வேலைவாய்ப்பு எங்கே?


அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி; சரியும் வேலைவாய்ப்புகள்? –

நான்காவது தொழில்துறை புரட்சியின் தொடக்கத்தில் இந்தியா பெருமையாக வளர்ச்சியின்றி நிற்கிறது. 1972-77 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 4.6% எனில் அதன் விளைவாக நமக்கு கிடைத்த வேலைவாய்ப்பு சதவிகிதம் 2.6%. ஆனால் 2011-15 ஆம் ஆண்டுகளில் 6.8 சதவிகிதம் பொருளாதாரம் வளர்ந்தாலும் வேலைவாய்ப்புகளின் அளவு 0.6% என தேய்ந்துவருகிறது.
என்ன காரணம்? நாம் இருகரம் கூப்பி வரவேற்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களும், அதை கற்றுக்கொள்ளாத தொழில்துறையும்தான். இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், பிளாக்செயின், ஆட்டோமோஷன், மெஷின் லேர்னிங் என அனைத்து டெக் நுட்பங்களும் ஒன்றுக்கொன்று கைகோர்க்க தொழிற்சாலைகளில் மனிதர்களின் தேவை பெருமளவு குறைந்து உற்பத்திப்பொருட்கள் டன்கணக்கில் அதிகரித்திருக்கிறது. விளைவு? உலகளவில் வேலைவாய்ப்புகள் 15 சதவிகிதம் குறையும். இந்தியாவின் பங்கு 9%.
 
2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர்களை எட்டவிருக்கும் நிலையில் இந்திய தொழில்துறையினர் துறைரீதியிலான அறிவை பெறாவிட்டால் வேலையிழப்பு நிச்சயம் என உலக பொருளாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக உற்பத்தியாளர்களின் பட்டியலில் இந்தியாவின் இடம் 5. உலகின் வேகத்திற்கு இந்தியா ஓட முடியாததற்கு வருமானத்தில் 0.89% மட்டுமே ஆராய்ச்சிக்கு செலவழிப்பது முக்கியமான காரணம். பொருளாதார வளர்ச்சி என அரசு காட்டும் புள்ளிவிவரங்களும், யதார்த்த நிலவரமும் முரண்படுவதற்கு அரசின் கொள்கைகளே காரணம். பொதுத்துறையை புறக்கணித்து அரசு பாசம் காட்டும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை வழங்காத பொருளாதார வளர்ச்சியும், இந்தியாவின் வளர்ச்சியும் எப்படி ஒன்றாக முடியும்?

2011-12 ஆண்டுகளில் தொழில்துறை உருவாக்கும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை சுருங்கியுள்ளதையும் அதன் மீட்சி வேகமும் குறைவாயுள்ளதை மத்திய தொழில்துறை கண்காணிப்பகத்தின்(CMIE) சர்வே சுட்டிக்காட்டியுள்ளது. ஊழியர்களின் வைப்புநிதி(PF) இக்காலகட்டத்தில் அதிகரித்தாலும் புதியவேலைவாய்ப்புகள் அரசின் புள்ளிவிவரங்கள் கூறுமளவு உருவாகவில்லை என்பதே ஆய்வுகள் கூறும் உண்மை.

முத்ரா திட்ட கடன்கள், சாலை உருவாக்க வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது ஆகிய மூன்று திட்டங்களை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்காக  இந்திய அரசு கையில் வைத்துள்ளது. இதில் சாலைகள் அமைக்கும் திட்டத்தில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதில் பயன்பெறுபவர்கள் படிக்காத திறன் குறைந்தவர்களும், விவசாய தொழிலாளர்களும்தான்.

அரசு பொதுத்துறை வங்கிகளும் வாராக்கடன்களால் தடுமாறும் நிலையில் அதன்மீது நம்பிக்கை வைத்து முதலீடுகளை செய்ய யார் வருவார்கள்? வேறுவழியின்றி பட்டதாரிகளும், விவசாய தொழிலாளர்களும் கட்டிடதொழிலாளர்களாக திறன் குறைந்த பணிகளுக்கு மாறிவருகின்றனர். இந்நிலையில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகள் என அரசு மார்தட்டுவது பெரும் புளுகன்றி வேறென்ன? தேர்தலையும் அதிகாரத்தையும் நோக்கிய பயணத்தை விடுத்து அரசு மக்களின் நல்வாழ்வுக்கான முயற்சிகளை எடுத்தாலே வேலைவாய்ப்புகளை அதிகரித்து இந்தியாவை வளம் பெறும்.



- ச.அன்பரசு

நன்றி: டெக்கன் கிரானிக்கள்