அடையாளமற்ற இந்தியர்கள்! - அவலவாழ்வும் துயரும் அலசல் பார்வை!
அடையாளமற்ற இந்தியர்கள்!
உழைத்து அடையாளமற்று இறக்கும்
வட இந்தியர்களின் அவல வாழ்க்கை.
தமிழகத்தின் பெருநகரங்களிலுள்ள ஹோட்டல், பழச்சாறு
கடை, பாலகம், தேநீர்க்கடை என அனைத்து இடங்களிலும் மாறாத ஒற்றுமை, மேற்சொன்ன அனைத்து
இடங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள்தான். இவர்கள் ஒருவர் கூட தமிழர்களாக இருக்க
வாய்ப்பு கிடையாது. அனைவருமே உ.பி, பீகார், மேற்கு வங்கத்திலிருந்து இடம்பெயர்ந்த வட
இந்தியர்கள்தான். இந்தி, போஜ்புரி பாடல்கள் ஒலிக்க எந்திரமாய் சுழன்று பிரமிக்க வைக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமல்ல கர்நாடகம், ஆந்திரா, கேரளா என
சொந்த ஊர்க்காரர்கள் பலரும் நவீன பணம் கொழிக்கும் வேலைகளுக்கு மாறிவிட உடலுழைப்பு தொடர்பான
வேலைகளுக்காகவே பல்லாயிரக்கணக்கான வட இந்தியர்கள் ரயில்களில் முட்டிமோதி ஏறிவருகின்றனர்.
இதற்கு முக்கியக்காரணம், கல்வி அறிவால் தென்னிந்தியர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டதும்,
கல்வியறிவின்மையால் வட இந்தியர்கள் அதனை தவிர்த்ததும்தான்.
அதிகரிக்கும் கிடுகிடு மக்கள்தொகை வட இந்தியாவில்
வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்த வளம்மிகுந்த சமூகத்திட்டங்கள் செழித்த தென் மாநிலங்கள்
வட இந்தியர்களை அரவணைத்து வரவேற்றன. டீக்கடை முதல் கட்டுமான வேலைகள் வரை வட இந்தியர்கள்
வரவேற்பு பெறுவதற்கு அவர்களின் கடிகாரம் பார்க்காத கடின உழைப்பும், கறார் கூலி பேசாத
தன்மையும் உதவின. ஆனால் அதேசமயம் உரிமைக்கு கூட குரல் கொடுக்க தயங்கியது விபத்துகள்,
உயிரிழப்பு சம்பவங்களில் அவர்களின் வாழ்க்கைக்கே படுபாதகமானது.
கேரளாவில் நோயால் மரணித்த
சஞ்சய் பிரதானின் உடலை ஒடிஷாவிலுள்ள கந்தாமல் மாவட்டத்திலுள்ள கும்பார்கன் கிராமத்திற்கு
கொண்டுவந்து இறுதிச்சடங்குகள் செய்வதற்குள் அவரது பதினெட்டு வயதான காதல் மனைவி ஜெபந்திக்கு
தலை கிறுகிறுத்துவிட்டது.
காதல் கணவன் சஞ்சயைக் காணச்செல்லும் பயணம் ஏழு கடல்
ஏழு மலைகளை கடப்பது போன்றதுதான் ஜெபந்திக்கு. அவர் ரயிலில் சென்றதே மிகச்சொற்பமான முறைதான்.
கும்பார்கன் கிராமத்திலிருந்து பிரகாம்பூருக்கு தன் சகோதரருடன் ஆட்டோ பிடித்தால் பேருந்து
நிறுத்தம். அங்கு பஸ் ஏறி கூட்டத்தில் திணித்து 120 கி.மீ கடந்தால் கொல்கத்தா - சென்னை
ரயில் தடத்தில் புவனேஸ்வர்-ராமேஸ்வரம் ரயில் ஏறலாம். அங்கிருந்து உறக்கமில்லாத 19 மணிநேர
இரண்டாம் வகுப்பு பயணம் முடித்து கீழிறங்கியவுடன் எர்ணாக்குளம் அரசு மருத்துவமனை. அதுவரை
தன் கணவர் இறந்துவிட்டார் என ஜெபந்தியிடம் அவரது சகோதரர் கூறியிருக்கவில்லை.
உயிரிழந்த ஒடிஷா இளைஞர் சஞ்சய்க்கு பில்லியனர் கனவெல்லாம்
கிடையாது. மூன்று வேளை உணவும், கிராமத்தில் சிறிய வீடு என்பதே லட்சியம். அதற்காகவே
சிரமங்களை, வேதனைகளை ஏற்று ஆலுவாவில் அங்காமலே பகுதியில் நண்பர்களுடன் தங்கி வேலை பார்த்து
வந்தார். என்ஜிஓ அமைப்பான CMID(Centre of Migration and
Inclusive Development) தகவல்படி 35-40 லட்சம் தொழிலாளர்கள்
பணிபுரிந்து வருவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதிகரித்தது வேலை மட்டுமல்ல மரணங்களும்தான்.
