ஐஎம்எஃப் - கீதா கோபிநாத் சாதித்தது எப்படி?


கீதா கோபிநாத் சாதித்தது எப்படி?


Image result for geetha gopinath



ஏழு வயதில் தன் மகள் கீதாவுக்கு உணவு மேசையிலிருந்த பழங்களை வைத்து பெருக்கல் வாய்பாட்டை சொல்லிக் கொடுத்தார் மைசூரைச் சேர்ந்த டி.வி கோபிநாத். அவரே பிரம்மிக்கும்படி பன்னாட்டு நிதியகத்தின்(IMF) பொருளாதார நிபுணராக பதவியேற்று உலக பொருளாதாரத்தை ஆராய்ந்து வருகிறார் கீதாகோபிநாத்.
1971 ஆம் ஆண்டு டிச.8 அன்று கொல்கத்தாவில் பிறந்தார் கீதா. வங்கதேச போர்காலத்தில் பிறந்த கீதாவுடன் அவரது பெற்றோர் மைசூருவிலுள்ள பிலிகெரே கிராமத்துக்கு திரும்பினர். தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் உலக உறவுகள் துறையின் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

விளையாட்டில் ஆர்வம் காட்டி படிப்பில் 45 சதவிகித மார்க் வாங்கிய கீதா, திடீரென விளையாட்டு பயிற்சிகளை கைவிட்டு படிப்பதில் வேகம் காட்டி 95% மதிப்பெண் வாங்கி ஆசிரியர்களை வியக்க வைத்தார். “விளையாட்டில் நம்பர் 1 க்குத்தான் மதிப்பு, ஆனால் படிப்பில் இரண்டாமிடம் வருபவர்களுக்கும் சாதிக்க வாய்ப்புள்ளது” என அப்பாவிடம் கூறியுள்ளார். மருத்துவா, பொருளாதாரமாக என குழப்பத்திலிருந்த கீதா, பொருளாதாரத்தை தேர்ந்தெடுத்து டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சேர்ந்தார். அப்போது அறிமுகமான இக்பால், பின்னாளில் கீதாவின் கணவராகி அவரது முன்னேற்றத்துக்கு உதவினார்.
இக்பால் குடிமைத்தேர்வுகள் எழுதி ஐந்து ஆண்டுகள் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் பதவி விலகி, அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸின் எம்ஐடியில் இன்றுவரை பணியாற்றி வருகிறார். 

அப்போது கீதாவுக்கு வாஷிங்டன் பல்கலையில் முனைவர் படிக்க உதவித்தொகை கிடைத்தது. “கீதாவின் படிப்புச்செலவை என்னுடைய வருமானத்தில் செய்யமுடியாத நிலையில் நான் இருந்தேன். அப்போது அவளின் விமானச்செலவுக்கு ரூ.50 ஆயிரம் தருவதே என்னுடைய பங்கு” என்கிறார் கீதாவின் தந்தை கோபிநாத். கீதாவின் திறமையால் கவரப்பட்ட அவரது பேராசிரியர் சிபாரிசு கடிதம் மூலம் ஹார்வர்டு பல்கலையில் சேர உதவினார். கென்னத் ரோகாஃப், பென் பெர்னான்கே உள்ளிட்ட மூத்த பொருளாதார வல்லுநர்களின் உதவி கிடைக்க கீதா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியரானார். பின்னர், போஸ்டன் ரிசர்வ் வங்கி, நியூயார்க் ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் உறுப்பினர், ஆலோசகராக பதவி வகித்தார். தற்போது உலக நிதியகத்தின் ஆராய்ச்சிப்பிரிவுக்கு தலைவராகியுள்ள கீதா, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு விரும்பினால் உதவக்கூடும்.  

 ஆக்கம்: ச.அன்பரசு