பசியை ஒழிக்கப்போராடும் இந்தியர்!
ஏழைகளுக்கு அமுதூட்டிய
கரங்களுக்கு இங்கிலாந்தில் விருது!
அந்த பன்னாட்டு நிறுவனத்தின் இயக்குநருக்கு பெரிய
அதிர்ச்சி. வேலைக்கு சேர்ந்து சில மாதங்களிலேயே நான் பணிவிலகுகிறேன் என்று கூறி, தன்முன்னே
வந்து நின்ற இளைஞரை கூர்ந்து பார்த்தார். 22 வயதான இளைஞர் தெளிவாக, தான் செல்லவேண்டிய
பாதையை கிறிஸ்டல் கிளியராக செலக்ட் செய்துவிட்டார். தைரியமாக வெளியே வந்து 2014 ஆம்
ஆண்டு ஃபீடிங் இந்தியா என்ற என்ஜிஓ அமைப்பை தன் நண்பர்களுடன் இணைந்து தொடங்கி நிற்க
நேரமின்றி பசியில் தவிக்கும் மக்களுக்கு இன்றுவரை 85 லட்சம் டன்கள் உணவுகளை வழங்கி
பசிப்பிணி தீர்த்திருப்பது சாதனைதானே! அந்த இளம் தலைவனின் பெயர்தான் அங்கித் கவாத்ரா.
விருது தந்த ராணி!
பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக்குறைவால் தவிக்கும்
இந்தியாவில் ஒருவேளை உணவின்றி தவிக்கும் லட்சம் உயிர்களுண்டு. அசராமல் ஏழைகளுக்கு உணவளித்த
அசாதாரண உழைப்பு பிளஸ் அர்ப்பணிப்பு பணிக்குத்தான் இங்கிலாந்தின் குயின் யங் லீடர்
2017 விருது அங்கித் கவாத்ராவின் கைவசமாகியிருக்கிறது. கடந்த ஜூன் 29,2017 அன்று லண்டனின்
பக்கிங்காம் பேலஸில் நடைபெற்ற விழாவில் 25 வயதான அங்கித் கவாத்ராவின் ஃபீடிங் இந்தியா
தன்னார்வ அமைப்பின் பணிகளைப் பாராட்டி இங்கிலாந்து ராணியே தன் கரங்களால் விருது வழங்கி
கௌரவித்துள்ளார்.
"பக்கிங்காம் பேலஸில் ராணியின் கையிலிருந்து
விருது பெற்றது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத பெரும் அங்கீகாரம்" என நெஞ்சம்
நெகிழ்கிறார் சமூக செயல்பாட்டாளரான அங்கித் கவாத்ரா.
அமுதூட்டிய கரங்கள்!
கைநிறைய காசு தந்த வேலையை விட்டதற்கும், ஏழைமக்களின்
பசியைத் தீர்க்க அர்ப்பணிப்பாக அங்கித் உழைக்கத்தொடங்கியதற்கும் காரணம், ஓர் சிறிய
நிகழ்வுதான். "நான் அப்போது உலகளவில் தொழில்நிறுவனங்களுக்கு பொருளாதார ஐடியாக்களைக்
கூறும் நிறுவனத்தில் பணியிலிருந்தேன். அப்போது நடைபெற்ற பிரபலத்தின் திருமணத்திற்கு சென்றபோது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்
வந்திருந்தனர். 35 உணவு வகைகள் பரிமாறப்பட்ட அந்த மெகா விழாவில் மிஞ்சிய உணவை சமையல்
ஏற்பாட்டாளர்கள் அப்படியே எடுத்து குப்பையில் கொட்டியதைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன்.
5 ஆயிரம் நபர்கள் சாப்பிடக்கூடிய உணவை குப்பையில் கொட்டினால் எப்படி? என்னால் வெகுநாட்கள்
உணவு வீணடிக்கப்பட்ட அக்காட்சியை மறக்கவே முடியவில்லை.
