இளைஞர்கள் வேலையில் எதிர்பார்ப்பது என்ன?
இளைஞர்களின் வேலை ரகசியங்கள்!
இன்ஸ்டாகிராமில் நொடிக்கு நொடி செல்பி போட்டோக்களை
பதிவிடும் உழைப்போ, மெசஞ்சர்களில் வீடியோகாலில் ஆரவாரமாக கொண்டாடும் பர்த்டே பார்ட்டியோ
இன்றைய யூத்களின் அதிரிபுதிரி செயல்பாடுகளுக்கு பெற்றோர் உட்பட உலகில் யாருமே அணைபோட
முடியாது. இதில் அவர்களின் வேலை, ஹாபி, ஆபீஸ் சூழல் என அனைத்துமே உள்ளடங்கும்.
எல்லையில்லாத சுதந்திரம் என்பதையே பல்வேறு
வார்த்தைகளில் விதவிதமான தொனிகளில் எதிரொலிக்கும் யூத் கூட்டம், 9 டூ 10 வேலையை விட
ஷிப்ட் வேலைகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. சுதந்திரமும், பணமும் கிடைக்கும்
கால்டாக்சி(உபர்,ஓலா), உணவு டெலிவரி வேலைகளையும்(ஸ்விக்கி, உபர் ஈட்ஸ்) இன்று இளைஞர்கள்
ஏற்று செய்ய முன்வந்துள்ளது மாறிவரும் வேலைக் கலாசாரத்தின் முக்கிய அறிகுறி.
"காலையில் கிளம்பி மாலை வீடு திரும்பும்
9 டூ 5 வேலை எனக்கு அலர்ஜி. வேலை செய்யும் அனுபவம் அனுதினமும் ப்ரெஷ்ஷாக இருந்தால்
சூப்பர்தானே!" என உற்சாகமாக குரல் கொடுக்கிறார் மேக் மை பெயிண்டிங் நிறுவனத்தைச்
சேர்ந்த ஆதித்யா தங். முதலில் வியட்நாமில் அதிகாரியாக வேலை செய்து வந்தவர் பின்னாளில்
தன் ஆர்வத்தை பின்தொடர்ந்து அவ்வேலையை விட்டு விலகியுள்ளார்.
1960 களில் அமெரிக்காவில் உருவான க்யூபிக்கல்
வடிவிலான அலுவலக செட்டப் கலாசாரம் மெல்ல மறைந்து ஆபீஸ் இறுக்கம் மெல்ல நெகிழ்வாகி வருகிறது.
கோ-வொர்க்கிங் ஸ்டைல், இப்போது பல்வேறு ஐடி நிறுவனங்களிலும் பரவி வருகிறது. சோபாக்கள்,
சின்ன டேபிள்களில் கேஸூவல் உடைகளில் இளைஞர்கள் மினி டீமாக அமர்ந்து கைகளில் காஃபி கப்பும்,
லேப்டாப்புமாக சுதந்திரமாக வேலை செய்து வருகிறார்கள். வணிகம் முழுக்க டிஜிட்டலுக்கு
நகரும் நிலையில் பணம் தரும் வேலை என்பதும் தினசரி செய்யும் டாஸ்க்குகளின் ஒன்று என்பதே
இளைஞர்களின் மில்லினிய எண்ணம். "உணவுக்காக வேலை என்பதை கைவிட்டு மாற்றத்திற்கான
புதிய ட்ரெண்டுகளை உருவாக்கவே இளைஞர்கள் நினைக்கின்றனர்" என சீக்ரெட் ரகசியம்
உடைக்கிறார் ஓயோ ரூம்ஸ் நிறுவனர் ரிதேஷ் அகர்வால். இவரது நிறுவனத்திலுள்ள பணியாளர்களின்
சராசரி வயது 27தான். கம்பெனியோடு சேர்ந்து வளரும் காலாவதியான பிலாசபி இனி எடுபடாது
என்பதற்கு இதுவே சாட்சி.
சுதந்திரம் முக்கியம்!
