பிரிவினை எனும் வரலாற்றுத்துயர்!
ஓராண்டுக்கு முன்னர் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் பேதமின்றி திருமண விழாக்களில் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் இன்று ஒருவரையொருவர் கொலை செய்துகொண்டும் பிற இனத்தவர்களின் மகள்களை வல்லுறவுக்குள்ளாக்கியும் வருவது துயரமான ஒன்று
- வரலாற்று ஆய்வாளர் வில்லியம் டால்ரைம்பிள்
வன்ம எரிமலை வெடித்தது!
புது டெல்லியில் சலாலுதீன் காலித் பயத்துடன் தன் வீட்டை ப் பார்த்துக்கொண்டிருக்க, சீக்கியர் ஒருவர் அவர் வீட்டைத் தாக்கி சலாலுதீனின் தாயை வாளால் குத்தி பிளந்துகொண்டிருந்தார். ரத்த சகதியில் அலறிய அவர் அம்மாவின் குடல் வயிற்றிலிருந்து வெளியே சரிவதை கண்ணீருடன் செயலற்று பார்த்துக்கொண்டிருந்தார் சலாலுதீன். இது அங்கு மட்டும் நடந்த வன்முறை அல்ல.
இந்தியா - பாகிஸ்தான் என மக்களை பொசுக்கிய பிரிவினைத்தீயின் சிறிய உதாரணம் அது. ஏறத்தாழ இந்தியா முழுவதும் 20 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த வரலாற்றுத்துயரம் அது. பழகாத அறியாத தேசம் நோக்கி கண்களின் எதிர்காலம் குறித்த பீதியுடன் சில உடைகளும், வீட்டில் தேடிக்கிடைத்த ரூபாய்களுமாக மக்கள் வன்முறை பற்றி பரவிய வீதிகளில் உலாவிய நாட்கள் அவை. டெல்லி - லாகூர் ரயில்களில் உயிருடன் பயணித்த மக்களே குறைவு எனும்படி ரத்தச்சேறு ரயில் பெட்டிகளை நனைத்திருந்தது.
கிராமங்களில் புகுந்த கொலைகார கும்பல் வீடுகளை கொள்ளையடித்து, சிறுவர்களை, பெரியவர்களை விட்டுவைக்காமல் கொன்று குவித்தது. பெண்களை தூக்கிச்சென்று கற்பழித்த நிகழ்வுகளையும் அங்கு நடந்த படுகொலைகளையும் பார்த்த பத்திரிகையாளர்கள், ஆங்கிலேய வீரர்கள் நாஜி வதை முகாம்களை நினைகூர்ந்தனர். கர்ப்பிணியின் முலைகளை அறுத்து வயிற்றை வாளால் பிளந்து குழந்தைகளை வெளியே இழுத்து போட்ட கொடூரங்களும் நடந்தன " என்கிறார் எழுத்தாளர் நிசித் ஹஜாரி.
பிரிவினை சம்பவங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். "எங்கள் கிராமத்தில் வீராவாலி என்ற அக்கா இருந்தார். அவரின் அழகை கிராமமே பேசும். அதுவே அவரின் உயிருக்கு வினையானது. முஸ்லீம்கள் அவரை பிடிக்க துரத்தி வர சீக்கியர்களின் கோவிலில் புகுந்தவர் தப்பிக்க வேறுவழியின்றி பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.' என பழைய நினைவுகளை நடுக்கத்துடன் நினைவு கூர்கிறார் சீக்கியரான சர்தார் ஜோகிந்தர் சிங்.
பிரிவினையின் போது இந்தியா - பாகிஸ்தான் என இருநாட்டினரும் மதவெறி பிடித்த அடிமைகளாக, விடாப்பிடியான மூர்க்கம் கொண்டவர்களாக மாறியிருந்தனர் என்று எழுதினார் உருது எழுத்தாளர் மண்ட்டோ. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற ஆங்கிலேய அரசு தவறிவிட்டது என பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
1941 ஆம் ஆண்டு கராச்சியில் வாழ்ந்த இந்துக்களின் எண்ணிக்கை 47.6%. 1951 ஆம் ஆண்டு இந்துக்களே அங்கு இல்லை. 1951 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்த 2 லட்சம் முஸ்லீம்களை அரசு வெளியேற்றியது.
''அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இன்றும் அமைதிக்கு தயாராகாமல் இருப்பது ஆபத்தான சூழ்நிலை. அமைதி கருத்துக்களுக்கான இடம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. நேரு - ஜின்னா நினைத்திருந்தால் 1947 ஆம் ஆண்டு கிளம்பிய பகையை, வஞ்சத்தை சரிசெய்திருக்கலாம்'' என வருத்தம் தோய்ந்த குரலில் பேசுகிறார் ஹஜாரி.