ஃபீடிங் இந்தியா தொடங்குவதற்கும் இந்நிகழ்வு முக்கியக்காரணம்" என திருத்தமாக பேசுகிறார்
அங்கித் கவாத்ரா.
டெல்லியின் கிரேட்டர் கைலாஷில் ஐந்து உறுப்பினர்களோடு
தொடங்கப்பட்ட ஃபீடிங் இந்தியா அமைப்பு இன்று இந்தியாவில் 43 நகரங்களில் 4,500 தன்னார்வலர்களின்
பங்களிப்போடு பசியில் தவிக்கும் தவிக்கும் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்
ஆகியோருக்கு அமுதூட்டுகிறது. "உண்மையில் மக்கள் பலரும் வறுமை பற்றி நிறைய பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையான பிரச்னையை அடையாளம் கண்டு தீர்வு கண்டறிவது மிகச்சிலர்தான். திருமணங்கள்
உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவுகள் குறித்து முன்னமே அறிந்ததால் அதை அவர்களிடம்
பெற்று எளியவர்களுக்கு உதவ முடிகிறது" என புன்னகையோடு பேசுகிறார் அங்கித் கவாத்ரா.
ஃபீடிங் இந்தியா உணவுவகைகளை பதப்படுத்தும் குளிர்சாதன
வசதி கொண்ட மேக்ஸி ட்ரக் வாகனத்தின் மூலம் 24X7 என டெல்லியில் வார நாட்கள் முழுவதும்
பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று மீதமாகும் உணவை முழுக்க சேகரித்து எளிய மக்களுக்கு வழங்குகின்றனர்.
"எங்களுடையது வணிக குடும்பம். நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டு நிற்பதென்றால்
யாருக்குத்தான் ஷாக் ஆகாது? வேலையை விட்டு விலகியதும் நான் என்ன செய்யப்போகிறேன் என்று
பெற்றோரிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் நான் கூறிய ஃபீடிங் இந்தியா ஐடியாவை அவர்கள்
உடனே ஏற்றுக்கொண்டது ஆச்சர்யம்தான். மக்களிடம் பேசி மீதமாகும் உணவை பெறுவது முதலில்
சவால்தான் எனினும் விரைவிலேயே அதிலும் நிறைய கற்றுக்கொண்டு பாஸ் ஆகிவிட்டேன். "
என தன் நிறுவனத்தின் அனுபவங்களை நம்மிடம் கூறுகிறார் அங்கித் கவாத்ரா.
உலகின் பிரச்னைகளுக்கான ஐடியாக்களைக் கண்டறியும்
ஐக்கிய நாடுகளின் இளம் தலைவர்கள் போட்டியில் 186 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட 18 ஆயிரம்
பேரில் இறுதிப்பட்டியலுக்கு தேர்வான 17 நபர்களில் அங்கித் கவாத்ராவும் ஒருவர். ஃபோர்ப்ஸ்
30 Under 30 Honoree என்ற பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார் இந்த பொதுநல தொண்டர். "இந்தியாவில் உணவு பாதுகாப்பு
குறித்த விழிப்புணர்வு மினிமம்தான். மக்கள்தொகை கிடுகிடுவென அதிகரித்துவரும் நிலையில்
உணவை சரியான முறையில் பயன்படுத்த கற்கவில்லையெனில் காலம் கடந்துவிடும். இந்தியாவில்
பட்டினி கிடப்பவர்களின் அளவு வங்காளதேசத்தை விட அதிகம். ஆப்பிரிக்கா நாடு பட்டினி,
ஊட்டசத்து குறைவில் நமக்கு முன் நிற்கிறார்கள். உணவை வீணாக்காமல் இருந்தாலே மக்கள்
பசியை தீர்க்க முடியும்" என கண்கள் விரிய பேசுகிறார் அங்கித் கவாத்ரா. 2020 ஆண்டில்
100 மில்லியன் உணவுகளை மக்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில்
பள்ளி குழந்தைகளுக்கு உணவு விநியோகிக்கும் திட்டத்திற்காக உழைத்து வருகிறார் அங்கித்
கவாத்ரா. "என்னுடைய கார்ப்பரேட் பணியில் தொடர்ந்திருந்தால் அந்நிறுவனத்தின் சிஇஓ
ஆகியிருப்பேன். ஆனால் மக்களுக்காக நான் எடுத்த முடிவு என் வாழ்வை இன்று அர்த்தமுள்ளதாக்கியுள்ளது.