சம்பளத்தொகை, பதவி உயர்வு உள்ளிட்டவற்றை முந்தைய
தலைமுறை எதிர்பார்த்தால் இன்றைய இளைஞர்கள் கோரசாக சுதந்திரம் என்ற சொல்லையே உச்சரிக்கிறார்கள்.
ஆபீஸ் ஹெச்ஆர்களுக்கு எல்லையில்லாத சுதந்திரம் எப்படி அலர்ஜியோ அப்படித்தான் இவர்களுக்கும்
ஆபீஸ் ரூல்ஸ் என்ற சொல் கசக்கிறது. "ஒரே வேலையில் பல ஆண்டுகளுக்கு உழவோட்டுவது
பலவிஷயங்களை தெரிந்துகொள்வதை தடுப்பதால் இளைஞர்கள் இரண்டு ஆண்டுகள் ஒரே வேலையில் இருந்தால் பெரிதினும்
பெரிது" என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவன பணியாளரான கேசவன் நம்பூதிரி.
இதை உணர்ந்த சாம்சங் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அலுவலக டிசைனை இளைஞர்கள் ரிலாக்சாக
பணியாற்றுவதற்கேற்ப மாற்றியுள்ளனர்.
எளிய அணுகுமுறை
வேலையின்போது கம்பெனியை சடக்கென அப்டேட் செய்யும்
ஐடியாவின் சிறுபொறி தட்டுகிறது. அரசர் கால ஆபீஸ் செட்டப்பில் ஐடியா எப்படி எடுபடும்?
"இன்று சூப்பரோ, சுமாரோ ஐடியாவை கம்பெனி இயக்குநருக்கு சொல்ல இளைஞர்கள் விரும்புகின்றனர்.அதாவது,
ஃபேஸ்புக் நிறுவனத்தின் சூழலைப் போல" என்கிறார் ஆதித்யா தங். அதேசமயம் அனைத்து
பெரும் நிறுவனங்களிலும் இது சாத்தியமா என்ற கேள்வியும் உள்ளது.
புதியதினும் புதுமை தேடு!
இணையத்தில் நொடிக்குநொடி செய்திகள் மாறும்
வேகத்தில் வேலையில் அப்டேட் செய்துகொண்டே இருப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்."வேலையில்
ஒரேவித பிரச்னையை தீர்த்துக்கொண்டிருந்தால் நீங்கள் அதில் எதையும் தெரிந்துகொள்ளவில்லை
என்று அர்த்தம்" என்கிறார் பெங்களூரிலுள்ள சாம்சங் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவைச்
சேர்ந்த தனுஷ் வினய். முழுநேர வேலை என்பது கற்பதற்கு தடை என்பதை சிலமாதங்களிலேயே உணர்ந்த
பல கிரியேட்டிவ் இளசுகள் ப்ரீலான்சர்களாக மாறி பாக்கெட் முழுக்க காசுடன் கடலளவு அறிவையும்
சேகரிக்க துணிந்திருக்கிறார்கள்.
நெளிவு சுளிவான வேலை நேரம், சவாலான பணிகள்,
கிரியேட்டிவான ஐடியாக்களுக்கு அங்கீகாரம் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பு. இவ்வாண்டு
பேபால் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 40 வயதுக்குட்ப்பட்ட ப்ரீலான்சர்களின்
எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதேசமயம் உடன்பணிபுரிபவர்களின்
புரமோஷன்களின் விவரங்கள் சமூகவலைதளப்பதிவு மூலம் லீக்காக, அது ஏற்படுத்தும் மன அழுத்தம்,விரக்தி
குறித்து இளைஞர்கள் சற்று கவனமாக இருப்பது அவர்களின் எதிர்காலத்தை உடையாமல் காப்பாற்றும்.
மில்லினிய இளைஞர்கள்!
1981-1996 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்கள் இந்த
வகையில் வருவார்கள் என்கிறது Pew நிறுவன ஆராய்ச்சி முடிவுகள். உலகிலேயே அதிகளவு இப்பிரிவில்
பிறந்த இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா.