முன்னமே கண்டறிவதாக முன்னேறியுள்ளோம் ” என்கிறார் ரயில்வே போலீஸ்துறை தலைவரான ஜெயாசிங்.

 கடந்தாண்டு ரயில்வே போலீசார் மீட்ட 11 ஆயிரத்து 178 சிறுவர்களில் 8,963 பேர் சிறுவர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினசரி 30 பேர் என மாதம் ஆயிரம் சிறுவர்களை மீட்டிருக்கிறது ஆர்பிஎஃப். முந்தைய ஆண்டுகளில் மாதத்திற்கு 581 சிறுவர்கள்(2016) கடத்தப்படும் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து வருவது கவலையான செய்தி. 2014-2018 காலகட்டத்தில் ரயில்நிலையத்தில் மீட்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 072. இதில் பெரும்பாலான சிறுவர்கள் காணாமல் போன புகாரின் கீழ் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


2


எட்டு லிட்டர் பீருக்கு சிறை

வீக் எண்ட் விருந்துக்கு எட்டு லிட்டருக்கு மேல் மதுபானங்களை வைத்திருப்பவர்களுக்கு  சிறை தண்டனையுடன் அபராதம் உண்டு என மக்கள் நலனில் திடீர் அக்கறை காட்டியுள்ளது உத்தரப்பிரதேச அரசு.
1910 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் அரதப்பழசான வரிச்சட்டத்தை அண்மையில் தூசு தட்டியுள்ள உத்தரப்பிரதேச அரசு, மக்களை நல்வழிப்படுத்த மூன்று ஆண்டுகள் சிறைதண்டனை ரூ. 2 ஆயிரம் அபராதம் என கறார் காட்டியுள்ளது. எட்டுலிட்டர்களுக்கு மேல் ஒருவர் வைத்திருக்கும் ஒரு பாட்டிலுக்கு ரூ. 72 என கணக்கு வைத்து வரி வசூலிக்கப்படும் என்பது உப தகவல்.
 திடீர் விதிக்கு என்ன காரணம், டெல்லி வழியாக ஏராளமான மதுப்புட்டிகள் சகஜமாக வரிவலையில் மாட்டாமல் குடிமகன்களை மகிழ்வித்ததே காரணம். இறக்குமதி செய்யப்பட்ட மதுவகைகளை தனிப்பட்ட உபயோகத்திற்கு அரசு கூறும் லிமிட்டில் கொண்டுவந்தால் மட்டுமே வரி கிடையாது. குடி அரசு என்பது இதுதானா?

3


சைக்கிளில் ஓவர்ஸ்பீடு!

காரில், பைக்கில் ஓவர்ஸ்பீடு சொல்லி ஃபைன் விதித்தால் ஓகே. ஆனால் சைக்கிள் ஓட்டி போலீசிடம் லந்து வாங்கியிருக்கிறார் கேரளவாசி ஒருவர்.
கேரளாவில் வேலைசெய்யும் உ.பிக்காரரான காசிம் காசர்கோட்டில் வசிக்கிறார். வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த காசிமை திடீரென கும்பாலா பகுதி ஹைவே போலீசார் மடக்கி பிடித்தனர். எதற்கு? சைக்கிளை ரேஸ்கார் வேகத்தில் ஓட்டினார் என குற்றம் சாட்டி ஜஸ்ட் 2 ஆயிரம் ரூபாய் ஃபைன் எழுதியுள்ளனர். ஷாக்கான காசிம், தன்னிடம் அவ்வளவு பணமில்லை என்று கூற ஆக்ரோஷமான போலீஸ் சேட்டன்கள் அபராதத்தை ஐநூறாக மாற்றி சலானை கையில் கொடுத்துவிட்டு சைக்கிள் டயர்களின் காற்றை பிடுங்கிவிட்டு சென்றுவிட்டனர். காசிம்னா சும்மாவா, உடனே சலானை ஃபேஸ்புக்கில் போட, விரைவில் அபராதம் விதித்த எஸ்ஐ மீது துறைரீதியான விசாரணை நடைபெறவிருக்கிறது என தகவல் தெரிவித்துள்ளது மாவட்ட காவல்துறை.  


4

பகோடா லட்சாதிபதி!


பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த பகோடா வணிகர் தேவராஜ், மோடியின் சுயதொழில் அறிவுரையான பகோடா தொழிலை செய்து ரூ.60 லட்சம் வருமானவரி கட்டி மிரள வைத்துள்ளார்.
அண்மையில் கில் ரோடு, மாடல் டவுன் என இரண்டு இடங்களிலுமுள்ள பன்னாசிங் பகோடா கடைகளில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியதில் அரண்டுபோன தேவராஜ், தடாலடியாக ரூ.60 லட்சரூபாயை வருமான வரி அலுவலகத்தில் கட்டி சாமி சரணம் சொல்லியுள்ளார்.
வருமானவரித்துறை கமிஷனர் டிஎஸ் சௌத்ரியின் வழிகாட்டுதல்படி, அதிகாரிகள் ஒருநாள் முழுக்க கடையின் கல்லாவில் கண் வைத்து தினசரி வருமானத்தை கணக்கு போட்டு பன்னாசிங் செய்த வரி ஏய்ப்பை கண்டுபிடித்தனர். 1952 ஆம் ஆண்டு கில் சாலையில் இக்கடையை தொடங்கியவர் பன்னாசிங். பன்னீர் பகோடா, தயிர்வடைக்கு பெயர்போன இக்கடைக்கு அரசியல்வாதிகள், சினி பிரபலங்கள் என வெரைட்டியான விஐபிக்கள் தினசரி வாடிக்கையாளர்கள். இந்திய அரசின் மூச்சுக்காற்றே வரிதானே!  

5

கையெழுத்து முக்கியம்!

அண்மையில் அலகாபாத் நீதிமன்றம் மோசமான கையெழுத்திற்காக மூன்று மருத்துவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். இதன் அப்டேட்டாக இந்தூரிலுள்ள எம்ஜிஎம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களின் கையெழுத்திற்காக தனி வகுப்புகளைத் தொடங்கியுள்ளது.

“மருத்துவர்களின் மோசமான கையெழுத்து இத்துறையில் நீண்ட காலமாகவே பிரச்னையாக உள்ளது. வருங்காலத்தில் இப்பிரச்னை தொடரக்கூடாது என்பதற்காகவே கையெழுத்து வகுப்புகளைத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் கல்லூரி டீனான மரு.ஜோதி பிந்தால். இந்திய அரசால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் டாக்டர்களின் கையெழுத்து புரியாவிட்டால் நோயாளிகளுக்கு காப்பீடு கிடைக்காது என்பது முக்கியமான விதி. 2015 ஆம் ஆண்டு சுகாதாரத்துறை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து பெயர்களை பெரிய எழுத்துக்களில் எழுதவேண்டும் என அறிவுறுத்தியது. கிறுக்கல் கையெழுத்துகளால் எழும் பிரச்னைகளை சமாளிக்க, மருத்துவர்கள் பிரிஸ்கிரிப்ஷனை டிஜிட்டல் முறையில் நோயாளிக்கு பரிந்துரைக்க தொடங்கியுள்ளனர்.