உணவு பிரச்னைகளைத் தீர்க்க நாம் இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகம்." என தூறலாய்
தெறிக்கும் நம்பிக்கையோடு பேசுகிறார் இந்தியாவின் உணவு மனிதர் அங்கித் கவாத்ரா. அமுது
மனிதர்!
குயின் யங் லீடர் விருது!
2014 ஆம் ஆண்டு குயின் எலிசபெத் டயமண்ட் ஜூப்ளி
அறக்கட்டளை, காமன்வெல்த் அறக்கட்டளை மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து
உருவாக்கிய விருது இது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 53 காமன்வெல்த் நாடுகளிலிருந்து 60
இளைஞர்களை(18-29 வயது) தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சமூகத்தை மேம்படுத்தி மாற்றங்களை
ஏற்படுத்துவதற்கான, பிரச்னைகளை தீர்ப்பதற்கான பல்வேறு தொழில் பயிற்சிகளையும் வாய்ப்புகளையும்
முழுதாக 1 ஆண்டு அளிப்பதே இந்த விருதின் லட்சியம். சுற்றுச்சூழல், சமூகம், பாலின சமநிலை,
கல்வி, உணவு வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் மாற்றங்களை சாத்தியப்படுத்திய இளைஞர்களுக்கு
இங்கிலாந்து ராணி நேரடியாக தன் கையாலேயே பரிசளிப்பது இவ்விருதின் சூப்பர் ஸ்பெஷல்.
ஃபீடிங் இந்தியா ஆக்ஷன் பிளான்!
45 நகரங்களிலுள்ள தன்னார்வலர்கள் - 4,500
விநியோகித்துள்ள உணவு - 85 லட்சம்
சேமித்த தொகை - 4,25,00,000 ரூபாய்
உணவு தானம் அளிப்பவர், ஃபீடிங் இந்தியா ஆப்பில்
தகவல் அனுப்பினால், அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர் அதனை சோதித்துப் பெற்று தான மையத்தில்
ஓப்படைப்பார். அங்கிருந்து தேவைப்படுபவர்களுக்கு உணவு உடனே அனுப்பப்படும். ஃபீடிங்
இந்தியாவின் 90% தன்னார்வலர்களின் வயது 19-23.
உலகெங்கும் வீணாகும் உணவு -1.3 பில்லியன் டன்கள்(45%பழங்கள்,35%
மீன்கள்,30% தானியங்கள், 20% பால் பொருட்கள்,20% இறைச்சி)
டாப் 5 உணவு விரய நாடுகள் - அமெரிக்கா(290கி.கி),ஐரோப்பா(276கி.கி),கிழக்கு
ஆசியா(240கி.கி), லத்தீன் அமெரிக்கா(224கி.கி), வடக்கு ஆப்பிரிக்கா(208 கி.கி.)
பட்டினி மக்களின் அளவு -795 மில்லியன்
வீணாக்கப்படும் உணவு மதிப்பு - 3 ட்ரில்லியன் டாலர்கள்.
குளோபல் ஹங்கர் இன்டெக்ஸில் இந்தியா -97வது இடம்(28.5-அபாய
அளவு)
(The
Food and Agriculture Organization of the United Nations (FAO)
2015, theatlantic.com, businessinsider.com http://ghi.ifpri.org
2016 தகவல்படி)
- ச.அன்பரசு