தோராயமாக 12 கோடி இடம்பெயரும் தொழிலாளர்களைக் கொண்ட இந்தியாவில், 90 லட்சம் மக்கள்
தினசரி வேலைக்காக இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களைக் குறித்த எவ்வித ஆவணங்களையும்
கணக்குகளையும் மாநில அரசுகள் பராமரிப்பதில்லை. இயற்கை அல்லது விபத்து மரணங்கள் வட இந்தியர்களுக்கு
ஏற்பட்டாலும் அரசு கண்டுகொள்ளப்படாத அவலம் நிகழ்கிறது. வட இந்தியர்கள் தினசரி இறப்பு
5 பேர்களும் ஆண்டுக்கு 1,800 பேர்களும் மரணித்து வருகின்றனர். இவர்களின் உடல்களைப்
பெற்று இறுதிச்சடங்கு செய்யும்போது மட்டுமே வட இந்தியாவிலுள்ள குடும்பத்தினருக்கு தகவல்
தெரிவிக்கப்படுவதால் பலருக்கும் அச்சூழலை எதிர்கொள்ளமுடியாமல் நிலைகுலைந்து போகின்றனர்.
"வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் 1961-1990 காலகட்டத்தில் தெற்கு
தமிழக எல்லை மற்றும் கர்நாடக எல்லைப்பகுதிகளிலிருந்து கேரளாவுக்கு வேலையாட்கள் வரத்தொடங்கினர்.
ஆனால் இது குறிப்பிட்ட சீசன் மட்டுமே. வெளிமாநிலத் தொழிலாளர்களில்(15-35 வயது) பழங்குடிகள்,
தலித்துகள், முஸ்லீம்களே அதிகம்" என்கிறார் சிஎம்ஐடி இயக்குநரான பினாய் பீட்டர்.
நோயால் இறந்துபோன சஞ்சயின் உடலைக் கொண்டு செல்ல
ஜெபந்தியின் சகோதரர் திருவனந்தபுரத்திலுள்ள தொழிலாளர்துறை அமைச்சகத்தின் உதவியைப் பெற்று
மாவட்ட ஆட்சியரின் ஆதரவில் ஒடிஷாவுக்கு சஞ்சயின் உடலைக் கொண்டு வந்து தகனம் செய்தனர்.
ஆனால் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. சாதாரணமாக இறந்த வட இந்தியரை அவரின்
சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல ரூ.70 ஆயிரம் வரை செலவுபிடிக்கிறது. குடும்பத்தில் சம்பாதிக்கும்
ஒரே ஆளும் இறந்துவிட, அரசு கண்டுகொள்ளாத நிலையில் அவரின் இறுதிச்சடங்கு தொகையும் பெரும்
கடனாக நீள தொழிலாளரின் ஏழைக்குடும்பம் என்ன செய்யும்? முதலாளியின் காலில் விழுவதே ஒரே
வழி. பின்னர் கடன்தொகைக்காக அக்குடும்பமே கொத்தடிமை நிலைக்கு ஆட்படுகிறது. குடியுரிமை
மசோதா உள்ளிட்டவற்றைவிட மாநில நலனுக்கு உழைக்கும் மக்களை அரவணைத்து அவர்களின் நலன்களில்
சிறிதேனும் அக்கறை காட்டுவதே நல்லரசுக்கு அழகு.
பருக்கை பயணம்!
கேரளாவுக்கு வரும் தொழிலாளர்கள் -25 மாநிலங்கள்(195
மாவட்டங்கள்)
பயண தூரம் - 2500 கி.மீ - 3500 கி.மீ
அதிக தொலைவு - அசாம்-கொல்லம்(3,500 கி.மீ)
வட இந்தியர்களின் வாழிடம் - அசாம், ஒடிஷா, பீகார்,
மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம்.
இந்தியாவின் இடம்பெயரும் தொழிலாளர்கள் - 12.5 கோடி(மொத்தம்)
தொழிலாளர்களின் இடம்பெயர்வு - 6-8 கோடி(தோராயமாக)
( Economic Survey 2016-17,CMID Report)
https://fountainink.in/reportage/the-unknown-indian
- ச.அன்பரசு
நன்றி: சௌரவ் குமார், பவுன்டைன் இங்க் மாத இதழ்