தலித் இளைஞர்கள் முன்புபோல இல்லை! - மிலிந்த் காம்ப்ளே
நேர்காணல்
“தலித் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை மீது கவனமுடன் உள்ளனர்”மிலிந்த் காம்ப்ளே, தலித் வணிக அமைப்பு தலைவர்.
தமிழில்: ச.அன்பரசு
அண்மையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் தலித் சென்ற சொல்லுக்கு
பதிலாக பட்டியல் இனம் என்பதை பயன்படுத்த ஊடங்களை அறிவுறுத்தியுள்ளது. இதுபற்றி தங்கள்
கருத்து?
தலித் வர்த்தக அமைப்பு(Dalit Indian Chamber of Commerce and
Industry (DICCI)) என்ற பெயரிலுள்ள தலித் என்ற சொல்லை
மாற்றும் அவசியம் எங்களுக்கு கிடையாது. அரசு உத்தரவை மதிக்கிறேன்; ஆனால் தலித் வார்த்தையை
பயன்படுத்தும் சுதந்திரம் தனிப்பட்டவர்கள் அனைவருக்கும் உண்டு. தலித் என்ற சொல் விளிம்புநிலை
மக்களை நேரடியாக குறிப்பது. இதனை அவ்வளவு எளிதில் கைவிட்டுவிட முடியாது.
இன்று தலித்துகள் தம் உரிமைகளுக்காக போராட்டம், வன்முறை என களமிறங்கியுள்ளனர்.
இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
தலித்துகள் மற்றும் பழங்குடிகளின்
வன்முறை போராட்டம் என்று நீங்கள் கூறுவது 5 சதவிகிதத்திற்கும் குறைவு. ஆனால் பல்லாண்டுகளாக
தலித்துகள் மீது பிற சமூகத்தினர் செலுத்தும் தீண்டாமை, புறக்கணிப்பு ஆகியவற்றின் வெளிப்பாடே
அப்போராட்டங்கள். உண்மையில் தலித் மற்றும் பழங்குடிகளின் நிஜகதை இப்போராட்டங்களில்
வெளிப்படவில்லை என்பதே எனது கருத்து.
அரசியல் சமநிலையின்மை என்பது தலித்துகளின் வேலைவாய்ப்பில் பாதிப்பு
ஏற்படுத்துவதாக நினைக்கிறீர்களா?
இல்லை. தலித் வணிக அமைப்பின் தலைவராக
தலித்துகளுக்கு இன்றைய சூழலில் நிறைய வணிகவாய்ப்புகள் உள்ளன. அரசியல் பாதிப்பு உள்ளது
என சிலர் கூறுவதற்கு காரணம், அவர்கள் இன்னும் தொன்மைக்காலத்திலேயே உறைந்து நிற்கிறார்கள்
என்பதால்தான். இன்றைய தலித் இளைஞர்கள் தம்முடைய வேலைவாய்ப்பை திட்டமிட்டு அமைத்து வருகின்றனர்.
அரசியல்வாதிகளின் பின்னால் இயங்கி வன்முறையான வாழ்க்கை தேர்வை லட்சியமாக செயல்பட்டு
வந்த காலம் பின்னகர்ந்துவிட்டது.
தலித் வணிக அமைப்பின் லட்சியம் என்ன?
எஸ்சி/எஸ்டி இனத்தவர்களை தொழில்துறையில்
முன்னேற்றுவதே எங்கள் அமைப்பின் நோக்கம். இன்று தொழில்துறையில் எஸ்சி/எஸ்டியினரின்
பங்கு 3.5 கோடியாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இதன் அளவு 5 கோடியாக உயரும். இன்று தலித் தொழில்முனைவோரின் வணிக
மதிப்பு ஆண்டுக்கு நூறு கோடியாக வளர்ந்துள்ளது. தலித் வணிக அமைப்பு அமெரிக்கா, இங்கிலாந்து,
அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென்
ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.
நீங்கள் கூறும் தலித் முன்னேற்றத்திற்கான கள சாட்சிகளை பார்க்க
முடியவில்லையே?
முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம்
2.75 கோடி எஸ்சி/எஸ்டி மக்கள் வங்கிக்கடன் பெற்று பயனடைந்துள்ளனர். மகாராஷ்டிராவிலுள்ள
ராய்காட் மாவட்டத்தில் 500 இளைஞர்கள் தலித் வணிக அமைப்பில் இணைந்துள்ளனர். பொருளாதார
முன்னேற்றத்தில் இன்றைய தலித் இளைஞர்கள் ஆர்வமாக உள்ளதற்கு வேறென்ன சாட்சி வேண்டும்?
மார்க்ஸ் அல்லது மனு பற்றி பேசுவதை விட தலித் தொழில்முனைவோர்கள் தம் தொழில் பல்வேறு
சாதியினருக்கு வேலைவாய்ப்பளிப்பது சமூகத்தில் முக்கிய தாக்கம் ஏற்படுத்தும் என நான்
நம்புகிறேன். சாதியை வெல்ல சித்தாந்தம் தாண்டி களத்தில் சாதிக்கவேண்டியது அவசியம்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தை
எப்படி பார்க்கிறீர்கள்?
ஒரு சீட்டுக்கு நூறு பேர் போட்டியிட்டால்
ஒருவர் வெல்கிறார். மீதிப்பேரின் நிலை என்ன? தொழில் மூலம் பெறும் பொருளாதார சுதந்திரம்
வேறுபாடுகளை களையும்.