கட்டற்ற அறிவு 5: காப்பிரைட் கொள்ளை


கட்டற்ற அறிவு –- வின்சென்ட் காபோ

5

Image result for copyright



காப்பிரைட் கொள்ளை!

லினக்ஸில் கட்டற்ற மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து வருவது, அதில் வரும் பிரச்னைகளை தீர்ப்பது ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிப்பது அந்த மென்பொருள் குழுக்களுக்கு முக்கியமான வருவாய் வழி. இலவச மென்பொருள் என்ற வார்த்தை அதனை உணர்த்தவில்லை. எனவே கட்டற்ற பொருத்தமான வார்த்தையாக மாறியது.   

சுதந்திரம் முக்கியம்!

1984 ஆம் ஆண்டு ஸ்டால்மன் எம்ஐடியிலிருந்து விலகுவதற்கான காரணம்? “நான் அங்கிருந்து ப்ரீ மென்பொருட்களை கண்டுபிடித்தாலும் அதனை அந்நிறுவனம் தன்னுடையது என கட்டுப்படுத்த முயற்சிக்கும் என்பதால் பதவி விலகினேன்” என தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் ஸ்டால்மன்.
கட்டற்ற மென்பொருள் வழங்குவதில் முக்கியமான சொல் காப்புரிமை. பொதுவாக காப்புரிமை ஒருவரின் தயாரிப்பை, கண்டுபிடிப்பை அனுமதியின்றி/கட்டணமின்றி பிறர் பயன்படுத்துவதை தடை செய்கிறது. இச்சட்டத்தின் முக்கிய பயன், வணிகம்.

காப்பிரைட் களவு!

மருந்துவத்துறையில் அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் மருந்து நிறுவனங்கள் அதனை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே விற்கமுடியும். அதன்பின்னர் அதனை உலகிலுள்ள எந்த நிறுவனங்களும் தயாரித்து மக்களுக்கு விற்கலாம் எனும்படி காப்புரிமை மாறிவிடும்.  மக்களின் உயிர்காப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு இது. மென்பொருள் துறையில் அப்படியல்ல; மக்களுக்கு மிக அத்தியாவசியமான மென்பொருள் என்றாலும் அதனை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தவேண்டும் என்பது மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களின் எண்ணம். அரசுகளின் காப்பிரைட் சட்டங்களும் இதனை வழிமொழிகின்றன.

பகிர்ந்தால் தவறு!

இன்று அனைத்து கணினிகளும் இணைய இணைப்பு இன்றி கணினியில் ஓஎஸ்ஸை இன்ஸ்டால் செய்ய முடியாது. இதன்மூலம் திருட்டு பதிப்புகளை தவிர்க்கலாம் என்பது மென்பொருள் நிறுவனங்களின் கணிப்பு. இதற்கும் டேக்கா கொடுப்பது டெக் மூளைகளின் திறமை. காசு கொடுத்து வாங்கிய ஓஎஸ் அல்லது பிற மென்பொருட்களை உங்கள் நண்பருக்கு வழங்கினால் காப்புரிமை சட்டப்படி உங்களை கைது செய்து சிறையில் அடைக்கமுடியும் என்றால் நம்புவீர்களா?

மென்பொருள் துறையில் காப்பிரைட் என்பதற்கு மாற்றாக காப்பிலெஃப்ட் என்ற வார்த்தையை ஸ்டால்மன் பயன்படுத்துகிறார். இவர் எழுதும் மென்பொருட்களை GPL உரிமத்தின் கீழ் ஃப்ரீ சாஃப்ட்வேர் பவுண்டேஷன் மூலம் வெளியிட்டு தனது முயற்சிக்கு நிதி சேகரிக்கிறார்.