அமைதிக்கான நோபல் பரிசு! - சர்ச்சை பரிசு!


அமைதிக்கான நோபல் பரிசு 2018!


நோபலின் அமைதி பரிசுக்கு இவ்வாண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 331. 2016 ஆம் ஆண்டிலிருந்து நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் லிஸ்ட்டில் இது அதிக நபர்கள் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 

1901-2017 வரை நோபல் பரிசு 27 அமைப்புகளைச் சேர்ந்த 104 பேர்களுக்கு 98 முறை வழங்கப்பட்டுள்ளது. அமைதிக்காக நோபல் பரிசுக்கு இந்தியாவின் எம்கே காந்தி ஐந்துமுறை பரிந்துரைக்கப்பட்டும் விருது கிடைக்கவில்லை.

அமைதிக்கான நோபல் பரிசு காங்கோலிஸ் மருத்துவர் டெனிஸ் முக்வேஜ், இராக்கைச் சேர்ந்த நாடியா முராத் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
63 வயதான மருத்துவர் டெனிஸ் காங்கோவின் கிழக்கு பகுதியில் வல்லுறவு,போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர்களுக்கு செய்த சிகிச்சையின் விளைவாக அமைதி பரிசு பெற்றிருக்கிறார். “நான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு, உலகமெங்கும் பாலியல் வல்லுறவு, தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு நீதி கிடைக்காத பெண்களின் பிரச்னைகளை கவனப்படுத்தும் என நம்புகிறேன்” என்கிறார் மருத்துவர் டெனிஸ் முக்வேஜ் என்கிற டாக்டர் மிராக்கிள்.

இராக்கின் சின்ஜார் பகுதியைச் சேர்ந்த நாடியா முராத், ஐஎஸ் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு செக்ஸ் அடிமையாக நடத்தப்பட்டார். பின்னர் வெளியான தி லாஸ்ட் கேர்ள் என்ற தனது சுயசரிதையில் தீவிரவாதிகளால் அவரது குடும்பம் அழிந்து அவரது வாழ்க்கை செக்ஸ் அடிமையாக சிதைக்கப்பட்டதையும் அதிலிருந்து அவர் மீண்டதையும் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியில் வசிக்கும் போரின் கொடும் விளைவுகளை உலகிற்கு கூறி நோபல் அமைதி பரிசைப்பெறும் முதல் இராக்கியர்.

1994 ஆம் ஆண்டு பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், இஸ்‌ரேலிய பிரதமர் யிட்ஸாக் ராபின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிமோன் பெரஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பாலஸ்தீனம்-இஸ்‌ரேல் இடையே அமைதியை ஏற்படுத்தவில்லை என நோபல் கமிட்டி கடும் விமர்சனங்களை பின்னாளில் எதிர்கொண்டது.

2009 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற ஒன்பது மாதங்களிலேயே அமைதிக்கான நோபலை பெற்றது பலராலும் ஜீரணிக்க முடியாததாகவே இன்றும் உள்ளது. அதேபோல உலகின் மிகப்பெரும் ஆயுத தயாரிப்பாளரான ஐரோப்பிய யூனியனுக்கு 2012 ஆம் ஆண்டு நோபல் பரிசு, மனித உரிமை மற்றும் அமைதிக்கு பாடுபட்டதற்காக என்று கூறி வழங்கப்பட்டதும் தவறான தேர்வு என ஊடகங்கள் விமர்சித்தன.