ஊட்டச்சத்துக்குறைவால் தவிக்கும் இந்தியா!


ஊட்டச்சத்துக்குறைவால் தடுமாறும் குழந்தைகள்! - புதிய இந்தியாவின் மறுபக்கம் 



Image result for undernutrition



தியேட்டரில் பாடும் தேசியகீதத்திற்கான மரியாதையை விட பள்ளிகளின் பிரேயரில் ரத்தசோகையால் மயங்கி விழும் மாணவிகளின் உடல்நலனில் இந்திய அரசு அக்கறை காட்டவேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. நவ.4 அன்று வெளியாகியுள்ள குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட் 2017.

ஐந்து வயதுக்குட்பட்ட 38% குழந்தைகளும், அதில் 21% குழந்தைகள் உயரத்திற்கேற்ப எடையின்றி தவிப்பதாக பொட்டில் அறையும் நிஜத்தை கூறுகிறது ஊட்டச்சத்து அறிக்கை. இதில் 6-59 மாதக்குழந்தைகளில் 58.4% பேருக்கு ரத்தசோகை பிரச்னையும் உண்டு என்பது ஷாக் தகவல். மக்கள்தொகையில் 6 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் விகிதம் 13.6%. ஊட்டச்சத்துக்குறைவு அச்சுறுத்தலை 2022க்குள் ஒழித்துவிட நிதி ஆயோக், குடும்பநல அமைச்சகம் பிளான் செய்து செயல்பட்டு வருவதால் பலன்களை இனிமேல்தான் அறியமுடியும்.

நாட்டிலுள்ள 14 லட்சம் அங்கன்வாடிகளிலும் இதுவரை  கர்ப்பிணி தாய்களின் வீடுதேடி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கிவந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. கடும் சர்ச்சை கிளம்பிய தனது செயல்பாட்டுக்கு, அங்கன்வாடிகளின் சர்வீஸ் திருப்தியில்லை என காரணம் சொல்லும் அரசு, வரும் ஏப்ரல் 2018 முதல் அப்பொருளுக்கான தொகையை வங்கிக்கணக்கு மூலம் பயனாளிகளுக்கு வழங்கவிருக்கிறது. "அங்கன்வாடிகளின் மூலம் வழங்கப்படும் ஊட்டச்சத்துப்பொருட்கள் குழந்தைகள் அல்லது கர்ப்பிணிப்பெண்களின் வயிற்றை வெறுமனே நிரப்புவதற்கு மட்டுமானதல்ல" என்கிறார் குடும்பநல அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர்.

நகரம்,கிராமம் என நாடெங்கும் நிறைந்துள்ள அங்கன்வாடிகளின் மூலமாக நடந்து வந்த ஊட்டச்சத்துப்பொருட்களின் சேவையில் என்ன பிரச்னை? காகிதத்தில் திட்டங்கள் சரியாக இருந்தாலும், பல்வேறு கலாசார வேறுபாடுகள் கொண்ட மாநிலங்களில் அவற்றை செயல்படுத்தும் முறையில் தேங்கிப்போவதே அதிகம்." பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் ஊட்டச்சத்து திட்டங்களில் தேக்கமும் தொய்வும் உள்ளது. திட்டத்தை முறையாக பரவலாக்குவதிலேயே அதன் வீச்சும் பயனும் மக்களுக்கு கிடைக்கும்" என உறுதியான குரலில் பேசும் பூர்ணிமா மேனன், குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட் குழுவில் பணிபுரிந்தவரும், உலக உணவுக்கொள்கை கழகத்தின் ஆராய்ச்சியாளருமாவார்.

டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களின் ஊட்டச்சத்து திட்டங்களில் மத்திய அரசின் முனைப்பு தாண்டிய மாநிலங்களின் ஆர்வம் அதனை மேம்படுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றனர் சுகாதார வல்லுநர்கள். "அரசின் திட்டங்களை மக்கள் பெறுவதில் அடிப்படை கட்டமைப்பு, சமூக கலாசாரம், வளர்ச்சி ஆகியவற்றின் பங்கு அதிகம். இதில் கேரளா,உத்தரப்பிரதேசம் இரண்டும் எதிரெதிர் உதாரணங்கள்" என பளிச்சென நிஜம் பேசுகிறார் நியூட்ரிஷன் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பிரேமா ராமச்சந்திரன்.
மாணவர்களின் ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்யும் விதமாக, தினசரி உணவை கிச்சடி,உப்புமா போன்ற வகையில் தருவதற்கான ஐடியாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. உணவு வகைகளை மாநில அரசே செலக்ட் செய்துகொள்ளலாம். இதில் உணவு சாஷேக்களின் மேல் பிரிண்ட் செய்துள்ள பார்கோடுகளின் மூலம் அதனை கண்காணிக்க முடியும் என்பது இத்திட்டத்தின் ஸ்பெஷல். "இமாச்சல பிரதேசம்,தமிழ்நாடு,கேரளா ஆகிய மாநிலங்கள் ஊட்டச்சத்தான உணவுகளை வழங்குவதில் தங்களின் கிரியேட்டிவிட்டியை புகுத்தி வெற்றிகண்டுள்ளன. ஒடிஷாவில் வாரம் இருமுறை முட்டை, தமிழ்நாட்டின் வழங்கப்படும் வேகவைத்த பாசிப்பருப்பு ஆகியவை இதற்கு முன்னுதாரணம்" என்கிறார் ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளரான ரித்திகா கெரா.

6-36 மாத குழந்தைகளுக்கு 500 கலோரி உணவும்(15கிராம் புரதம்), ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு 800 கலோரி உணவும்(25கிராம் புரதம்) தேவை என ஊட்டச்சத்து உணவு தேவையை உலக சுகாதார அமைப்பு(WHO) வலியுறுத்துகிறது. இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து ICDS,NRHM ஆகிய இரு அமைப்புகளின் வழியே பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு, ஊட்டச்சத்துக்குறைபாட்டை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2013 ஆம் ஆண்டு அனீமியா குறைபாட்டுக்காக ஃபோலிக், இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குமாறு (RMNCH+A) திட்டம் உருவாக்கப்பட்டது. உணவுப்பாதுகாப்பு சட்டப்படி, ஆதார் அட்டையில் பயனர்களை இணைப்பது, ஊட்டச்சத்து பிரச்னையை கிராமப்புறங்களில் இன்னும் தீவிரமாக்கியுள்ளது.  

தேசிய குடும்பநல சர்வே(3)யின்படி, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிப்புக்கு கல்வியறிவற்ற தாய்மார்களே(55%) முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது. "ஊட்டச்சத்து குறைவும், பெண்கல்வியும் பிரச்னையில் ஆணிவேராக உள்ளது. தாய்ப்பால் தருவது பற்றிய விழிப்புணர்வு என பல்வேறு விஷயங்கள் இதில் ஊடுபாவாய் பின்னியுள்ளன. எனவே பெண்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அரசு அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே ஊட்டச்சத்து லட்சியத்தை அடையலாம்" என தெம்பாய் பேசுகிறார் மான்செஸ்டர் பல்கலையின் உலக மேம்பாட்டு கழகத்தினைச் சேர்ந்த பேராசிரியர் ராகவ் கெய்கா.

நிலைமை என்ன?

குழந்தைகளின் ரத்தசோகை பிரச்னை - 58.4%(6-59 மாதங்கள்)
பெண்களுக்கு ரத்தசோகை பாதிப்பு- 51%
வறுமையால் ஊட்டச்சத்துக்குறைவு - 2011(21.1%), 2009(31.1%)     

NRHM

கிராமப்புற மக்களின் நலனைப் பேண ஏப்.12 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு National Rural Health Mission (NRHM) . முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கால் தொடங்கிவைக்கப்பட்டு ஆரோக்கியத்தில் பின்தங்கிய 18 மாநிலங்களில் பல்வேறு மருத்துவத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சல பிரதேசம் ஆகியவை ஸ்பெஷல் கவனம் பெற்றன. இதில் NUHM எனும் நகர்ப்புற தொற்றா நோய்களுக்கான தடுப்பு திட்டமும் உள்ளடங்கும்.



ICDS

தொடக்க கல்வி, தொடக்க கல்வி,குழந்தைகள் மற்றும் தாய்களின் சுகாதாரம்(6வயது) ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாயால் இடைநிறுத்தப்பட்டு பின்னர் 10 ஆம் ஐந்தாம் ஆண்டில் மீண்டும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்பட்டு உயிர்பெற்றது. 2012-13 காலகட்டத்தில் மட்டும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைவை போக்க இந்த அமைப்புக்கு ஒதுக்கப்பட்டது.159 பில்லியன் டாலர்கள்.


- ச.அன்பரசு